ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், மத்திய அமைச்சர் சிதம்பரம் மற்றும் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா ஆகியோரின் பெயரையும் சேர்க்க வேண்டும் என சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.

ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, சென்னையில் நேற்று அளித்த பேட்டி:தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ., கட்சியின்

தாமரை சின்னத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் ஆதரிக்க, ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது. நான், 10 தொகுதிகளில் பிரசாரம் செய்கிறேன். இந்த தேர்தலில் எங்கள் கட்சிக்கு பிரதிநிதித்துவம் கிடைத்தால், அவர்கள் ஊழலுக்கு எதிராக போராடுவர். தேர்தலுக்குப் பின், தமிழக அரசியலில் புது திருப்பம் ஏற்படும். இப்போதைய கூட்டணிகள் ஏதும் அமையாது. அப்போது புதிய கூட்டணி ஏற்பட்டிருக்கும். அடுத்த முதல்வராக கருணாநிதியும் ஆக முடியாது; ஜெயலலிதாவும் ஆக முடியாது. அடுத்த முதல்வர் யார் என்பதை, அடுத்த புதிய கூட்டணி தீர்மானிக்கும்.லஞ்ச ஒழிப்பு, தீவிரவாதம், பொருளாதார ஏற்றம், தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்களில் தமிழர்களுக்கு நியாயம் வழங்குதல், கோவில் நிர்வாகத்தை அரசின் பிடியிலிருந்து விடுவித்தல், கோவில் ஊழியர்களை அரசு ஊழியர் ஆக்குவது, வீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொள்வோம்.

தி.மு.க., – காங்கிரஸ் – அ.தி.மு.க., ஆகியவை ஊழல், லஞ்ச நடவடிக்கைகளினால், தமிழர்கள் இன்று சுயமரியாதையை இழந்து நிற்கின்றனர். ஜனதா கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், தமிழர் பண்பாடு, பெருமை மீண்டும் நிலைநாட்டப்படும். “ஸ்பெக்ட்ரம்’ விவகாரத்தில், மத்திய அமைச்சர் சிதம்பரம், சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா ஆகியோரின் பெயரையும் சேர்க்க வேண்டும். இது தொடர்பாக நான் பிரதமருக்கு கடிதம் எழுதுவேன். கருணாநிதி மீது நான் கவர்னரிடம் கொடுத்துள்ள புகார் மனு குறித்து நடவடிக்கை எடுக்க, அவருக்கு மூன்று மாத அவகாசம் உள்ளது. தேர்தலுக்குப் பின், நான் கவர்னரிடம் அனுமதி பெற வேண்டிய தேவை இருக்காது இவ்வாறு சுப்பிரமணியசாமி கூறினார்.

Tags:

Leave a Reply