இந்தியாவின் உயிரி தொழில் நுட்ப துறை ஆண்டுக்கு 20 சதவீதம் என்ற அளவில் சிறப்பான வளர்ச்சியை எட்டும் என்று இத்துறை சார்ந்த நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். மருத்துவ துறையில், நோய் தடுப்பு மருந்துகளுக்கான தேவைப்பாடு அதிகரித்து வருவதால் இத்துறை நல்ல வளர்ச்சியடையும் என்று கூறப்படுகிறது.

எரிசக்தி துறை கண்டு வரும் முன்னேற்றம் உயிரி தொழில் நுட்ப துறை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என, பயோகான் நிறுவனத்தின் தலைவரான கிரண் மஜும்தார் ஷா தெரிவித்தார். பயோகான் நிறுவனம் வருவாய் அடிப்படையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக திகழ்கிறது.

தற்போது நம் நாடு சந்தித்து வரும் உணவு பாதுகாப்பு, எரிசக்தி பற்றாக்குறை, சுற்றுச்சூழல் பாதிப்பு, பூர்த்தியாகாத மருத்துவ தேவைகள் மற்றும் தொழிற்சாலைகள் ஏற்படுத்தி வரும் மாசு போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு உயிரி தொழில் நுட்ப துறை நல்ல தீர்வை வழங்க முடியும் என அவர் மேலும் கூறினார்.

இருப்பினும், இத்துறைக்கான சட்டங்களை உருவாக்குவது மற்றும் இறக்குமதி – ஏற்றுமதி போன்றவற்றில் காணப்படும் கால தாமதம், தேவையான துணிகர முதலீடு அதிகம் இல்லாத நிலை, இத்துறை நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிடுவதற்கான விதிமுறைகள் எளிதாக இல்லாதது போன்றவை வளர்ச்சியை தாமதப்படுத்தும் அம்சங்களாக உள்ளன.

கடந்த 2010 ஆம் ஆண்டில் உயிரி தொழில்நுட்ப துறை ஈட்டிய வருவாய் 350 கோடி டாலராகும். ரூபாய் மதிப்பில் இது ரூ.17,150 கோடியாக உள்ளது.

Tags:

Leave a Reply