குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது குற்றம்சுமத்திய ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் குறித்த தகவல்கள் அண்மைக் காலமாக ஊடகங்களில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மாநில முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் எத்தகைய பின்னணியில் இவ்வாறு செயல்படுகிறார் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சஞ்சீவ் பட்டின் பணிப் பதிவேடு ஆரம்பம் முதலே சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது. பணிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிந்திருந்த நிலையில் 1990 நவம்பர் 18-ம் தேதி தனிநபர் அளித்த புகார் ஒன்றில் அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஜாம்நகரில் உதவி போலீஸ் எஸ்பியாக இருந்த காலத்தில் அதிகாரத்தை பயன்படுத்தியதாக தடா சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது புகார் கூறப்பட்டது. அதன் விளைவாக ஒருவரின் உயிரிழப்புக்கு அவர் காரணமாக இருந்திருக்கிறார். ஆக ஜனநாயகம் மற்றும் எதிர்ப்பு உரிமை குறித்து தைரியமாகப் பேசிவரும் பட், அந்த இரண்டையும் நசுக்கிய தனது செய்கைகளை வசதியாக மறந்துவிட்டார்.

அதற்கும் மேலாக, குஜராத்தில் பானஸ்கந்தா எஸ்பியாக பணியாற்றியபோது போதைப்பொருள் வழக்கில் ராஜஸ்தான் வழக்கறிஞர் ஒருவரை தவறாகக் குறிப்பிட்டதால் அந்த மாநில வழக்கறிஞர்களின் கோபத்துக்கும் ஆளாகி இருக்கிறார்.

குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஆர்ஆர். ஜெயினின் சகோதரி வீட்டில் குடியிருந்த ராஜ்புரோகித் என்ற வழக்கறிஞரை காலி செய்ய வைக்க சஞ்சீவ் பட் முயன்றுள்ளார். அதற்காக பலன்பூரில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் 1 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை தனது உதவியாளர்கள் மூலம் வைத்துவிட்டு அந்த அறையில் ராஜ்புரோகித் இருந்தது போன்று காட்ட முயன்றார். ஆனால் ராஜ்புரோகித் அப்போது பாலியில் இருந்தார். இதனால் சஞ்சீவ் பட்டின் அறிவுரையின்படி பானஸ்கந்தா போலீசாரால் பாலியில் இருந்து ராஜ்புரோகித் கடத்தி வரப்பட்டு பலன்பூருக்கு கொண்டுசெல்லப்பட்டார். அப்போது அந்த வீட்டைக் காலிசெய்யாவிட்டால் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் வழக்குப் பதிவுசெய்வேன் என்று சஞ்சீவ் பட் அவரை மிரட்டியுள்ளார். அந்த வழக்கறிஞரும் அப்போது அதற்கு ஒப்புக்கொண்டார். இதையடுத்து 7 நாட்கள் காவலுக்கு அனுப்பப்பட்ட ராஜ்புரோகித் 5 நாட்களுக்குப் பின்னர் சஞ்சீவ் பட்டின் உத்தரவின்பேரில் விடுவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இதுதொடர்பாக பாலி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சஞ்சீவ் பட்டுக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தனர்.

மேலும் அவருக்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு ஒன்றும் பதிவுசெய்யப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது எப்படி ஒருவரை பதவி உயர்த்த முடியும். கறைபடிந்த அரசு ஊழியர்களை பதவி உயர்த்த முடியாது என சட்டம் உள்ளது தெரிந்திருந்தும் அவரது அரசு விரோத மனப்பான்மை புதிரானது.

சஞ்சீவ் பட் பானஸ்கந்தா எஸ்பியாக இருந்தபோது ஆள்சேர்ப்பு நடைமுறையிலும் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றது. அதிலும் சஞ்சீவ் பட்டின் பெயர் சர்ச்சையில் அடிபட்டது.

போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வுகளில் வெற்றிபெற்றிருந்த நபர்களின் பதிவேடுகளை பராமரிக்கவில்லை என்பது உள்ளிட்ட வழக்கமான நடைமுறைகளை அவர் பின்பற்றவில்லை. ஒருங்கிணைந்த தேர்வுக்காக ஆயுதம் மற்றும் ஆயுதம் அல்லாத கான்ஸ்டபிள்களை தனித்தனியாக தேர்வுசெய்வதில் அவர் சரியான நடைமுறையைப் பின்பற்றவில்லை. இந்த விஷயத்தில் டிஜிபியின் உத்தரவை அவர் மீறியுள்ளார்.

இதனால் தகுதியில்லாத நபர்களுக்கு இரண்டாவது நிலைக்கு செல்ல வாய்ப்பளிக்கப்பட்டது மற்றும் தேர்வு எழுதுபவர்களின் முக்கிய விவரங்கள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் அனைத்தும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது மற்றும் அலட்சியம் ஆகியவற்றை தெளிவாகக் குறிப்பிடுகிறது.

2002 பிப்ரவரியில் முதல்வரால் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு அங்கு சென்றேன் என பட் கூறுகிறார். இது பொய்யானது என்று மக்கள் மட்டும் கூறவில்லை. அப்போது நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் உண்மையிலேயே பங்கேற்ற 7 அதிகாரிகளும் கூறுகின்றனர்.

2007 இறுதிவரை எஸ்பி அந்தஸ்தில் இருந்த சஞ்சீவ் பட், அப்போது உயர்பதவியில் இல்லாதநிலையில் எப்படி உயர்மட்ட அளவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்றிருக்க முடியும் என கேள்வி எழுப்புகின்றனர்.

சமீபகாலமாகக் கூட பொய்களும், சர்ச்சைகளும் சஞ்சீவ் பட்டை பின்தொடர்கின்றன. குஜராத் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் அவர் தொடர்ந்து தொடர்பு வைத்திருக்கிறார். அவர்களிடம் இருந்து உபகரணங்களை வாங்கியுள்ளார் என்று பட் மீது புகார் கூறப்படுகிறது. மேலும் குஜராத் முதல்வருக்கு எதிராகப் போராட ஒரு கையெழுத்து பிரசாரத்தைத் தொடங்க தனக்கு உதவுமாறு முதல்வருக்கு எதிராக செயல்படும் ஷபனம் ஆஸ்மி மற்றும் ஃபாதர் செட்ரிக் பிரகாஷ் ஆகியோரிடம் சஞ்சீவ் பட் வேண்டுகோள் விடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி சஞ்சீவ் பட் ஜூனாகட்டில் எஸ்ஆர்பி பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார். ஆனால் அங்கு சென்று பணியாற்ற மறுத்ததுடன் அலுவலக வாகனத்தையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். நோட்டீஸ் அளிக்காமல் விடுமுறை எடுப்பது குற்றம் அல்ல எனில் அவர் அப்பாவிதான். ஆனால் உத்தரவுக்கு அரசு ஊழியர்கள் கண்டிப்பாக கட்டுப்பட வேண்டும் என்று சில விதிமுறைகள் உள்ளன. மக்களுக்கு சேவைசெய்ய தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகள் பணிக்கு சென்று ரிபோர்ட் செய்ய மறுத்துவிட்டு அந்த பணிக்கான சலுகைகளை தொடர்ந்து பயன்படுத்துவது துரதிருஷ்டவசமானது. இது பொதுமக்களின் நம்பிக்கைக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

இப்போது அவரைக் கைது செய்வதிலும் சில எச்சரிக்கையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 2002 வன்முறைகள் தொடர்பாக குஜராத் முதல்வருக்கு எதிராக தவறான பிரமாணப் பத்திரங்களில் கையெழுத்திடுமாறு கான்ஸ்டபிள் ஒருவரை மிரட்டிய செயல் கடுமையான குற்றமாகும். பந்த் அப்போது சஞ்சீவ் பட்டின்கீழ் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செயல்களின்மூலம் சஞ்சீவ் பட்டின் நடுநிலைத்தன்மை மீது மக்களுக்கு கேள்வி எழுந்துள்ளது.

Tags:

Leave a Reply