உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மகத்தான வெற்றியையும் சந்தோஷத்தையும் கொடுத்திருப்பது அ.தி.மு.க.வை விட பாரதீய ஜனதா கட்சிக்குத்தான் அதிகம். பா ஜ க இரண்டு நகராட்சி தலைவர் பதவியையும், 13 பேரூராட்சி தலைவர் பதவிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்தத் தேர்தலில் , தி.மு.க. அ.தி.மு.க. போன்ற முக்கிய கட்சிகள் தனித்து போட்டி என்றவுடன் ஓசி சவாரி செய்த கட்சிகள் எல்லாம் பரபரப்படைந்தன , ஆனால் எந்த வித பரபரப்பும் இன்றி வேட்ப்பாலர்களை அமைதியாக அறிவித்த கட்சி பா ஜ க மட்டுமே .

காரணம், பா ஜ க சட்டசபை தேர்தலிலிருந்து இவ்விரு கூட்டணியிலும் இருக்கவில்லை. எந்த கட்சி எந்த கூட்டணி யிலிருந்து எந்த கட்சியை கழட்டி விட்டாலும், இந்த கட்சிக்கு கவலையும் இல்லை!

பாரதீய ஜனதா கட்சி ஜெயித்துள்ள இரு நகரசபைத் தலைவர் பதவிகளில் ஒன்று மேட்டுப்பாளையம். மற்றையது நாகர்கோவில். இந்த இரண்டிலும் பா.ஜ.க.வின் வெற்றியை, எந்தக் கூட்டணி தொடர்ந்திருந்தாலும் அசைத்திருக்க முடியாது.

அது எப்படி? இதோ, இந்தக் கணக்கைப் பாருங்கள்.

நாகர்கோவில் நகராட்சியில் வெற்றிபெற்ற பா.ஜ.க வேட்பாளர் மீனா தேவ் பெற்ற வாக்குகள், 38,074. இவருக்குப் பின் வந்த மற்றைய வேட்பாளர்கள் பெற்ற வாக்குக்களைப் பாருங்கள் – டாரதி சாம்சன் (அ.தி.மு.க.)- 28,480. மேரி ஜெனட் விஜிலா (தி.முக.) 26,326 ஐரின் சேகர் (காங்கிரஸ்) – 11,363 ஷைலா கோல்டு ஏஞ்சலின் (தே.மு.தி.க.) – 5,865

சட்டசபைத் தேர்தலில் இருந்த அ.தி.மு.க. கூட்டணி தொடர்ந்து இருந்தால், அவர்களது வேட்பாளருக்கு, அ.தி.மு.க. மற்றும், தே.மு.தி.க. வாக்குகள் சேர்ந்து விழுந்திருக்கும். இம்முறை அ.தி.மு.க. (28,480) தே.மு.தி.க. (5,865) தனித்தனியே பெற்ற வாக்குகளைக் கூட்டினால், வரும் 34,345 வாக்குகளைவிட பா.ஜ.க. பெற்ற 38,074 வாக்குகள் அதிகம். ஆனால், தி.மு.க. கூட்டணி தொடர்ந்திருந்தால், தி.மு.க. (26,326), காங்கிரஸ் (11,363) வாக்குகளைக் கூட்டினால் வரும் 37,689 தொகையைவிட பா.ஜ.க. பெற்ற வாக்குகள் அதிகம்!

மேட்டுப்பாளையத்தின் கணக்கைப் பாருங்கள்.

மேட்டுப்பாளையம் நகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் சதீஷ்குமார் பெற்ற வாக்குகள், 11,326. இவருக்கு அடுத்தபடியாக வந்தவர்களுக்கு கிடைத்த வாக்குகளைப் பாருங்கள்- நாசர் (அ.தி.மு.க.) 9,495, அப்துல் ஹமீது (தி.மு.க.) 5,833, சத்தியவதி (காங்கிரஸ்) 2,101 ஜாபர் சாதிக் (தே.மு.தி.க.) 1,456. மின்னல் சிராஜ் (பா.ம.க.) 737.

அ.தி.மு.க., தே.மு.தி.க. பெற்ற வாக்குகளை கூட்டினாலும் பா.ஜ.க.வை ஜெயித்திருக்க முடியாது. தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. பெற்ற வாக்குகளைக் கூட்டினாலும், அசைத்திருக்க முடியாது.

அட, வெறும் இரண்டே இரண்டு நகராட்சித் தலைவர்களை பா.ஜ.க. பெற்றது பற்றி இவ்வளவுக்கு சிலாகித்து எழுத வேண்டுமா என்று கேட்கிறீர்களா? அப்படியானால், இதையும் பாருங்கள்-

கூட்டணி அமைத்து போட்டியிட்ட தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி தே.மு.தி.க. ஜெயித்த நகராட்சித் தலைவர் பதவிகளின் எண்ணிக்கையும் இரண்டுதான். அகில இந்தியக் கட்சியான மாக்சிஸ்ட் கட்சி பெற்றதும் இரண்டுதான். ம.தி.மு.க. பெற்றது ஒன்று. பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை பெற்றது பூச்சியம்.

மத்தியில் இந்த பா.ஜ.க. எதிர்க்கட்சியாக இருக்க, ஆளும் கட்சியாக ஆட்சி செய்யும் காங்கிரஸ், தமிழகத்தில் பெற்றதும் பூச்சியம்தான்!

Tags:

Leave a Reply