“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழியை கருத்தில் கொண்டு, இயன்ற வரை நோய் இல்லா வாழ்வை மக்கள் பெறுவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னோடித் திட்டங்களை எனது அரசு செயல்படுத்தி வருகிறது என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். நோயை முற்றிலுமாக தவிர்ப்பது என்பது இயலாத ஒன்று ஆகும். எனவே தான், நோய் ஏற்படும் போது, அந்த நோயை நீக்குவதற்கான மருத்துவ வசதிகளை மக்களுக்கு அளித்து, அனைவருக்கும் நோயற்ற நல்வாழ்வு என்ற உயரிய இலக்குடன், சுகாதார சேவைகளை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், மக்கள் நல்வாழ்வுத் துறையால் செயல்படுத்தப்பட இருக்கும் சில புதிய திட்டங்கள் குறித்து இந்த மாமன்றத்தில் நான் தற்போது எடுத்துரைக்க விழைகிறேன்.

தற்போது மாநிலத்தில் உள்ள 1,589 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 1,539 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் சுகாதார சேவை அளிக்கக் கூடிய வகையில் செயல்பட்டு வருகின்றன. எஞ்சியுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில், விரைவில் மாற்றி அமைக்கப்படும். தரம்

உயர்த்தப்பட்ட 283 ஆரம்ப சுகாதார நிலையங்களில், முன்பே நிர்ணயம் செய்யப்பட்ட சிசேரியன் அறுவை சிகிச்சை, செய்வதற்கான வசதிகள் உள்ளன. திடீரென்று, அவசரமாக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யும் வசதி கிராமப்புறங்களில் இல்லை. இதனை நீக்கும் வகையில், முதற்கட்டமாக 42 தாய்-சேய் நல மையங்கள் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவசரகால சிசேரியன் அறுவை சிகிச்சை மற்றும் ரத்தம் செலுத்தும் வசதியுடன் 24 மணி நேரமும் இந்த தாய்-சேய் நல மையங்கள் செயல்படும். சுகாதார மாவட்டம் ஒவ்வொன்றுக்கும் ஒரு மையம் வீதம் இந்த 42 மையங்கள் அமைக்கப்படும்.

மேலும், தொலை தூரத்தில், எளிதில் சென்றடைய முடியாத நிலையில் உள்ள 31 துணை சுகாதார மையங்கள், முதல்நிலை தாய்-சேய் நல மையங்களாக தரம் உயர்த்தப்படும். முழு நேர சேவை அளிக்கும் வகையில், இந்த மையங்கள் ஒவ்வொன்றிலும், 3 செவிலியர்கள் பணி அமர்த்தப்படுவர். இவ்வாறு, 42 தாய்-சேய் நல மையங்களை அமைப்பதற்கும், 31 துணை சுகாதார மையங்களை தரம் உயர்த்துவதற்கும், 19 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

கிராமப்புற பெண்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை கொண்ட எனது அரசு, கிராமப்புற பெண்களின் நலனுக்காக புதிய திட்டம் ஒன்றைச் செயல்படுத்த முடிவெடுத்துள்ளது. கிராமப்புற பெண்கள் இடையே ஆரோக்கியமான நடைமுறைகளை கடைபிடிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வகையில் பரிசோதனை மேற்கொள்ளவும், இந்தத் திட்டம் வழி வகுக்கும். 2 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

மலைப்பகுதிகளில் 20,000 மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் எனவும், சமவெளிப் பகுதிகளில் 30,000 மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் எனவும் மத்திய அரசால் வரன்முறை செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில், இந்த ஆண்டு, 12 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் 20 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்படும். மேலும், மருத்துவ வசதி குறைவாக உள்ள 38 வட்டாரங்களில் உள்ள 38 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 30 படுக்கை வசதி, ஸ்கேன் வசதி மற்றும் அறுவை அரங்குகள் ஆகிய வசதிகளுடன், 39 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

இன்றைய நவீன யுகத்தில் அனைத்து துறைகளிலும் கணினியின் பயன்பாடு நீக்கமற நிறைந்துள்ளது. மருத்துவத் துறையிலும் கணினி பயன்பாடு மிகவும் இன்றியமையாதது ஆகும். நோயாளிகள் பல்வேறு துறைகளைச் சார்ந்த மருத்துவ வல்லுநர்களுடன் கணினி மூலம் நேரடியாகத் தொடர்பு கொண்டு, நோய்கள் குறித்த சந்தேகங்களை தீர்த்துக் கொண்டு சிகிச்சை பெறும் வகையில், கணினி வழி உரையாடும் வசதியை நான் எனது முந்தைய ஆட்சி காலத்திலேயே ஏற்படுத்தினேன். தொலைதூர கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு உயர் மருத்துவ ஆலோசனை கிடைக்கும் வகையில், 5 கோடி ரூபாய் செலவில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

தமிழக மக்கள் அனைவரும் நோயற்ற நல்வாழ்வு வாழ நல்ல பல திட்டங்களை நிறைவேற்றி வரும் அதே நேரத்தில், இந்தத் திட்டங்களின் பயன்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும் எனில், துணை சுகாதார மையங்கள் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை தேவையான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் ஓய்வு பெறுவதாலோ அல்லது பணியை விட்டு நீங்குவதாலோ ஏற்படும் காலி இடங்கள் மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்படும் பணி இடங்கள் ஆகியவை உடனுக்குடன் நிரப்பப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். மக்கள் நல்வாழ்வுத் துறையில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், மருத்துவமனை அடிப்படைப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் போன்ற பல்வேறு நிலைகளில் சுமார் 91,600 பணியிடங்கள் உள்ளன. இவற்றில், தற்போது 15,600-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இத்தகைய காலிப் பணியிடங்களுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், ஏற்படப் போகும் காலிப் பணியிடங்களை முன் கூட்டியே கணக்கிட்டு, பணியாளர்களை விரைந்து தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறை இல்லாதது தான் அதற்கு முக்கியமான காரணம் ஆகும்.

இந்த குறைபாட்டை நீக்கும் வகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக, மருத்துவத் துறை பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு என்று, “மருத்துவத் துறை பணியாளர் தேர்வு வாரியம்”, என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையில் இந்திய ஆட்சிப் பணியில் உள்ள கூடுதல் செயலாளர் இந்தத் தேர்வு வாரியத்தின் தலைவராக இருப்பார். மருத்துவத் துறை இணை இயக்குநர் நிலையில் உள்ள ஒரு அலுவலர் உறுப்பினராகவும்; மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள ஒரு அலுவலர் உறுப்பினர்-செயலாளராகவும் இருப்பர். வாரியத்திற்கு தேவையான இதரப் பணியாளர்களும் நியமிக்கப்படுவர். தேவைப்படும் பணியாளர்களை தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி இந்த மருத்துவத் துறை பணியாளர் வாரியம் தேர்வு செய்யும். தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவர்களையும் இந்த வாரியம் தேர்வு செய்யும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய விதிமுறைகளில் தக்க திருத்தம் மேற்கொண்ட பின், மருத்துவர்களுக்கான நிரந்தரப் பணியிடங்களும், இந்த தேர்வு வாரியத்தின் மூலமே நிரப்பப்படும்.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை தேர்வு செய்ய இது போன்ற தனி வாரியம் அமைக்கப்படுவதால், துணை சுகாதார மையங்கள் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை உள்ள மருத்துவமனைகளில் ஏற்படும் காலியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்

Tags:

Leave a Reply