திருவையாற்றில் 1800 ஆண்டுகள் பழமைவாய்ந்த “அருள்மிகு பஞ்சநதீஸ்வரஸ்வாமி ஆலயத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக ‘நாட்டியாஞ்சலி’ விழா மகாசிவராத்திரியை யொட்டி மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு விழா 2013 மார்ச் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடத்த ஏற்பாடாகியிருக்கிறது.

இந்த விழாவிற்கு நாடு முழுவதிலிருந்தும் 50 குழுக்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் வந்து சுவாமி சந்நிதியில் தாங்கள் பயின்ற நடனங்களை ஆடி சிவபெருமானுக்கு அஞ்சலி செலுத்து கின்றனர். திருவையாற்றின் தலச் சிறப்புக்காக, இறைவன் சந்நிதியில் தெய்வீகக் கலையான பரதநாட்டியம், குச்சிப்புடி, ஒடிசி, மோகினி யாட்டம், கதக் போன்ற நிகழ்ச்சிகளை ஆட கலைஞர்கள் இங்கு பெருமளவில் வருகிறார்கள். இவ்வாண்டு துவக்க நாளான மார்ச் 9ஆம் தேதி சனிக்கிழமை மாலை சென்னை லக்ஷ்மி விஸ்வநாதன் அவர்கள் குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைக்கிறார். திருவையாறு ஆலய தருமபுர ஆதீன கட்டளை விசாரணை முனைவர் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் ஆசியுரை வழங்குகிறார். முதல் நிகழ்ச்சியாக தமிழகத்தின் மூத்த நடனக் கலைஞர் பத்மஸ்ரீ பேராசிரியர் சுதாராணி ரகுபதி அவர்கள் முன்னிலையில் அவருடைய மாணவியர் பரதநாட்டியம் ஆடுகின்றனர். அதனைத் தொடர்ந்து சின்னமனூர் சுஜாதா, சிதம்பரம் அகிலன் உட்பட சுமார் பத்து குழுக்கள் அடுத்தடுத்து நடனம் ஆடுகின்றனர்.

இரண்டாம் நாளான மார்ச் 10 ஞாயிறன்று சென்னையிலிருந்தும், பெங்களூர், மும்பை, கொல்கொத்தா ஆகிய இடங்களிலிருந்தும் வரும் கலைஞர்கள் சுமார் 15 குழுக்கள்  பங்கேற்கிறார்கள். சென்னை டாக்டர் ஸ்வர்ணமால்யா கணேஷ், சுதா விஜயகுமார், ஸ்ரீ கிருஷ்ண நாட்டியாலயா கலா சீனிவாசன், சென்னை வாமதேவ கலைக்கூடம் திருமதி வனமாலா தேசிகன், திருச்சி சகோதரிகள் உஷா நந்தினி, ஜெயசுஜிதா, செங்கல்பட்டு சரஸ்வதி நாட்டியாலயா சசிகலா வெங்கடேசன் இவர்களோடு, கொல்கொத்தா அயன் பானர்ஜி கதக் நடனமும், மும்பை பத்மினி ராதாகிருஷ்ணன், பெங்களூர் தீபா சசீந்திரன், ரேகா சதீஷ் ஆகியோர் குச்சிபுடி நடனமும், ஸ்வப்னா ராஜேந்திரகுமார் மோஹினி ஆட்டமும் நடத்தவிருக்கிறார்கள். இவர்களில் தீபா சசீந்திரன், “சங்கராபரணம்” திரைப்பட கதாநாயகி மஞ்சு பார்கவியின் மாணவி. ரேகா சதீஷ் என்பவர் புகழ்பெற்ற வேம்பட்டி சின்னசத்யம் அவர்களின் மாணவி. மோஹினி ஆட்டம் ஆடுகின்ற ஸ்வப்னா, கேரளத்தின் புகழ்பெற்ற நடனக் கலைஞர் சுனந்தா நாயரின் மாணவி. பரோடாவைச் சேர்ந்த மீனாக்ஷி வெங்கடராமன் பரதநாட்டியம் ஆடுகிறார்.

மூன்றாம் நாளில் பெங்களூர் லட்சணா ஷ்ரவண், மாயூரம் ராஜேந்திரன் மாணவியர், கும்ப கோணத்தைச் சேர்ந்த பல நடனக் கலைஞர்கள் ஆக சுமார் 12க்கும் மேற்பட்ட குழு வினர் பங்கேற்கிறார்கள். மூன்று நாட்களிலும் நடைபெறும் நடன நிகழ்ச்சிகளை பொது மக்களும், கலை ஆர்வலர்களும், பக்தர்களும் பெருமளவில் வந்து கண்டு களிக்க வேண்டுமாய் விழா குழுவினர் சார்பில் வேண்டிக் கொள்கிறோம். தொலைக்காட்சி ஊடகங்களும், செய்தித் தாள்களும் விழா நிகழ்ச்சிகளை வெளியிட வேண்டுமாய்க் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி. தஞ்சை வெ.கோபாலன்

Leave a Reply