1919 ம் ஆண்டில் ஜாலியன் வாலாபாக்கில் நடந்த கொடிய அடக்குமுறை சம்பவத்தைக் கேள்விப்பட்டார். அப்போது பகத்சிங் வயது 15 தான். ஒருநாள் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் அமிர்தசரஸ் நகருக்குச் சென்று ஜாலியன்வாலாபாக் மைதானத்தில் நுழைந்து, அந்தப் புண்ணிய பூமியில் மண்ணில் கொஞ்சம் அளி பொட்டலம் கட்டிக் கொண்டு ஊர் திரும்பினார். அந்த மண்ணை தினசரி பார்த்துக் கொண்டு, "அந்திய ஆட்சியை அகற்றியே

தீருவேன்" என சபதம் செய்து வந்தார்.

திருமணம் முடித்து வைத்தால் குடும்பப் பொறுப்பு ஏற்பட்டு புரட்சி இயக்கத்தில் கவனம் திரும்பாது என்று கருதிய அன்னையார், தந்தையிடம் கூற, தந்தை தனயனிடம் கேட்க, தனயனோ, அடிமை இந்தியாவில் இளைஞர்கள் திருமணம் பற்றி எண்ணுவதே பாவம். இனி ஒருமுறை என்னிடம் இது பற்றி பேச வேண்டாம்" என்று சொல்லி விட்டுப் போனவர், போனவர்தான். வீட்டிற்கே திரும்பவில்லை.

1928ல்பிரிட்டிஷ் அரசால் அனுப்பப்பட்ட சைமன் கமிஷன் லாகூர் நகரத்திற்கு வந்தது. "சைமன் கமிஷனே திரும்பிப் போ" என்று லாலா லஜபதிராய் தலைமையில் போராட்டம் நடந்தது.

சாண்டர்ஸ் என்ற போலீஸ் அதிகாரி, 62 வயது முதியவரான லாலா லஜபதிராய் மீது பாய்ந்து அவரைத் தாக்கினான். அதனால் பாதிக்கப்பட்ட லாலா லஜபதிராய் மரணம் அடைந்தார். லாலா லஜபதிராய் சாவுக்குக் காரணமாக இருந்த போலீஸ் அதிகாரி சாண்டர்ஸை பகத்சிங் சுட்டுக் கொன்றார். அது மட்டுமல்லாமல் டெல்லி சட்டசபைக் கூட்டத்தின் மையமண்டபத்தில் வெடிகுண்டுகளை வீசினான்.

பகத்சிங் உள்பட அவரது நண்பர்கள் 24 பேர் கைதானார்கள்.
பகத்சிங் மீது பிரிட்டிஷ் அரசைக் கவிழ்க்க சதி செய்தது லாகூர் போலீஸ் அதிகாரி சாண்டர்சை கொலை செய்தது.

ஆயுதம் ஏந்தி போராடியது – ராஜத்து ரோகம் என குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு விசாரணை நடைபெற்று தீர்ப்பை அறிவித்தார்கள்.
அதன்படி … பகத்சிங், சுகதேவ், ராஜகுரு மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

1931, மார்ச் 23 காலை 7.28. பகத்சிங் – ராஜகுரு சுகதேவ் ஆகிய மூவரையும் சிறை அதிகாரியும், மாவட்ட நீதிபதியும், ஒரு டாக்டரும் தூக்கு மேடையை நோக்கி அழைத்துச் சென்றனர்.

மூவரும் குளித்து, ஷேவிங் செய்து, மண மேடைக்குச் செல்லும் மாப்பிள்ளைகளைப் போல உற்சாகத்தோடு புறப்பட்டனர். பொதுவாக ஒரு கருப்புத் துணியால் முகத்தை மூடி அழைத்துச் செல்வார்கள். எதுவுமே வேண்டாம் என்று எந்தவிதமான படபடப்பும் இல்லாமல் சகஜமாகவே நடந்து சென்றனர்.

தூக்கு மேடையில் ஏறி நின்றதும், மூவரும் தூக்குக் கயிற்றைத் தொட்டு முத்தமிட்டு விட்டு தங்கள் கழுத்தில் தாங்களே தூக்குக் கயிற்றை எடுத்து மாட்டிக் கொண்டு, "பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக… பாரத் மாதா கீ ஜெய்" என்று முழங்கினர்.

தூக்குப் போடும் சிறை ஊழியர்கள் சுருக்குக் கயிற்றின் விசைகளைத் தட்டிவிட, ஒரு நொடியில் அந்த மூன்று மலர்களும் பொல, பொல வென்று பூமியில் உதிர்ந்து விட்டன. அடுத்த நாள் காலையில் லாகூர் நகரமே சிறைச்சாலை வாசலில் திரண்டது. தூக்கிலிடப்பட்ட அந்தத் தியாகத் திருமுகங்களை இறுதியாக தரிசிக்கும் ஆர்வம் கரை புரண்டது.

ஆனால் முதல் நாள் இரவே பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் உடல்களை சட்லெஜ் நதிக்கரைக்கு எடுத்துச் சென்று ஒரு புரோகிதரை அழைத்து அவசர அவசரமாக மந்திரம் ஓதச் செய்து எரித்து விட்டுச் சென்று விட்டனர். அந்த விவரத்தை சிறை அதிகாரிகள் சிறை வாசலில் எழுதி ஒட்டியிருந்தனர்.

அதைக் கண்ட மக்கள் ஆத்திரத்தோடு சட்லெஜ் நதிக்கரைக்கு ஓடினர். அந்த சாம்பலின் மீது விழுந்து இளைஞர்கள் புரண்டு அழுதனர். பெரியவர்கள் அஸ்திகளைச் சேகரித்து சட்லெஜ் நதியில் கரைத்தனர்.

கல்கத்தாவில் நடந்த கண்டனக் கூட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலந்து கொண்டு பேசும் போது அதிகம் பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க, "பகச்சிங்கும் புரட்சியும் வேறு வேறல்ல! பகத்சிங் என்றால் புரட்சி! புரட்சி என்றால் பகத்சிங்! வாழ்க பகத்சிங்" என்று கண்ணீர் மல்க பேசி அமர்ந்தார்.

tags; பகத் சிங், ஜாலியன் வாலாபாக், பகத்சிங்கின், பகத்சிங்கும்,  பகத்சிங்கை

Leave a Reply