தனி தெலங்கானா கனவை புத்தாண்டுக்குள் நனவாக்க வேண்டுமென சோனியா காந்திக்கு பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வேண்டுகோள் விடுத்தார்.

தனது யாத்திரையின் ஒருபகுதியாக புதன்கிழமை இங்கு வந்துசேர்ந்த அத்வானி, செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார். அவர் மேலும் கூறியதாவது:

2012-ம் ஆண்டுவாக்கில் தெலங்கானா மக்களின் நீண்டகால ஆசை நிறைவேறும் என நான் கருதுகிறேன். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் உறுதியான முடிவெடுத்தால், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலேயே இதற்கான மசோதாவைத் தாக்கல் செய்ய முடியும். அதன்மூலம் 2012 ஜனவரி 1-ம் தேதி தனி தெலங்கானா மலரும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது வாக்குறுதிகளைக் காப்பாற்றவில்லை. மாறாக, தெலங்கானா பிராந்தியத்தை துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. முடிவெடுக்க முடியாமல் தவிப்பதைக் கைவிட்டு வரும் புத்தாண்டுக்குள் தனி தெலங்கானாவை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

15 நாள்களில் தனி தெலங்கானா மாநிலத்தை உருவாக்குவோம் என முன்னாள் உள்துறை அமைச்சர் உறுதியளித்தார். ஆனால், அந்த உறுதியிலிருந்து மத்திய அரசு பின்வாங்கியது. அதனால், கடந்த 60 ஆண்டுகளில் நாட்டின் எப்பகுதியிலும் இல்லாத அளவுக்கு தெலங்கானா பகுதி பாதிக்கப்பட்டது. மத்திய அரசு முடிவெடுக்காத ஒரே காரணத்தால் இளைஞர்கள் தற்கொலைக்கு ஆளாகின்றனர் என்பது அதிர்ச்சி தரத்தக்க செய்தியாகும்.

நாடாளுமன்ற மசோதாவே போதும்: தனித் தெலங்கானா மாநிலம் உருவாக ஆந்திர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டிய அவசியமில்லை. நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்தாலே போதுமானது. ஒரு தனி மாநிலம் உருவாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென அண்மைக்காலமாகக் கூறப்படுகிறது. இது தேவையற்றது. இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் அவ்வாறு ஏதும் குறிப்பிடப்படவில்லை.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலிருந்தபோது, ஜார்க்கண்ட், உத்தரகண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அப்போது பழைய மாநிலங்களின் 2 முதல்வர்கள் மாநிலப் பிரிப்புக்கு வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் 3வது பிரிவின் கீழ், புது மாநில உருவாக்கம் என்பது நாடாளுமன்றத்தின் பொறுப்பாக வருகிறது.

எனவே, நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால், சட்டப்பேரவைத் தீர்மானம் இன்றியே தனி மாநிலத்தை உருவாக்க முடியும். குறிப்பாக, தெலங்கானா பிரச்னையைப் பொறுத்தவரை, முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் ஆதரிப்பதால் நாடாளுமன்றத்தில் தனி தெலங்கானா மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது.

எங்கள் கட்சியைப் பொருத்தவரை, தனி தெலங்கானா கோரிக்கை நியாயமானதுதான். எங்களது ஆட்சியின்போது சிறு முணுமுணுப்பு கூட இல்லாமல் 3 புதிய மாநிலங்கள் உருவாயின என்பதை மறந்துவிடக்கூடாது.

ஒன்றுபட்ட ஆந்திரத்தை விரும்பும் மக்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். அதேநேரத்தில், நிர்வாக வசதிக்காக சிறிய மாநிலங்கள் உருவாக்கப்படுவதை பாரதிய ஜனதா வரவேற்கிறது.

தனி தெலங்கானா உருவாவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் என்பதாக செய்திகள் வருகின்றன. நம்பிக்கை ஒளிக்கீற்று தெரிகிறது. பத்திரிகைச் செய்தி உண்மையானால் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால், இப்போதைய மத்திய அரசு குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. அது முடிவெடுக்கும் திறனை இழந்து விட்டது.

வன்முறைக்கு இடமில்லை: அண்ணா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கேஜரிவால் மீது செருப்பு எறியப்பட்ட சம்பவம் தவறான ஒன்றாகும். ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை.

பாஜக எம்.பி.களை விடுவிக்க வேண்டும்: வோட்டுக்குப் பணம் வழங்கப்பட்ட வழக்கில் கைதான பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்கûளை விடுவிக்க வேண்டும். அவர்கள் நடக்கவிருக்கும் தவறை அம்பலப்படுத்தினார்கள். அண்மையில்தான் ஊழல் தொடர்பான விஷயங்களை பகிரங்கப்படுத்துவோரைப் பாதுகாக்கும் விதத்தில் சட்டம் கொண்டுவரப்படும் என்று பிரதமர் கூறியிருந்தார். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தங்களை விலைக்கு வாங்க முயன்றதை அம்பலப்படுத்திய எங்கள் கட்சி எம்.பி.க்கள் இப்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றார் அத்வானி.

{qtube vid:=hnR1YrkJyEU}

Tags:

Leave a Reply