லண்டன் சதி வழக்கு – 2கணேஷ் சாவர்க்கருக்கு தண்டனை அளித்து அந்தமான் சிறைக்கு அனுப்பிய செய்தியை லண்டனில் இருந்த அவர் தம்பி விநாயக தாமோதர சாவர்க்கருக்கு (வீர சாவர்க்கர்) தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது.

லண்டன் இந்தியா ஹவுசில் தங்கியிருந்த இந்திய தேசபக்தர்கள், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரக்கூடுதல் நடத்தி இந்திய சுதந்திரப்போர் நடவடிக்கைகளை பற்றி பேசுவது வழக்கம்.

1909 ஜூன் 20 ஆம் தேதியன்று நடந்த வாரக்கூடுதலில் வீர சாவர்க்கர், தனது அண்ணன் கணேஷ் சாவர்க்கருக்கு விதிக்கப்பட்ட தண்டனையைப் பற்றி கூறினார். "பிரிட்டிஷ் பேரரசை பழிக்கு பழி வாங்காமல் விட போவதில்லை" என்றும் அந்தக் கூட்டத்தில் சபதம் எடுத்துக் கொண்டார்.

அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் இன்ஜினியரிங் பயின்று வந்த இந்திய மாணவனான மதன்லால் திங்காராவின் உள்ளமும் கனல்பட்ட மெழுகாய் உருகி, காற்றுப்பட்ட நெருப்பாய் எரிந்தது. அபிநவ் பாரத இயக்கத் தலைவர் வீரசாவர்க்கரின் அண்ணனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பழி வாங்கும் பொறுப்பினை தாம் ஏன் ஏற்கக்கூடாது? ஏன் எண்ணினான் திங்காரா!

சாவர்க்கர் பேசி முடித்ததும் புலி போல் துள்ளி எழுந்து நின்ற திங்காரா "பாபா சாஹேப் கணேஷ் சாவர்க்கருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிக்குப்பழி வாங்கும் பொறுப்பினை என்னிடம் விடுங்கள். இந்தியாவில் நடக்கும் அநீதிகளுக்கு காரணமான "கர்ஸான் வில்லியை " தீர்த்துக்கட்டி பழி முடிக்கிறேன். என்று முழங்கினான்.

கூட்டத்தினர் அனைவரும் அவனை வியப்போடு நோக்கினர். சாவர்க்கரும் வ.வே.சு. ஐயரும் அவனை சந்தேகத்தோடு பார்த்தனர். " இவனா? இந்தச் சின்னப்பையனா? இவ்வளவு பெரிய காரியத்தினை இவனால் முடிக்க இயலுமா? என்றக் கேள்விக்குறி அவர்களது முகத்தில் தாண்டவமாடியது.

மதன்லால் திங்காராவை மறுநாள் வரச்சொல்லி விட்டுக் கூட்டத்தினை முடித்தார் சாவர்க்கர். மறுநாள் இரவு, லண்டன் நகரம் உறங்கிக்கொண்டிருந்த நடுநிசி வேளையில் இந்தியா ஹவுஸ் ரகசிய அறை ஒன்றில் சாவர்க்கர், மதன்லால் திங்காரா மற்றும் வ.வே.சு.ஐயர் ஆகியோர் தூங்காமல் விழித்திருந்து துணிச்சல் மிகுந்த திட்டம் ஒன்றை தீட்டிக் கொண்டிருந்தனர்.

1909 ஜூலை மாதம் முதல் தேதியன்று, லண்டன் இம்பிரியல் இன்ஸ்டிட்யூட்டின் வருடாந்திரக் கூட்டம் ஜஹாங்கிர் மாளிகையில் உள்ள கென்சிங்க்டன் ஹாலில் நடைபெறும். அந்தக் கூட்டத்தில் கர்ஸான் கலந்து கொள்வான் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றே அந்த ஹாலில் கர்ஸானை தீர்த்துக்கட்ட வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.

"நான் தயார்" என்றான் மதன்லால் திங்காரா. "இப்போது தயார் என்று கூறுவாய். நாளை பிடிபட்டுவிட்டால் போலிஸ் சித்திரவதை தாங்காமல் நமது இயக்கத்தினையே காட்டிக்கொடுத்து விடுவாய் ! நீ வேண்டாம் ! நாங்களே அதனை கவனித்துக் கொள்கிறோம்" என்றார் வ.வே.சு. ஐயர்.

"முடியாது நான்தான் இதனை செய்வேன் ! உயிரே போனாலும் இயக்கத்தினை காட்டி கொடுக்க மாட்டேன்.! தயவு செய்து எனக்கே இந்த வாய்ப்பினை கொடுங்கள்." என்றான் மதன்லால் திங்காரா.

"அப்பிடியானால் நீ சில சோதனைகளுக்கு உட்பட வேண்டும். தயாரா? " என்றார் வ.வே.சு. ஐயர். "எதற்கும் தயார்" என்றான் மதன்லால் திங்காரா

அடுத்த சில நொடிகளில் சோதனை ஆரம்பமாகியது. வ.வே.சு. ஐயர் ஒரு ஊசியை எடுத்து மதன்லால் திங்காராவின் நகக் கண்களில் கண்ணை மூடிக்கொண்டு குத்தினார். செங்குருதி பீறுட்டி வந்தது. திங்காரா ஒரு அங்குலம் கூட நகரவில்லை.! மாறாக மந்திரப்புன்னகையோடு சவால் விடும் தோரணையில் வ.வே.சு. ஐயர் மற்றும் சாவர்க்கரை பார்த்துக்கொண்டு இருந்தான். சோதனை முடிந்தது. வ.வே.சு. ஐயர் மற்றும் சாவர்க்கர் இருவரும் திங்காராவை தழுவி முத்தமிட்டனர். சோதனையில் தேறிய திங்காரவிடம் அப்போதே பொறுப்பினை ஒப்படைத்தனர்.

(தொடரும்)

வரலாற்று நினைவுகளுடன் ராம்குமார்

Leave a Reply