அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் விளக்கம் 2  இன்று ஒரு எளிய‌, ஆனால் மிக‌வும் அரிய‌, திருப்புக‌ழைப் பார்க்க‌லாம். ப‌டித்த‌துமே எளிதாக‌ப் புரிந்துவிடுவ‌துபோல‌ இருந்தாலும், இத‌ற்குப் ப‌ல‌வித‌மாக‌ப் பொருள் சொல்லும் க‌ற்ற‌றிந்தோர் ப‌ல‌ருண்டு. அவ‌ர்க‌ளுக்கு இடையில், நானும் என‌க்குப் ப‌ட்ட‌தைச் சொல்ல‌ முருக‌ன‌ருளை வேண்டுகிறேன். குற்ற‌ம், குறைக‌ளுக்கு ம‌ன்னிப்பைக் கோருகிறேன். மு.மு.

*****

தானந்த தானத்தம் …… தனதான
தானந்த தானத்தம் …… தனதான
தானந்த தானத்தம் …… தனதான
தானந்த தானத்தம் …… தனதான

……… பாடல் ………

நீலங்கொள் மேகத்தின் …… மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் …… டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் …… மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் …… தருள்வாயே

வேல்கொண்டு வேலைப்பண் …… டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் …… குலகாலா
நாலந்த வேதத்தின் …… பொருளோனே
நானென்று மார்தட்டும் …… பெருமாளே.
************

***** பொருள் விளக்கம் *****

[வழக்கம்போல் பின் பார்த்து, முன் பார்க்கலாம்!]

வேல்கொண்டு வேலைப்பண் …… டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் …… குலகாலா
நாலந்த வேதத்தின் …… பொருளோனே
நானென்று மார்தட்டும் …… பெருமாளே.

'வேல்கொண்டு வேலைப் பண்டு எறிவோனே'

க‌ட‌ல‌லைபோல் கூட‌வ‌ரும்
சூர‌ரெலாம் ம‌டிந்துவிழ‌
வேல்காட்டும் வீரனிவன்
முன்நிற்க‌ மிக‌வ‌ஞ்சிக்
க‌டும்ப‌யமே புடைசூழ‌த்
த‌ன்னுயிரைக் காத்திடவேக்
கடலடியுள் தான்சென்று
சூரனுமே ஒளிந்திருக்க‌
ம‌ற‌த்துக்குத் துணைசெய்த‌
வ‌ஞ்ச‌க‌மே பொறுக்காத‌
சேந்த‌னுமே சின‌ங்கொண்டு
வேலெடுத்து வீசிக்காட்டி
வேலையினை வ‌ற்றிட‌வே
செய்திட்ட‌ப் பெருமானே!

'வீரம்கொள் சூரர்க்கும் குலகாலா'

அற‌வ‌ழியில் நில்லாது
ம‌ற‌ச்செய‌லே புரிந்திட்ட‌
சூர‌ன‌வ‌ன் துணைநின்று
வீரமுடன் போரிட்ட‌
அசுரகுலம் அற்றிடவே
அவர்க்கெல்லாம் எமனாக‌
எதிர்நின்ற முருகோனே!

'நாலு அந்த வேதத்தின் பொருளோனே'

ஆதிமுதல் ஆனாலும்
அந்தமிலாப் பெருமையுறு
ச‌துர்வேத‌ம் என‌ப்போற்றும்
ரிக்,ய‌ஜுர்,சாம‌ அத‌ர்வ‌ண‌
வேத‌ங்க‌ள் நான்கினுக்கும்
மூல‌ப் பொருளான‌
ஓமென்னும் த‌த்துவ‌த்தின்
உறைபொருளாய் விள‌ங்குகின்ற‌
உத்த‌ம‌னே ச‌த்திய‌னே!

'நான் என்று மார்தட்டும் பெருமாளே.'

விதிசெய்த சதியாலே
கதியில்லை இங்கெனக்கு
என்றலறி ஓடிவரும்
கணக்கற்ற பக்தருக்குக்
கதிநானே தந்திடுவேன்
பதமலரைச் சரண்புகுமின்
யாமிருக்கப் பயமெதற்கு
என்னுமொரு பெருமைபேசி
மார்தட்டி நிற்கின்ற‌
குமரகுருப் பெருமாளே!

நீலங்கொள் மேகத்தின் …… மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் …… டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் …… மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் …… தருள்வாயே

'நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே நீவந்த வாழ்வைக் கண்டு….'

அப‌ய‌மென‌ வ‌ருவோர்க்கு
அருள்ம‌ழையைப் பொழிகின்ற‌க்
கார்மேக‌க் கூட்ட‌ம்போல்
நிற‌ங்கொண்ட‌ நீல‌நிற‌
ம‌யில்மீது பேர‌ழ‌காய்
நீய‌ம‌ர்ந்து பீடுடனே
வ‌ருகின்றக் காட்சியினைக்
க‌ண்ணார‌க் க‌ண்டுகொண்டேன்!

'அதனாலே….மால்கொண்ட பேதைக்கு…..'

க‌ண்ட‌தொருக் காட்சியிலே
ம‌தியெல்லாம் ம‌ய‌ங்கிட‌வே
நின்ன‌ழ‌கைக் க‌ண்ட‌த‌னால்
என்னுள்ள‌ம் பித்தாகி
செய‌லேதும் செய‌விய‌லா
நிலைய‌த‌னை யான‌டைந்துச்
சித்த‌ம் க‌ல‌ங்கிப்போய்ச்
சிறியேன்யான்‌ நிற்கின்றேன்!

'உன் மணநாறும் மார்தங்கு தாரைத் தந்தருள்வாயே !'

க‌ட‌ல்வ‌ற்ற‌ச் செய்த‌துபோலென்
க‌வ‌லையெலாம் போக்கிடுவாய்!

தீதுக்குக் கால‌னாக‌
நீவ‌ந்து அழித்தாற்போலென்
தீவினையை நீக்கிடுவாய்!

அந்த‌மிலா நான்ம‌றையின்
சொந்த‌மான‌ பொருட்போலென்
வாழ்வுக்கும் பொருளாக‌
வ‌ந்தெனையே ஆட்கொள்வாய்!

மேற்சொன்னப் பெருமையெலாம்
'யாம்'என்றுப் பெருமிதமாய்
வலக்கரத்தால் நீத‌ட்டும்
மார்மேலே நறுமணமாய்த்
த‌வ‌ழ்கின்ற‌ மாலையினை
நீயென‌க்குத் த‌ந்துவிடின்
என்வாழ்வும் ம‌ண‌ம்பெறுமே!

நின்ம‌ண‌மே என்ம‌ண‌மாய்
நீயென்னை மாற்றாயோ?
பெருமைப‌ல‌ புரிகின்ற‌
பேராள‌ன் நின்ற‌னுக்கு
இதுவொன்றும் அரிதாமோ?

இப்போதே வ‌ந்தென்னை
நின்னுட‌னே சேர்த்திடுவாய்!
க‌ந்த‌க் க‌ட‌ம்ப‌னே!
கார்ம‌யில் வாக‌ன‌னே!
**********

—அருஞ்சொற்பொருள்—–

மால் – ம‌ய‌க்க‌ம்
தார் – மாலை
வேலை – க‌ட‌ல்
ப‌ண்டு – ப‌ழ‌மை [முன்பு]
**********

நன்றி : Dr . சங்கர் குமார் வட கரோலினா USA

Leave a Reply