ஐ.ஐ.டி-களில் மாணவர்கள் சேர்வதற்கு அகில இந்திய நுழைவுத்தேர்வில் தகுதி பெறுவதோடு, பிளஸ்-2 தேர்வில் குறைந்த பட்சம் 75 சதவீத மதிப் பெண் பெற்றிருப்பதும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி-யில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில் (செப்.22) நடைபெற்ற ஐஐடி-யின் 48-ஆவது கவுன்சில் கூட்டத்தில் இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஐஐடி-யில் சேர்ந்து படிக்கவிரும்பும் மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் பிளஸ்-2 தேர்வில் குறைந்த பட்சம் 1200-க்கு 900 மதிப் பெண்களுடனும், மத்திய கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) கீழ் பயிலும் மாணவர்கள் குறைந்த பட்சம் 500-க்கு 375 மதிப் பெண்களோடும் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

தேசிய தொழில்நுட்ப கல்லூரி (என்ஐடி.), இந்திய அறிவியல் கல்விநிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி.), ஐஐடி போன்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்க்கைபெற அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு (ஜேஇஇ) நடத்தப்படுகிறது.

முதலில் பிரதானத் தேர்வு (மெயின்), அடுத்ததாக முதன்மைத் தேர்வு (அட்வான்ஸ்ட்) என இரண்டு கட்டங்களாக இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

இதில் முதன்மைத் தேர்வில் தகுதிபெறுபவர்களில் முதல் 20 இடங்களைப் பெறுபவர்கள் மட்டுமே, ஐஐடி மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்கும் தகுதியைப்பெறுவர். மற்றவர்கள் தகுதிபெற இயலாது என்பதுதான் இதுவரை இருந்து வந்த நடைமுறையாகும். கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, அப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் இந்த நடைமுறையை 2013-இல் அறிமுகம் செய்தார்.

இதனால், பலமாணவர்கள் பிளஸ்-2 தேர்வில் மிக அதிக மதிப்பெண் பெற்றபோதும், நுழைவு தேர்வில் 20 இடங்களுக்குள் வர இயலாததால் ஐஐடி கலந்தாய்வில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துவந்தனர்.

பிளஸ்-2 மதிப்பெண்ணை கருத்தில் கொள்ளாமல் முழுவதும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் இந்த நடைமுறை நாடுமுழுவதும் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.

இந்த சர்ச்சைக்குத் தீர்வுகாணும் வகையில், ஐஐடி சேர்க்கை நடை முறையில் மாற்றம் கொண்டுவர ஐஐடி துணைக்கவுன்சில், மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

இந்த நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில் ஐஐடி 48-ஆவது கவுன்சில் கூட்டம் சென்னை ஐஐடி வளாகத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது. இதில் சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராம மூர்த்தி, கான்பூர் ஐஐடி இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலர் அசோக் தாக்குர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி:

ஐஐடி சேர்க்கை நடை முறையில் மாற்றம் கொண்டுவர கவுன்சில் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டு, அதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜே.இ.இ. முதன்மைத்தேர்வில் முதல் 20 இடங்களுக்குள் வருவதோடு, பிளஸ்-2 தேர்வில் குறைந்த பட்சம் 75 சதவீத மதிப் பெண் பெற்றிருப்பவர்கள் மட்டுமே ஐஐடி மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்கும் தகுதியைப்பெறுவர். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவு மாணவர்கள் பிளஸ்-2 தேர்வில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்றார் அவர்.

Tags:

Leave a Reply