நடிகர் ரஜினிகாந்த் நேற்று பெங்களூரு சென்றுவிட்டு சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள்  7 பேரின் விடுதலையில் உங்கள் நிலைப்பாடு என்ன? என்று கேட்டனர். அதற்கு ரஜினி, “எந்த 7 பேர்?. எனக்குதெரியாது. நான் இப்போதுதான் வந்துள்ளேன்” என்று பதில் அளித்தார்.

மேலும் பா.ஜனதா ஆபத்தான கட்சியா? என்றகேள்விக்கும், பணம் மதிப்பிழப்பு தொடர்பான கேள்விக்கும் ரஜினி பதில்அளித்தார். அவர் அளித்த பதில்கள் கடும் விமர்சனத்தை உருவாக்கியது.

இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வகையில், இன்று பகல் 11.30 மணியளவில் போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர்கூறியதாவது:-

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேரையும் பற்றி ரஜினிகாந்துக்கு எதுவும் தெரியாது என்பது போன்ற ஒருமாயையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு தெரியும் என்றால் தெரியும் என்பேன். தெரியாது என்றால் தெரியாது என்பேன். இதில்வெட்கப்பட என்ன இருக்கிறது.

கேட்டகேள்வி தெளிவாக இல்லை. கொஞ்சம் தெளிவாக கேட்டிருக்க வேண்டும். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் விடுதலை பற்றி தமிழக அரசு கொடுத்துள்ள மனு என்று கேட்டிருந்தால் எனக்குதெளிவாக புரிந்திருக்கும்.

எடுத்த எடுப்பிலேயே 7 பேர்விடுதலை பற்றி என்று கேட்டால் எந்த 7 பேர் என்று கேட்பது இயற்கைதானே. அதற்காக அந்த 7 பேரையும் பற்றி தெரியாத அளவுக்கு இந்த ரஜினிகாந்த் முட்டாள் அல்ல. பேரறிவாளன் பரோலில் வந்திருந்த போது 10 நிமிடம் போனில்பேசி அவருக்கு ஆறுதல் சொன்னவன் இந்த ரஜினிகாந்த்.

இந்த வழக்கை பொறுத்தமட்டில் பலகட்டங்களில், பல இடங்களுக்கும் சென்றுள்ளது. சுப்ரீம்கோர்ட், ஜனாதிபதி என்று பலஇடங்களுக்கு சென்று வந்துள்ளது. இப்போதும் தமிழக அரசு அந்த மனுவை கவர்னருக்கு அனுப்பி உள்ளது. கவர்னர் முடிவு எடுக்கவேண்டும்.

அவர்கள் 27 ஆண்டுகள் தண்டனை அனுபவித்துள்ளார்கள். மனிதாபிமான முறையில் அவர்களை விடுதலை செய்வது தான் நல்லது. இது என்னுடைய கருத்து.

அப்புறம் இன்னொன்று எல்லா கட்சிகளும் ஒன்றுசேர்ந்து பாஜக-வை தோற்கடிக்க முயற்சிக்கிறார்களே? அது ஆபத்தான கட்சியா என்று கேட்டார்கள். என்னுடைய பதில் எதிர் கட்சிகள் அப்படி நினைக்கின்றன. எதிர்கட்சிகள் அப்படி நினைக்கும் போது பாஜக அவர்களுக்கு ஆபத்தான கட்சிதானே. அது மக்களுக்கு ஆபத்தான கட்சியா? இல்லையா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

பாஜக ஆபத்தான கட்சியா? இல்லையா? என்பது பற்றி ரஜினியின் கருத்து என்ன என்று நீங்கள் கேட்கிறீர்கள். என்கருத்தை இப்போது சொல்லமுடியாது. ஏனென்றால் நான் இன்னும் முழு அரசியலில் இறங்கவில்லை.

பாஜக-விற்கு எதிரான மிகப்பெரிய எதிர்ப்பு பற்றி கேட்கிறீர்கள்.10 பேர்சேர்ந்து ஒருவரை (மோடி) எதிர்த்தால் அந்த 10 பேரும் பலசாலியா? 10 பேரை எதிர்த்துபோராடும் அந்த ஒருவர் பலசாலியா? என்பதை நீங்கள் முடிவுசெய்து கொள்ளுங்கள். இதைவிட தெளிவாக எப்படி சொல்வது.

பா.ஜனதாவுடன் கூட்டணியா என்பதையெல்லாம் அப்போது பார்த்துக்கொள்ளலாம். மோடி மிகப்பெரிய பலசாலியா என்பது 2019 தேர்தலில் தெரிந்துவிடப் போகிறது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடிகர்களுக்கு குளிர்விட்டு போனதென்று அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். அவர்களெல்லாம் பெரியபதவியில் இருப்பவர்கள். கொஞ்சம் யோசித்து கருத்துக்களை சொல்லவேண்டும்.

இப்போ அதே கேள்வியை நான் கேட்க முடியுமா? அது நல்லாயிருக்காது. பதவிக்கு மதிப்பு கொடுத்துகொஞ்சம் தாழ்மையாக பேசினால் நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

சர்கார் பட விவகாரத்தில் வன்முறையில் இறங்கியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மாற்றுக்கருத்து இருந்தால் அமர்ந்து பேசவேண்டும். அதற்காக தியேட்டரை உடைப்பது, பேனரை கிழிப்பது போன்ற செயல்கள் சரியானது அல்ல. ஒருபேச்சு பேசிவிட்டு அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாமே.

இலவசங்கள் 100 சதவீதம் தேவை. அது யாருக்கு? எதற்காக? என்பதைபொறுத்து இருக்கிறது. வாக்குகளை மனதில் வைத்து கொடுத்தால் சரியில்லை. சினிமாக்காரர்கள் எது சொல்ல வேண்டும்? எது சொல்லகூடாது? என்று ஒரு வரையறையும் இருக்கிறது. உணர்ச்சிக் கரமான வி‌ஷயங்களை தொடக் கூடாது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

நடிகர்கள் கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக் கிறார்கள். வருமான வரி கட்டுகிறார்கள். இதைப்பற்றி யார் என்ன கேட்பது?

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply