இந்த 21 மாதங்களில் பலகுடும்பங்களுக்கு மகத்தான_நஷ்டம் ஏற்பட்டது. இருப்பினும் அதை அவர்கள் நாட்டுக்காகசெய்த கைங் கர்யமாக கருதினார்கள். இப்படி ஆகிவிட்டதே என ஏக்கமோ பாதிப்போ அடையவில்லை.

இதற்கு எத்தனையோ உதாரணங்களைக் காட்டலாம். அனால் ஒருசிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறோம். சேலம் ராம்நாத்தின் வணிகம் கடுமையாக பாதிக்க பட்டது. பிரம்மபுரம் குமாரசுவாமியின் சீட்டு நிதித்தொழில் தகர்ந்தது. நாகர்கோவில் சங்கசாலக் முத்துசுவாமி தமது வியாபாரத்தையே கைவிடும்படி நேர்ந்தது. வழக்குரைஞர்களான நெல்லை எஸ்.ஜி.சுப்பிரமணியம், மதுரை கே.விஸ்வநாதன், திருச்சி.டி.என்.ஹரிஹரன், திருச்சியில் வியாபாரம் செய்து வந்த ஸ்ரீ.கங்காதரனுக்கும், ஏற்பட்ட இழப்பு அற்ப சொற்பமல்ல. சென்னை மாவட்ட சங்கசாலக் வழக்கறிஞர் ஸ்ரீ.சம்பத்குமார் ஜூலை 5 ஆம் தேதி கைதானார். அவர் கைதானதும் அவரது குடும்பத்தில் ஒரு துயர நிகழ்ச்சி நடந்தது. அவரது மகள் கடும் நோய்வாய்ப்பட்டார். ஒரு சில நாட்களில் அவர் வெளி வந்ததும் மகள் இறந்தே போனார்.

கோவை ஸ்ரீ.நாராயணன் வேலையை இழந்து மீண்டும் புதிதாக வேலைக்குச் சேர்ந்தார். மதுரை பாலிடெக்னிக்கில் ஆசிரியராக இருந்த ஸ்ரீ.கிருஷ்ணா சூர்யாவுக்கு இன்று வரை வேலை திரும்பக் கிடைக்கவில்லை. கும்பகோணம் ரமணி இன்னும் வேலையின்றி வாடுகிறார். அரியலூர் ஸ்ரீ.ஜனார்த்தனத்தின் ஹோட்டல் வியாபாரத்தில் கடும் நஷ்டம் ஏற்பட்டது. அவரது மகம் ஹரிஹரன் காவல் நிலையத்தில் மிகுந்த தொல்லைகளுக்கு ஆளானார். பேரணாம்பட்டு பத்மநாபன் இழந்த வேலையை இன்னமும் பெறவில்லை. இதுபோலக் கூறிக் கொண்டே போகலாம். இடமின்மையால் நிறுத்துக் கொள்கிறோம். இவ்வளவு இருப்பினும் இவர்களது உற்ச்சாகமும், ஊக்கமும் கின்றவில்லை. லட்சியப் பிடிப்பு ஒரு சிறிதும் தளரவில்லை.

பத்திரிகை ஆசிரியர்

சென்னையில் ஒரு பத்திரிகை அலுவலகம்.அதன் ஆசிரியர் தேசபக்தர். அவரது அலுவலகத்தில் ஒரு நாள் ஸ்ரீ.ராமகோபாலன் (அப்போது அவர் தலைமறைவு ஊழியர்) உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். அந்த ஆசிரியருக்கு ஏராளமான நண்பர்கள். பல துறைகளில் இருப்பவர்களும் சந்திக்கும் இடமாக, கருத்துப் பரிமாறிக்கொள்ளும் இடமாக அந்த அலுவலகம் அமைந்திருந்தது. மூன்று நான்கு பேர்கள் பேசிக் கொண்டிருந்த நேரம். ஆசிரியரின் நண்பர் உள்ளே நுழைந்தார். எனது நண்பர் மத்திய போலீஸ் புலனாய்வுத் துறையில் அதிகாரி. அவர் உங்களைக் காண வந்துள்ளார், அழைத்து வரட்டுமா? என்று கேட்டார். ஆசிரியர் அமைதியாக எழுந்து வெளியே சென்றார். காரில் அமர்ந்திருந்த அந்த அதிகாரியைச் சந்தித்தார். உபசார மொழிகளை எல்லாம் பரிமாறிக் கொண்ட பிறகு அந்த அதிகாரியிடம் தெளிவாக ஒன்றைக் கூறினார். நீங்கள் தயவு செய்து உள்ளே வரவேண்டாம். அங்கே ஆர்.எஸ்.எஸ்.சின் தலைமறைவு ஊழியர் ஒருவர் உட்கார்ந் திருக்கிறார். "நீங்கள் ஒருவரையொருவர் சந்தித்தால் இருவருக்குமே சங்கடமாக இருக்கும். மன்னிக்க வேண்டும். மற்றொரு சந்தர்ப்பத்தில் உங்களைச் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்" என்று கூறி அவரை வழியனுப்பி வைத்தார். அந்த ஆசிரியரின் நேர்மையையும், கள்ளங்கபடமற்ற பாங்கையும் கண்ட அந்த அதிகாரி புன்முறுவலுடன் சென்று விட்டார். "நான் கைது செய்வதானால் உங்கள் இருவரையுமே கைதுசெய்ய வேண்டியிருக்கும். நான் அதை விரும்பவில்லை" என்று கூறினார். கைது செய்திருந்தால் அவருக்கு வெகுமதியும், உத்தியோக உயர்வும் கிடைத்திருக்கும். அதையும் அவர் இழக்கத் தயாரானார் என்பதைக் குறிப்பிடாமலிருக்க முடியாது.

திடீர் செவிடர்.

தலைமறைவு ஊழியர் ஒருவர் சென்னையில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்ப்ரசில் நாகர்கோவில் செல்கிறார். வேறு பெயரில் அவருக்குத் தூங்கும் பெட்டியில் ரிசர்வேஷன் ஆகியிருக்கிறது. வண்டி கிளம்பச் சில நிமிடங்களுக்கு முன்னர் அவ்வூழியர் வண்டியில் ஏறித் தமது இடத்தில் அமர்ந்தார். உடனேயே அதே பெட்டியில் நான்கு போலீஸ் அதிகாரிகளும் ஏறினர். அவ்வூழியருக்கு நெஞ்சு படபடத்தது. ஆனால் முகத்தில் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. வண்டி புறப்பட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் ரயில் வண்டியில் நடக்கும் சாதாரணப் பழக்கத்திற்கு ஒப்ப எல்லோரையும் "நீங்கள் எங்கே போகிறீர்கள்"? எந்த ஊர் ? என்ன வேலை? இன்னாரைத் தெரியுமா? என்பது போன்ற கேள்விகள் எல்லாம் பரிமாறிக் கொள்ளப்பட்டன. போலீஸ் அதிகாரிகள் மற்றவர்களை எல்லாம் கேட்டாகிவிட்டது. அடுத்தது தலைமறைவுக்காரரின் முறை. "நீங்கள் எந்த ஊருக்கு? என்று ஒரு அதிகாரி நம்மவரைக் கேட்டார். 'திருநெல்வேலிக்கு இந்த வண்டி சுமார் எட்டரை மணிக்குப் போகும்' என்று அசட்டுச் சிரிப்புடன் ஊழியர் பதில் அளித்தார். அதைக் கேட்கவில்லை. நீங்கள் எந்த ஊருக்கு என்று கேட்டேன் என்று அந்த அதிகாரி சற்று உரத்த குரலில் விளக்கினார். 'சாதரணமாக இந்த வண்டி தாமதமாவதில்லை. எட்டரைக்குப் போய்விடும்' என்றார் ஊழியர். அதிகாரி மேலும் உரத்த குரலில் ' நீங்கள் எங்கே போகிறீர்கள் என்றுதான் கேட்டேன்' என்றார். திருநெல்வேலி போனவுடன் நாகர்கோவில் போக உடனேயே பஸ் இருக்கிறது. 'கஷ்டமே இல்லை' என்றார் ஊழியர். எதிரில் உட்கார்ந்திருந்த ஒருவர் அடே ஏனய்யா இந்த ஆளோட வம்பு? நல்ல பாறைச் செவிடு போலிருக்கு. இவரோட பேசினா தொண்டைத் தண்ணீர்தான் வற்றும், என்று கூறினார். எல்லோரும் சிரித்தனர். ஊழியரும் ஒன்றும் புரியாதவர் போல எல்லோரது முகத்தையும் பார்த்தார். தானும் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தார். பிறகு தூங்கும் இடத்திற்கு ஏறி புத்தகம் படிக்க ஆரம்பித்துவிட்டார். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று நிம்மதி அடைந்தார். (இந்தத் தலைமறைவு ஊழியர் வேறு யாருமல்ல ஸ்ரீ.இராம.கோபாலன்தான்.)

1942 தான் 1976 ம் கூட

பெரம்பூர் ஸ்ரீ.சிவக்கொழுந்து முதலியார். எண்பது வயது நிரம்பப் பெற்றவர். ஆர்.எஸ்.எஸ். மீது முகுந்த ஈடுபாடு கொண்டவர். தேசிய வார இதழ் 'தியாக பூமி'யை வெளியிட்டு வருகிற பாரதியப் பண்பாட்டுச் சங்கத்தின் தலைவர்.

நெருக்கடி அட்டூழியக்காரர்கள் இந்த முதுபெரும் அன்பரையும் விட்டுவைக்க வில்லை. 1976 ஆகஸ்டில் 'தியாக பூமி'யை மூடிய கையேடு போலீஸ் படை இவரது வீட்டையும் சோதனையிட்டது. "வஜ்ராயுதம்" "போராட்டம்" ஆகிய ரகசிய பிரசுரங்களின் சில இதழ்களை அங்கு கைப்பற்றியது. போலீசார் ஸ்ரீ சிவக்கொழுந்து முதலியாரைச் செம்பியம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். முதலில் அவரது மனதில் பீதி ஏற்படுத்த ஏற்கெனவே பல்வேறு காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டுக் கொண்டு வரப்பட்டிருந்தவர்களைக் கடுமையாக அடித்தார்கள். அவர்களது அலறல், அவர்கள் படும் அடி இவற்றை இவர் பார்க்க வேண்டும் எண்பது போலீசின் நோக்கம்.

பிறகு "வஜ்ராயுதம்" "போராட்டம்" இதழ்கள் உங்களுக்கு எப்படிக் கிடைத்தன?" என்று இவரை வினவினர். ஜனவரி 26 ஆம் தேதி கடற்கரைக்குச் சென்றிருந்தேன், அங்கு சத்யாக்ரகம் செய்தோர் கொடுத்தனர்" என்றார். இதெல்லாம் எங்கே அச்சாகிறது? இந்த விவரத்தை நீங்கள் கூறத்தான் வேண்டும்" என்று போலீசார் கடுமையாகக் கேட்டனர். "எனக்குத் தெரியாது" என்று அவர் உறுதியாக பதிலளித்தார். "நீங்கள் கூறாவிடில், இந்த எமர்ஜென்சியில் உங்களது முதுமைக் காலத்தில் சிறையிடப்படுவீர்கள், கொடுமைக்கு ஆளாவீர்கள் என்று போலீசார் ஆக்ரோஷத்தோடு கூறினார். ஸ்ரீ.சிவக்கொழுந்து முதலியார் மிக அமைதியாக "நான் 1942இல் 'வெள்ளையனே வெளியேறு' எனக் கூறிச் சிறை சென்றவன். 1976 இலும் சர்வாதிகாரியை வெளியேற்றத் தயங்காமல் சிறைசெல்வேன் என்று கூறினார்.

இரண்டாவது திங்கரா

ஒருநாள் காலை நேரம் 10 மணி இருக்கும். சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடு வதில் 24 மணி நேரமும் ஈடுபட்டிருந்த ஒரு இளைஞர் குழாம், பெரம்பூரில் ஒரு அறையில் கூடியது.

எங்கு பார்த்தாலும் போலீஸ் துரத்துகிறது. திடீர் கைதுகள். காவல் நிலையத்தில் கேள்வி கேட்டுக் கேட்டுக் விஷயங்களை வரவழைக்கச் சித்திரவதைகள், சிறையில் தனிக் கொட்டடியில் அடைத்தல். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வீர இளைஞர் களின் மனம் எப்படி மாதலால் திங்கரா தனது கையில் ஆணி குத்தப் பட்ட நேரத்திலும் இமை கொட்டாமல், மனம் நடுங்காமல் நின்று வீர சாவர்க்கரின் சோதனையில் வெற்றி பெற்ற சம்பவம் அனைவருக்கும் நினவு வந்தது.

உடனே வீரராகவன் என்ற பட்டதாரி இளைஞர், "நம்மில்யாரும் அப்படிப்பட்டவர் இருக்கிறாரா"? என்றார். ஒரு வினாடி அமைதி. மறுவினாடி, முருகேசன் என்ற இளைஞர் தன் வலது கையை முன்னே நீட்டினார். "நான் எதற்கும் தயார்" என்று உறுதியாகக் கூறினார். அவரது முகத்தில் ஒரு கயிறு (நாலைந்து காசிக் கயிறு பருமனுக்கு) கட்டியிருந்தார். சட்டென ராஜ்குமார் என்ற மற்றொரு இளைஞர் அதைக் கொளுத்திவிட்டார். 3 நிமிட நேரம் அது எரிந்தது. வலது கை மணிக்கட்டு ரணமாகியது. முருகேசனின் முகத்தில் தொடர்ந்து நிலவிய அதே உறுதியையும் அமைதியையும் கண்டு கூடியிருந்தோர் மனதிலும் முகத்திலும் மிகப் பெரிய உத்வேகமும் வீராவேச உறுதியும் தாண்டவமாடின. இம்முறை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களும் எத்தகைய உணர்ச்சிகளால் எத்துனை தூரம் ஆட்கொள்ளப்பட்டிருந்தார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு.

காத்திருக்கிறேன்.

கரூர் ஸ்ரீ.என்.ஆர்.சுப்பிரமணியம் இனிய சுபாவமுள்ளவர். எல்லோருமே அவருக்கு நண்பர்கள். மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்கு எதிரில் அவரது ஓட்டல் உள்ளது. ஆகவே நீதிபதிகளும், காவல்துறை அதிகாரிகளும் அனைவருமே அவருக்கு அறிமுகம் ஆனவர்கள். சுதந்திரத்திலும் ஜனநாயகத்திலும் உண்மையான பற்றுள்ள ஒரு உள்ளம். அவை பறிக்கப்பட்டதால் எப்படித் தவிக்கும் என்பதற்கு ஸ்ரீ.என்.ஆர்.சுப்பிரமணியம் மிகச் சிறந்த உதாரணம். நெருக்கடி காலம் முழுவதிலும் அவர் போராட்டத்தில் மிகுந்த துணிச்சலோடு ஈடுபட்டார். சுவரில் எழுதுவது, பிரசுரங்களை விநியோகிப்பது போன்ற காரியங்களை அவர் தாமே செய்தார். விற்பனைக்குள்ள பிரசுரங்கள் பலவற்றை அவர் தமது கடையில் மேசைக்கு அடியில் வைத்திருப்பார். சிற்றுண்டி அருந்த வரும் நபர்களில் நாட்டுப் பற்றும் பொதுநல அக்கறையும் உள்ளவர்களுக்கு அவற்றை விற்பார். போலீஸ் கெடுபிடிகள் பயங்கரமாக இருந்த அந்த நேரத்திலும் அவரது போக்கில் சிறிதும் மாறுதல் இல்லை.

1976 பிப்ரவரி 1 ஆம் தேதி அவரைக் கைது செய்ய அவ்வூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் சில போலீசாருடன் வந்தார். ஸ்ரீ.சுப்பிரமணியம் தமது ஓட்டலில் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்த நேரம். அவர்கள் உள்ளே நுழைவதைக் கண்டவுடன் "நான் உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக் கிறேன், வாருங்கள், முதலில் சிற்றுண்டி சாப்பிடுவோம். அதன் பிறகு பேசுவோம்" என்றார். அவர்கள் தயங்கினர். இவர் விடவில்லை.வற்ப்புறுத்தி அவர்களைச் சிற்றுண்டி அருந்தச் செய்தார்.அதன் பின்னர் சப் இன்ஸ்பெக்டர் தாம் வந்த காரியத்தைச் சொல்ல வாயெடுத்த போது " நீங்கள் சிறிது கூட கவலைப்பட வேண்டாம். எனக்கு எல்லாம் தெரியும். எத்தனையோ நாட்களாக நான் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறினார். பிறகு எல்லோருமாக ஒரு டாக்சியில் அவரது வீட்டுக்குச் சென்றார்கள். அங்கே அவரது பன்னிரண்டு வயது மகள் "அப்பா, நீங்கள் இன்னும் கைதாகவில்லையா?" என்று கேட்டால். "நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இப்பொழுதுதான் அழைத்திருக் கிறார்கள்" என்று கூறிக்கொண்டே உடைகளை மாற்றிக் கொண்டு அவர்களுடன் புறப்பட்டார்.

சோஷலிஸ்ட்களின் பங்கு.

தமிழ்நாட்டில் நெருக்கடி நிலையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் லோக சங்கர்ஷ சமிதியின் சார்பில் ஜனசங்கத்துக்கு அடுத்தபடியாக முழு மனதுடன் தீவிரத்துடன் கலந்து கொண்ட தமிழ் நாடு சோஷலிஸ்ட் கட்சியின் பங்கினை மறக்க முடியாது. அக்கட்சியின் ஊழியர்களும் உறுப்பினர்களும் ரகசியப் பிரசுரங்களை விநியோகிப்பதில் காட்டிய ஆர்வம், தலை மறைவு ஊழியர்களுக்கு அளித்த பாதுகாப்பு, பல்வேறு விதமான உதவிகள், சத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட விதம் ஆகியவை மிகுந்த பாராட்டுக்குரியவை ஆகும்.
இந்த செய்திகள் "நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்" என்கிற நூலிலிருந்து எடுத்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 1977 ஆண்டு நெருக்கடி நிலையை எதிர்த்து நாடெங்கிலும் நடைபெற்ற தலைமறைவு இயக்க வேலைகளையும், துணிச்சல், தைரியம் மிக்க தேச பக்தர்கள் புரிந்த போராட்டத்தினை விவரிக்கும் இந்த நூல் விரைவில் மீண்டும் விஜயபாரதம் பதிப்பகத்தின் சார்பில் மறுபதிப்பு செய்யப்பட இருக்கிறது.

Leave a Reply