ஆனந்தவர்மன் என்றொரு அரசன் நல்லாட்சி புரிந்து வந்தான் அவனது அந்தபுர வாயில் காப்போனாக வீரபாகு என்றொரு காவலாளி இருந்தான்.

ஒரு நாள் இரவுக் காவல் சமயத்தில் ஒரு பெண்மணியின் அழுகுரல் கேட்டது. அரசன் ஆனந்தவர்மன் தனது அந்தபுரக் காவலாளி

வீரபாகுவை அழைத்து, அழுகுரல் பற்றின விவரம் அறிந்து வரப் பணித்தான். வெகு நேரமாகியும் திருப்பி வராத காவலாளியைத் தேடி தானே இருட்டில் புறப்பட்டுச் சென்றான் அரசன். ஊருக்கு வெளியில் உள்ள குளத்தின் கரையில் ஒரு பெண்மணி அழுது கொண்டிருப்பதையும், அவளருகில் காவலாளி நிற்பதையும் கண்டான் அரசன். அவர்களின் பேச்சை மறைத்து நின்று செவிமடுத்தான் ஆனந்தவர்மன்.

அந்தப் பெண்மணி பூமாதேவி என்றும், அரசன் ஆனந்தவர்மன் இன்னும் இரண்டு நாட்களில் மரணமடையப் போகிறான் என்ற தேவ ரகசியத்தை அறிந்து, நல்லாட்சி புரியும் மன்னனின் மறைவை எண்ணி துக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாள் என்றும் அறிந்து கொண்டான் மன்னன்.

இந்த விஷயத்தை அறிந்து கொண்ட வாயிற்காவலாளி வீரபாகு, பூமாதேவியிடம், "தாயே! எங்கள் மன்னரை இந்த மரணத்திலிருந்து விடுவிக்க உபாயம் உண்டா?'' என்று கேட்டான்.

அதற்கு பூமாதேவி, "ஆம்! உபாயம் இருக்கிறது. அது, உன்னுடைய ஒரே மகனை சண்டி தேவிக்கு பலியிடுவதன் மூலம் நடைபெற முடியம்'' என்றாள்.

உடனே அந்தக் காவலாளி பூமாதேவிக்கு வணக்கம் செலுத்திவிட்டு தன் வீடு நோக்கிச் சென்றான். மன்னனும் அவனை மறைந்திருந்து பின் தொடர்ந்தான். இல்லம் சென்று சேர்ந்த காவலாளி தன் மனைவி கங்காவை தூங்குவதினின்றும் எழுப்பி நடந்தவற்றை விவரித்தான்.

மனைவியின் கண்களில் கண்ணீர் ததும்பியது. "என் அன்புக் கணவரே! நமக்கு இருக்கும் ஒரே அன்புச் செல்வன் சாத்யகி! அவன் மீது நான் கொண்டுள்ள பாசத்திற்கு சோதனைதான், இது! எனினும், மன்னனைக் காப்பாற்ற, நம் குடும்பம் காரணமாக அமையுமானால், அதை விட பாக்கியம் என்ன இருக்கிறது? உடனே அழைத்துச் செல்லுங்கள். அதே சமயம், என்னால் அவனைப் பிரிந்து உயிர் வாழ முடியாது என்பதையும் தங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். எனவே நம் மகனை பலியடும் அதே சமயத்தில், என்னையும் சேர்த்து பலியிட வேண்டுகிறேன்'' என்றாள் தாய்ப்பாசம் தாளாத கங்கா.

வீரபாகுவும் மனைவி கங்காவும் தமது மகனை எழுப்பி விபரங்கள் கூறினார்கள். மகனது ஒப்புதல் வேண்டினார்கள். மகன் சாத்யகி சொன்னான் : " என் அன்பான அம்மா ! அப்பா !! நல்லாட்சி புரியும் நம் மன்னனைக் காலனின் பிடியிலிருந்து காப்பாற்ற, இந்த எளியவனின் பலி உபயோகப்படுமெனில், அதை விரைந்து நிறைவேற்றுங்கள். மேலும் என்னை எவ்வாறு செய்யவும் தங்களுக்கு முழு உரிமை உள்ளது. கிளம்புங்கள் அம்மன் கோயிலுக்கு!''

பெற்றோர்களுடன் சண்டி தேவி ஆலயம் வந்தடைந்த சிறுவன் சாத்யகி அம்மனை வணங்கி எழுந்தான். தாய் தந்தையரை வணங்கிவிட்டு பலி பீடத்தில் தலை வைத்தான். தந்தை வீரபாகு, தன் மகனை வாளால் வெட்டி அம்மனுக்கு பலியிட்டான். கூடவே தனது மனைவி கங்காவையும் பலியாக்கினான். தனது பணி நிறைவடைந்த திருப்தியுடன், இறைவியிடம் பிரார்த்தனை செய்து நின்றான். குடும்பம் முழுவதும் பலியிடப்பட்ட பின்னர் தான் மட்டும் வாழ விரும்பாதவனாக தன்னையும் தன் வாளுக்கு இரையாக்கினான்.

மறைந்து நின்று நடத்துவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த மன்னன், ஆனந்தவர்மன் திடுக்கிட்டான். மன்னனைக் காக்க மவுனமாக நடந்த தியாகப் புரட்சி, அவன் மனதில் சொலலொணாத் துயரை ஏற்படுத்தியது.

மன்னன் முடிவு செய்தான், இப்படிப்பட்ட தியாக சீலர்களைப் பெற்ற இந்த பூமியைக் கடவுள் காப்பாற்றட்டும் என்று தானும் தன் வாளினால், தலையை வெட்டிக் கொண்டு மாய்த்தான்.

தேவி சண்டி பிரசன்னமானாள். பலியான நால்வரையும் உயிர்ப்பித்தாள்

கேள்வி இதுதான். மேலே கண்ட தியாகத்தில் யாருடைய தியாகம் உயர்ந்தது?

மன்னனைக் காப்பாற்றும் கடமை அவனது காவலாளிக்கு உள்ளது. அதற்காக அவன் செயல் கடமை என்று கருதப்படும். தந்தை சொல்லுக்காக தனயன் உடன்படுவதும் தர்மத்தின் ஒரு அங்கமே. மகனது பிhவைத் தாங்கவொண்ணாது உயிர்விட்ட தாயின் தியாகமும், பாசத்தினால் வந்தது. ஆனால், சாதாரண தனது குடிமக்களின் தியாகத்திற்கு மதிப்பளித்து, உயிர் நீத்த மன்னவனின் தியாகமே அனைத்திலும் உயர்ந்தது. மக்களுக்காகவே மன்னன்!

Leave a Reply