தேசப் பிரிவினையை ஒட்டி, இந்திய – பாகிஸ் தான் எல்லைகள் வகுக்கப்பட்ட சமயம். எங்கும் கலகமும், அமைதியற்ற சூழ்நிலையும் நிலவியது. பாரதத்தின் எல்லையில், நகரங்கலிருந்து முற்றிலும் ஒதுங்கிய அடர்ந்த காட்டிற்கு அருகில் அமைந்துள்ள ஒரு கிராமம். அங்கு வீடுகளோ, ஆள் நடமாட்டமோ மிகவும் குறைவு. எல்லைக் காவல் படையினர் அவ்வப்போது ரோந்து சுற்றிவருவர் என்பதைத் தவிர, ஜனசந்தடி இல்லாத இடம்.

அக்கிரமத்தில்,ஒரு ஏழைப் பெண்மணி தனது மகளுடன் ஒரு குடிசையில் வசித்து வந்தார். பிழைப்புக்கு வேறு வழியில்லாத காரணத்தால், தனது குடிசையின் வாசலிலேயே சிறிய பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். அதில், பெட்டிக்கடைக்குரிய பொருள்களைத் தவிர டீ, காலைச் சிற்றுண்டி, மதிய உணவு ஆகியவற்றையும் அவர் விற்றார். அவ்வழியாகக் கடந்து செல்லும் ரோந்துப் படையினர் இக்கடைக்கு வந்து உணவருந்திச் செல்வது வழக்கம்.

ஒரு நாள் மாலை சுமார் ஐந்துமணி இருக்கும். கடையின் கதவை அடைக்கும் ஏற்பாடுகளை அந்தப் பெண்மணி செய்து கொண்டிருந்தார். அப்போது நான்கு இந்தியப் படைவீரர்கள் அங்கே வந்தனர். அவர்கள், சாப்பிட ஏதாவது தருமாறு கேட்டார்கள். பெகண்மணி, "எல்லாம் தீர்ந்துவிட்டது. சற்று நேரம் பொறுத்திருந்தால், தேநீர் தயாரித்துத் தருகிறேன்" என்றார். வீரர்களும், "எங்களுக்குப் பசியாக இருக்கிறது. தேநீராவது தந்தால் மிக உதவியாக இருக்கும். நாங்கள் சற்று நேரம் காத்திருக்கிறோம்" என்றனர்.

பெண்மணி உள்ளே சென்று தேநீர் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டார். படைவீரர்கள் வெளியில் கிடந்த பெஞ்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் சூடான தேநீருடன் அந்தப் பெண்மணி வெளியில் வந்தார். நால்வருக்கும் கண்ணாடிக் குவளைகளில் தேநீரை ஊற்றிக் கொடுத்தார். படைவீரர்கள் அருகில் நின்று கொண்டிருந்த நாய்க்கு சிறிது தேநீரைக் கொடுக்க முயன்றனர்.

அந்தப் பெண்மணி அவர்களைத் தடுத்தார். "நீங்கள் பசியாக இருக்கீறிர்கள். உங்களுக்குக் கொடுத்ததை அதற்குக் கொடுக்க வேண்டாம். பாத்திரத்தில் இன்னும் தேநீர் இருக்கிறது. நான் அதற்குக் கொடுக்கிறேன். நீங்கள் குடியுங்கள்" என்றார். பேசியபடியே பாத்திரத்திலிருந்து சிறிது தேநீரை எடுத்துக் குடித்தார். படைவீரர்களும் தங்களுக்குத் தரப்பட்ட தேநீரைக் குடித்துவிட்டு, நன்றி கூறிவிட்டுச் சென்றனர்.

மறுநாள் காலையில் பொழுது புலர்ந்தது. பாரத்தின் எல்லை காக்கும் வீரர்கள் ரோந்து சுற்றி வந்தனர். பாதையில் ஒரு பாரத வீரன் தலைகுப்புற விழுந்து இறந்து கிடப்பதைக் கண்டனர். இதனால் திடுக்கிட்ட வீரர்கள், மேலும் சிறிதுதூரம் நடந்து பார்த்தனர். சற்று தூரத்தில் மற்றொரு வீரன் இதே போல் இறந்து கிடந்தான். இது போல், சிறிது இடைவெளி விட்டு நான்கு படைவீரர்கள் இறந்து கிடப்பதைக் கண்டனர். நால்வரின் மரணம் இயற்கையாக நடந்ததாக இருக்க வழியில்லை. இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று தீர்மானித்த அவர்கள் காரணத்தைக் கண்டறிய விரும்பினர்.

இவர்கள் வழக்கமாக ரோந்து சுற்றிவரும் இடமாக இருந்த காரணத்தால் அருகிலுள்ள ஏழைப் பெண்மணியின் பெட்டிக்கடையை இவர்களுக்கு நன்றாகத் தெரியும். அவரிடம் சென்று கேட்டால் விவரம் கிடைக்கும் என்று நினைத்து ஏழைப் பெண்மணியின் கடையை நோக்கிச் சென்றனர்.

இவர்கள் சென்று பார்த்த போது, அந்தப் பெண்மணி இறந்து கிடந்தார். அவரருகில் அவரது மகள் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். வீரர்கள் மகளை அழைத்து, நடந்து என்னவென்று விசாரித்தனர். முதல் நாள் நடந்தவற்றைச் சிறுமி விளக்கினாள். தங்கள் சந்தேகம் ஊர்ஜிதமாகவே வீரர்கள் சென்று, இறந்தவர்களின் உடைகளைச் சோதனையிட்டனர். அதில் பாகிஸ்தானியர்களின் உளவாளிகள் அவர்கள் என்பதற்கான ஆதாரமும், சில குறிப்புகளும் இருந்தன.

இப்போது அவர்களுக்கு உண்மை விளங்கிவிட்டது. ஏழைப் பெண்மணி முதலில் இவர்களை பாரதப் படைவீரர்கள் என்றே நினைத்திருக்கிறார். அவர் தேநீர் தயாரித்த வேளையில், வெளியில் அமர்ந்திருந்த நால்வரும் தங்களுக்ளு பேசிக் கொண்டதை அவள்ள கேட்க நேர்ந்தது. அதன்மூலம், வந்திருப்பவர்கள் பாரத வீரர்கள் அல்ல என்பதையும், அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் விழாவில் உயிர்நாசத்தை ஏற்படுத்த வந்தவர்கள் என்பதையும் அவர் அறிந்து கொண்டார். இவர்களை உயிருடன் விட்டால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரிடும் என்பதை அறிந்த அவள், வீட்டில் வைத்திருந்த பூக்சிக்கொல்லி மருந்தைத் தேநீரில் கலந்து கொடுத்தார்.

அதில் விஷம் கலந்திருக்கலாம் என்ற சந்தேசத்தில் அவர்கள், அதை நாய்க்குக் கொடுத்து சோதித்து பார்க்க முயன்ற போது, அவர்களைத் தடுத்த அவர், அவர்களுக்குக் கொடுத்த தேநீர் பாத்திரத்திலிருந்து சிறிது தேநீரைத் தானே குடித்தார். இதனால் தைரியமடைந்த அவர்கள் தேநீரைக் குடித்தனர். அங்கிருந்து சென்ற சிறிது நேரத்திலேயே விஷம் வேலை செய்ய ஒவ்வொருவராக இறந்து விழுந்தனர்.

பலரை மரணத்திலிருந்து காப்பதற்காக, தனது ஒரே மகளின் எதிர்காலத்தைப் பற்றிக் கருதாமல் விஷத்தை அருந்திய அந்த நல்லிதயம் கொண்ட தாயும் மரணத்தைத் தழுவினார். பாரத வீரர்கள் அந்த வீரத்தாய்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது மகளைக் காக்கும் பொறுப்பைப் பாரத அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.

தேச பக்தி பாமரர்கள் மனதில் இன்றும் உயிர் வாழ்கிறது.

பாரத் மாதா கீ ஜெய்!

tags; தேச பக்தி, பாமரர்கள் மனதில்,

Leave a Reply