இந்திய மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரத்தில் இன்று பாரதீய ஜனதா சார்பில் கடல் முற்றுகை போராட்டம் நடந்தது. கடலுக்குள் இறங்க முயன்றவர்களை போலீசார் தடுத்ததால் “திடீர்” பதட்டம் ஏற்பட்டது.

இந்திய மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையினர்

அராஜகத்தை கண்டித்தும், அதை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்தும் ராமேசுவரத்தில் இன்று பாரதீய ஜனதா சார்பில் கடல் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலையில் ராமேசுவரம் துறைமுக பகுதியில் பாரதீய ஜனதா சார்பில் கடல் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்து கொள்ள நேற்று இரவு முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாரதீய ஜனதா தொண்டர்கள் வேன், கார், பஸ்களில் ராமேசுவரம் வந்து குவிந்தனர்.

கடல் முற்றுகை போராட்டத்திற்கு தேசிய செயலாளர் முரளிதர ராவ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவர் லெட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர்கள் சுப.நாகராஜன், சரவணக்குமார், மோகன்ராஜலு, கருப்பு (எ) முருகானந்தம் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன். தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே.முரளிதரன், மாநில செயலாளர்கள் சுரேந்திரன், பழனிவேல் சாமி, மாவட்ட தலைவர் சண்முகராஜா, பொதுச்செயலாளர் கார்மேகம், மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் சுந்தரமுருகன், நகர இளைஞரணி தலைவர் ராஜசேகர், செயலாளர் சிவராமன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராம்பிரசாத் உள்பட ஆயிரக்கணக்கான பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பாரதீய ஜனதா தொண்டர்கள் கடலுக்குள் இறங்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து தடுத்தனர். அதையும் மீறி தொண்டர்கள் நுழைய முயன்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. ஆனால் கடலுக்குள் இறங்க போலீசார் யாரையும் அனுமதிக்கவில்லை.

பாரதீய ஜனதாவின் கடல் முற்றுகை போராட்டத்தையொட்டி போலீஸ் சூப்பிரண்டு காளிராஜ் மகேஸ்குமார் தலைமையில் டி.எஸ்.பி. மணிவண்ணன் உள்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறும்போது, இதே நிலை நீடித்தால் கச்சத்தீவு சென்று அங்கு தேசிய கொடியை ஏற்றுவோம். அந்த இடத்தையும் கைப்பற்றுவோம் என்றார்.

Tags:

Leave a Reply