கடந்த 2 ஆண்டுகளாக தனித்து நிற்போம், ஆட்சியை பிடிப்போம் என வசனம் பேசி வந்தார்கள் காங்கிரஸ் தலைவர்களாக தங்களை பிரகடனப்படுத்திக்கொள்ளும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ் போன்றோர்.

அதிக சீட் தரவில்லையென்றால் தனித்து களம் காண்போம் எனபேசி கடந்த சட்ட மன்ற தேர்தலில் 63 சீட்களை திமுகவிடம் இருந்து மிரட்டி

காங்கிரஸ் வாங்கியது. திமுக ஆட்சியை இழக்க இதுவும் ஒரு காரணமாகிவிட்டது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தலைவர்களின் தனியாக ஆசையை ஏன் தடுக்க வேண்டுமென அதை கழட்டி விட்டுவிட்டு தனித்து களம்மிறங்கி விட்டது திமுக. கை விலங்குகள் உடைக்கப்பட்டன என இளங்கோவன் அறிக்கை விட்டார்.

ஆனால் காங்கிரஸ் தொண்டர்கள் ஆத்திரத்தின் உச்சத்தில் உள்ளார்கள். நூற்று ஐம்பதுக்கும் அதிகமான நகராட்சி தலைவர் பதவிகள், ஆயிரத்துக்கும் அதிகமான நகராட்சி வார்டுகள், லட்சத்துக்கும் அதிகமான ஊராட்சி வார்டுகள், 10 மாநகராட்சிகள் என உள்ள பதவிக்கு வேட்பாளர்களான நிறுத்த ஆள் இல்லாமல் காங்கிரஸ் தலைவர்கள் தடுமாறிவிட்டார்கள்.

உதாரணமாக, வேலூர் மாநகராட்சி 60 வார்டுகளை கொண்டது. இதில் 25 வார்டுகளுக்கு கூட காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்த முடியவில்லை. சுயேட்சையாக போட்டியிடுபவர்களிடம் நீங்க எங்க சின்னத்துல நில்லுங்க என முன்னால் எம்.எல்.ஏ ஞானசேகரன் கெஞ்சினார். உங்க சின்னத்தல நின்னா எங்களுக்கு விழற ஒட்டுக்கூட விழாது என துரத்திவிட்டார்கள்.

அதேபோல் மாநகர மேயர் வேட்பாளராக நிறுத்த ஆள் இல்லாமல் 7 மாத கர்ப்பிணியான தேவி என்ற பெண்மணியை நிறுத்தியுள்ளது காங்கிரஸ். இத்தனைக்கும் 10 ஆண்டுகளாக வேலூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர்கள் காங்கிரஸ் ஞானசேகரன். இதேபோல் தான் நெல்லை, சேலம், மதுரை, ஈரோடு போன்ற மாநகராட்சியிலும்.

இதை விட கொடுமை தலைவர்கள் பிரச்சாரம். கடந்த 8ந்தேதி வேலூருக்கு பிரச்சாரம் செய்ய மத்தியமைச்சர் ஜி.கே.வாசன் வந்தார். அந்த கூட்டத்தில் காங்கிரஸார் உட்பட மொத்தமே 120 பேர் தான் இருந்தனர்.

இதுப்பற்றி காங்கிரஸ் தொண்டர்களிடம் பேசியபோது, மைக் கிடைக்குதுங்கறதுக்காக என்ன வேண்டுமானாலும் பேசக்கூடாதுங்க. இன்னைக்கு இருக்கற காங்கிரஸ் எம்.பிங்க, எம்.எல்.ஏங்க எல்லாருமே திமுக தயவால வந்தவங்க. கூட்டணி வைக்கறதால மட்டுமே எங்களாள பதவிக்கு வர முடியும். இல்லன்னா ஒரே ஒரு வார்டு கவுன்சிலர் பதவி கூட எங்களால பிடிக்க முடியாது. அப்படித்தான் கட்சி பல வருஷமாயிருக்கு. இது தலைவர்களுக்கும் நல்லாவே தெரியும்.

ஆனா, திராவிட கட்சிகளை ஏமாத்தி இத்தனை நாளா கூட்டணி வச்சிக்கிட்டோம். இந்த தேர்தல்ல எங்களோட வண்டவாளம், தண்டவாளம் ஏறும் பாருங்க. இளங்கோவன், யுவராஜ் எல்லாம் சும்மா வாய் வீரர்கள். அவுங்களுக்கு கவலையில்ல;உழைக்கற எங்களுக்கு தானே உள்ளாட்சி தேர்தல் கவலை என்றார் வேதனையோடு.

Tags:

Leave a Reply