போலி என்கவுண்டரில் தனது நண்பரை கொலை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் எம். அப்துல்லா தாக்கல் செய்த ஆள் கொணர்வு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

எனது நண்பர் பக்ருதீனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த நவம்பர்

2-ம் தேதி சென்னை ஆலந்தூரில் கைது செய்தனர். எனினும், இதுவரை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை.

எனது நண்பரை போலீசார் சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளனர். அவரை போலி என்கவுண்டரில் கொலை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக எனக்கு தெரிய வந்துள்ளது.

எனவே, பக்ருதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அப்துல்லா வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சி. நாகப்பன், டி. சுதந்திரம் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த மனு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர். பா.ஜ.க. தலைவர் அத்வானி ரத யாத்திரை மேற்கொள்ளும் வழியில், அதாவது திருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தில் பாலத்தின் அடியில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டதாகக் கூறி, திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய எஸ். அப்துல்லா, ஆர். இஸ்மாத் ஆகியோர் கடந்த நவம்பர் 1-ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், இந்த சம்பவத்தில் பக்ருதீன் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறினர்.

எனவே, பக்ருதீனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வருகின்றனர். எனினும், இதுவரை அவர் தலைமறைவாகவே உள்ளார்.

இந்நிலையில், பக்ருதீனை கைது செய்ததாகவும், அவரை சட்ட விரோத காவலில் அடைத்து வைத்துள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் அப்துல்லா கூறியுள்ளார். இதில் எவ்வித உண்மையும் இல்லை. இதுவரை நாங்கள் பக்ருதீனை கைது செய்யவில்லை என்று அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அப்துல்லா தாக்கல் செய்த ஆள் கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

பக்ருதீனை போலீசார் கைது செய்ததை மனுதாரர் நேரில் பார்க்கவில்லை. மேலும், பக்ருதீன் கைது செய்யப்பட்டதற்கான ஆதாரம் எதையும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. அதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

Tags:

Leave a Reply