தென்னிந்திய நாட்டுப்புறத்தல் எளிய பழமொழி ஒன்றைச் சொல்வார்கள். அது வருமாறு :

நல்லவர் இருவர் குறுகிய நடைபாதை ஒன்றில் எதிர் எதிராக நடந்து சென்றால் மூன்று பாதைகள் இருக்கும். நல்லவர் ஒருவரே என்றால் இரண்டு பாதைகள் இருக்கும். இருவருமே கெட்டவர்கள் என்றால் ஒரு பாதை மட்டுமே இருக்கும்.

இதற்கு விளக்கம் தேவைப்படலாம். இருவரும் நல்லவர்களாயின், ஒவ்வொருவரும் அடுத்தவர் பாதையில் நடந்து செல்வதற்கு ஏதுவாகப் பாதையை விட்டுச் சற்று விலகி நடந்து செல்வார். அதனால் ஏற்கனவே இருந்த பாதையின் இரு பக்கத்திலும் புதியதாக இருபாதைகள் ஏற்படும். ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்சிரிப்புடன் வசதியாக நடந்து செல்வார்கள்.

ஒருவர் நல்லவராகவும், மற்றொருவர் கெட்டவராகவும் இருந்தால் நல்லவர் அடுத்தவருக்காகப் பாதையை விட்டு விலகி நடந்து செல்வார். ஆகையால் இரு பாதைகள் இருக்கும். இருவரும் கெட்டவர்களாக இருந்தால், “ஏய் நீ விலகிப் போடா”, “நான் ஏன் விலக வேண்டும்? நீ என்ன பெரிய கொம்பனா! நீ விலகிப் போடா” என்று சொல்லி, ஒருவரை ஒருவர் தள்ளுவான். எனவே ஒரே பாதைதான் இருக்கும்.

இந்தக் கதையின் கருத்து என்ன? நீங்கள் அமைதியை விரும்புகிறீரா; அப்படியானால் உங்களை மறந்து விடுக. முதலில் அடுத்தவரின் நன்மையைக் கருதுவீராக.

நான் உங்களுக்கு எவ்வாறு சேவை செய்வேன்? எவ்வாறு உங்கள் நலனைப் பெறுவேன்? என்று கேட்பீராக. இதுவே சரியான வழி. சேவையால் உடன்பாடு நிலவும். அன்பு செலுத்துக. சேவை செய்க. முதலிடம் அடுத்தவருக்கு. இத்தகைய மனப்பான்மை நிலவினால், அகில உலகமூம் அற்புதமான இடமாக விளங்கும்.

– சுவாமி சச்சிதானந்தா

Leave a Reply