விலை உயர்வு குறித்து இன்று ஜெ., வெளியிட்டுள்ள அறிக்கையில்: பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு திவாலாகும் சூழ்நிலையில் உள்ள மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் ஆவின் நிறுவனம் ஆகியவற்றை உயிர்பிப்பிக்கவும், நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு தொடர்ந்து தங்களது சேவையை ஆற்றவும் வழிவகை குறித்து 17.11.2011 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, கட்டண உயர்வுகள் பற்றி முடிவுகள் எடுக்கப்பட்டன.இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதன் காரணங்களை அன்றே தொலைக்காட்சி மூலம் நான் எடுத்துரைத்து , அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவினை நல்கிட வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோளும் விடுத்திருந்தேன். இந்த கட்டண உயர்வுகளை கண்டித்து, பல்வேறு எதிர்க் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அறிக்கைகள் விடுத்துள்ளனர்.

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து சட்டமன்ற தேர்தலை சந்தித்த கட்சிகளின் தலைவர்கள் கூட இந்தக்கட்டண உயர்வுகளுக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டு, அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் நலனை விடுத்து வேறு பல காரணங்களுக்காக பல்வேறு முடிவுகளை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு எடுத்த காரணத்தால்தான், எதிர்கட்சி என்ற அந்தஸ்தைக் கூட வழங்காமல், சட்டமன்ற தேர்தலில் மக்கள் திமுகவை முற்றிலும் புறக்கணித்துவிட்டனர். இவ்வாறு புறக்கணிக்கப்பட்டதற்கு, பொதுத்துறை நிறுவனங்களை முந்தைய தி.மு.க. அரசு சீரழித்ததும் ஒரு காரணம். இது போன்ற கடினமான முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு எனது தலைமையிலான அரசை ஆளாக்கிவிட்டு, தாங்கள்தான் மக்களை பாதுகாப்பதைப்போல நீலிக்கண்ணீர் வடிக்கும் கருணாநிதியின் செயல் சாத்தான் வேதம் ஒதுவது போல் உள்ளது.

மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் , ஆவின் நிறுவனம் ஆகிய அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் மிகுந்த நஷ்டத்திற்கு உள்ளாக்கி அவற்றை செயலிழக்கச் செய்த பெருமை முந்தைய மைனாரிட்டி திமுக அரசையும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியையுமே சாரும். அரசு அதிகாரிகள், கட்டணங்களை உயர்த்த இவரிடம் கேட்டுக்கொண்டது போலவும், ஆனால் மக்களுக்காக இவர் உயர்த்த வேண்டாம் என்று கூறி அரசு கடன் வாங்கி இந்த நிறுவனங்களுக்கு வழங்கலாம் என்று தான் கூறியதைப் போலவும் ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி என்று தெரிவித்துள்ளார் .

Tags:

Leave a Reply