மோடி பங்கேற்கும் தேர்தல்பிரசார கூட்டத்தில் 10 லட்சம்பேரை திரட்ட திட்டமிட்டுள்ளோம். 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நிச்சயமாக கலந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விவேகானந்தரின் 151வது பிறந்த நாளான ஜனவரி 12–ந்தேதி கோவா மாநில தலைநகர் பானாஜியில் நரேந்திரமோடி பிரசாரத்தை தொடங்குகிறார். அதன் ஒருகட்டமாக அடுத்த மாதம் 8–ந்தேதி மோடி சென்னை வருகிறார்.

அவர் பேசுவதற்காக வண்டலூர் விஜிபி மைதானம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மோடி பங்கேற்கும் தேர்தல்பிரசார கூட்டத்தில் 10 லட்சம்பேரை திரட்ட திட்டமிட்டுள்ளோம். 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நிச்சயமாக கலந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கூட்டணிக்கான பேச்சுவார்த்தை இந்தமாத இறுதியில் அல்லது அடுத்தமாதம் முதல் வாரத்தில் முடிந்துவிடும். உடனடியாக கூட்டணி அறிவிப்பு வெளியிடப்படும். நரேந்திர மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணிகட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள்.

இலங்கையில் கொன்றுகுவிக்கப்பட்ட தமிழர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்பது இந்ததேர்தலில் காங்கிரசை தண்டிப்பது தான். அந்த கூட்டணிக்கு தமிழ்நாட்டில் ஒரு இடம்கூட இல்லை என்ற நிலையை மக்கள் வழங்குவார்கள். இதைசெய்ய தவறினால் இலங்கை மட்டுமல்ல உலகம் முழுவதிலும் தமிழர்கள்மீது மேலும் பெரியதாக்குதல் நடைபெறும்.

விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் தமிழர்கள்மீது அன்பு கொண்டவர்கள். உலகில் எங்கு தமிழர்கள் தாக்கப்பட்டாலும் உடனடியாக எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். மத்தியில் வலுவான ஆட்சி உருவாகவேண்டும். மோடி பிரதமர் ஆகவேண்டும். அப்படியானால் தான் தமிழர்கள் நலன் காக்கப்படும். எனவே தே.மு.தி.க.வும், பா.ஜனதா கூட்டணிக்கு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. என்று அவர் கூறினார்.

Leave a Reply