மத்திய அரசாங்கம் ஊழலில் மூழ்கியுள்ளதால், முடிவுகள் எடுக்க முடியாத அளவிற்கு முடங்கியுள்ளது,” என, முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி பேசினார்.

மதுரையில் பா.ஜ., சார்பில் ஊழலுக்கு எதிராகவும், கருப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி, நடந்த மக்கள் விழிப்புணர்வு யாத்திரை பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: இந்த யாத்திரையின் நோக்கம் மத்திய அரசின் ஊழல் மற்றும் நாட்டின் வளத்தை சூறையாடி

வெளிநாடுகளுக்கு எடுத்து சென்றது தான். ஆங்கிலேயர்கள் 200 ஆண்டுகள் இந்திய வளத்தை கொள்ளையடித்தார்கள். இந்தியர்களின் திறமையை அவர்கள் வெளிக்காட்டவிடவில்லை. அவர்கள் கொள்ளையடித்ததை கணக்கிட்டால் ரூ. ஒரு லட்சம் கோடியை தாண்டாது. இந்தியா 1947ல் சுதந்திரம் அடைந்தது. நாடு முன்னேறும் என்று மக்கள் நம்பினர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. மாறாக வரிஏய்ப்பில் கொள்ளை அடித்ததை சுவிஸ் வங்கியில் போட்டனர். அங்கு உள்ள வங்கிகளின் சட்டம் இவர்களுக்கு பாதுகாப்பாக இருந்துள்ளது. சுவிஸ் வங்கி அந்த பணத்தை அழுக்கு பணம் என்றது. சுவிஸ் வங்கி ஒரு ஆய்வு நடத்தியது. அதில் ஆங்கிலேயர்கள் 200 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடித்தார்கள் என்றால், 60 ஆண்டுகளில் இவர்கள் 25 லட்சம் கோடிக்கு கொள்ளை அடித்துள்ளனர், என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து நாங்கள் சுவிஸ் வங்கியில் கேட்ட போது, எங்கள் நாட்டு சட்டம் இவ்வாறு உள்ளது. அதனால் எங்களிடம் கேட்க கூடாது, என்றனர். ஆனால் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் ஊழலுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவந்த பின் சூழ்நிலை மாறியுள்ளது. எனவே பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வெளிநாட்டு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வரவேண்டும் என கடிதம் எழுதினேன். ஆனால் நடவடிக்கை இல்லை. எனவே மக்கள் மூலம் அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க இந்த யாத்திரை மேற்கொண்டுள்ளேன். உலக நாடுகளின் நிர்பந்தம் உள்ளதால், சுவிஸ் பார்லியில் ஒரு சட்டம் கொண்டுவந்துள்ளனர். சட்ட விரோத பணத்தை திருப்பி அனுப்ப தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். இந்த யாத்திரைக்கு நாடுமுழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இதற்கு காரணம், இந்திய பணம் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரவேண்டும் என்பதால் தான். 1952 முதல் அனைத்து பிரதமர்களையும், அதிகாரிகளையும் பார்த்துள்ளேன். அதில் இந்த அரசாங்கம் தான் ஊழலில் மூழ்கியுள்ளது. இதனால் நாடே முடங்கியுள்ளது. யாத்திரையின் எழுச்சிக்கு காரணம் ஊழலுக்கு எதிராக மக்களின் கோபம், நம்நாட்டு பணம் வெளிநாட்டில் பணம் உள்ளது தான்.

ரூ.25 லட்சம் கோடியை இந்தியாவிற்கு கொண்டு வந்தால், அதை நகரங்களில் முதலீடு செய்யாமல், கிராமங்களில் முதலீடு செய்யவேண்டும். அவ்வாறு கொண்டு வந்தால் இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களில், ஒரு கிராமத்தில் கூட குடிநீர், மின்சாரம், ஆஸ்பத்திரி, நிலங்களுக்கு தண்ணீர் இல்லை என்ற நிலை வராது. இந்த அரசு முடிவு எடுப்பதில் முடங்கி கிடக்கிறது. இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும் என்றனர். ஆனால் இங்கு உள்ள வெளியுறவு துறை அமைச்சர் அங்கு மக்களின் முன்னேற்றம் மந்தமாக உள்ளது, என்கிறார். கூடங்குளம் அனுமின்நிலைய விஷயத்தில் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படவேண்டும். குறிப்பாக கடற்கரை ஓரம் உள்ள அணுமின்நிலைய விஷயத்தில் எச்சரிக்கையோடு செயல்படவேண்டும். ஆனால் இங்கு வர்த்தக ரீதியாக சிந்திக்கும் அரசு தான் உள்ளது. எனவே மக்கள் பாதுகாப்பு பற்றி சிந்தித்து முடிவெடுக்க முடியாமல் உள்ளனர். பா.ஜ., தமிழக மீனவர் பிரச்னையில் தீவிரமாக அணுகுகிறது. இது உள்ளூர் பிரச்னை அல்ல. நாட்டின் பாதுகாப்பு பிரச்னையாகும். இந்திய மீனவர்களை இலங்கை ராணுவம் கொல்வதை அனுமதிக்க முடியாது, என்றார்.

தேசிய பொது செயலாளர் ரவி சங்கர் பிரசாத், தேசிய செயற்குழு உறுப்பினர் இலகணேசன். மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், செயலாளர் சுரேந்திரன், நகர் தலைவர் ராஜரத்தினம், மருத்துவர் அணி மாநில தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் ரவிபாலா, பிரபாகரன், கார்த்திக் பிரபு, முன்னாள் நகர் தலைவர் முரளி பங்கேற்றனர்.

Tags:

Leave a Reply