அடுத்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் சீனாவை இந்தியா விஞ்சும் என எர்னஸ்ட் – யங்க் என்ற சர்வதேச ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்தில் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா உள்ளிட்ட 25 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி 2013-ஆம் ஆண்டில் நம் நாட்டின் பொருளாதாரத்தில் 9.5 சதவீத வளர்ச்சி ஏற்படும் என்றும் சீனாவில் இது 9 சதவீதமாக இருக்கும் எனவும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரம் தற்சார்புடையது. இந்தியாவுடன் ஒப்பிடும்போது சீனா அதன் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதியை அதிக அளவில் நம்பி உள்ளது. கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் கடன் சுமையில் சிக்கி தவிக்கின்றன.

அமெரிக்காவிலும் பொருளாதார பின்னடைவு ஏற்படும் என்ற அச்சப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் சீனாவில் பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் அடுத்த மூன்று ஆண்டுகளில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்து இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்கும் என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பணவீக்கம் அதிகமாக இருப்பது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. சென்ற 2010-ஆம் ஆண்டில் நாட்டின் பொருளா தார வளர்ச்சி 8.2 சதவீதமாக இருந்தது.

பணவீக்கம் காரணமாக இது இவ்வாண்டில் 7.2 சதவீதமாக குறையும் என மதிப்பிடப் பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் பணவீக்கம் கட்டுப்படும் எனவும் அப்போது பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாகவும், 2013-ல் 9.5 சதவீதமாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply