சுமார் இருபது வருடங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் மாளிகையின் வாசலில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட நரேந்திர மோடி, இப்போது சிவப்புகம்பள வரவேற்புடன் வெள்ளை மாளிகையில் காலடி எடுத்துவைக்க உள்ளார்.

அமெரிக்க அரசு சார்பில் 'அமெரிக்கன் கவுன்சில் பார்யூத் பொலிடிக்கல் லீடர்ஸ் (ஏ.சி.ஒய்.பி.எல்)' எனும் பெயரில் ஓர் அமைப்பு நடத்தப்படுகிறது. இதன் சார்பில் அமெரிக்காவை புரிந்துகொள்ளும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளின் முக்கிய அரசியல் கட்சிகளை அழைத்து சிறப்புக்கூட்டம் நடத்தப்படுகிறது.

இந்த கூட்டத்துக்கு இந்தியாவிலிருந்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப் படுகிறது. இதை ஏற்று இருகட்சிகளும் மாநில கட்சித் தலைவர்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

கடந்த 1994-ல் நடந்த கூட்டத்துக்கு பாஜக சார்பில் குஜராத்மாநில பாஜக அமைப்புச் செயலாளராக இருந்த மோடி, ஆந்திர மாநில இளைஞர் அணித்தலைவராக இருந்த ஜி.கிஷண் ரெட்டி, கர்நாடகா மாநில இளைஞர் அணித் தலைவராக இருந்த அனந்த குமார் உள்ளிட்டோர் அமெரிக்காவுக்கு சென்றனர்.

அந்த சமயத்தில் மூவரும் அமெரிக்க அதிபரின் வெள்ளைமாளிகை வாசல் முன்பு நின்று எடுத்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ஜி.கிஷண் ரெட்டி கூறியதாவது:

'அந்த படம் எடுக்கும் போது எங்களுடன் இருந்த மோடி நம் நாட்டின் பிரதமராவார் எனவும் அதேமாளிகையின் சிறப்பு விருந்தினராக செல்வார் என நினைத்துக் கூட பார்த்தது இல்லை. எனினும் அப்போதே அந்தநாட்டை நம் நாட்டுடன் ஒப்பிட்டுபார்ப்பதில் மோடி அதிக ஆர்வம் காட்டினார். அங்கிருந்த லிபர்டி சிலை உட்பட பல விஷயங்களை பார்த்து அது நம் நாட்டில் செய்யப் படாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

அமெரிக்க அதிகாரிகளிடம் அந்நாட்டு அரசின் நிர்வாகங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை மோடி எழுப்பினார். அரசு கூட்டங்களை விட அங்கிருந்த குஜராத் மக்கள் நடத்திய கூட்டங்களில் அதிகமாக கலந்துகொள்ள வேண்டி இருந்தது. எங்களையும் அழைத்துசென்று அந்த கூட்டங்களில் மோடி பேசியதை நினைத்தால் இப்போது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

தற்போது தெலங்கானா மாநில பா.ஜ.க.,வின் தலைவராக இருக்கும் கிஷண் ரெட்டி, அந்தமாநில அம்பர்பேட் தொகுதி சட்ட சபை உறுப்பினராகவும் இருக்கிறார்.

சிறிய வகை பழைய கேமராவில் எடுத்த இருபது படங்கள் அவரிடம் இருந்துள்ளன. இப்போது மோடி அமெரிக்காவுக்கு செல்வதை ஒட்டி அதை எடுத்து பார்த்தபோது படங்கள் ஒன்றுடன் ஒன்றாக ஒட்டிக் கொண்டிருந்ததாம். அதில் இரண்டை மட்டும் பத்திரமாக எடுத்து பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார் ரெட்டி.

Leave a Reply