நாட்டின் மின் பற்றாக்குறையைப் போக்க அணுமின் நிலையங்கள் மிகுந்த அவசியம் என இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய (ஐ.ஜி.சி.ஏ.ஆர்.) இயக்குநர் எஸ்.சி. சேட்டல் கூறினார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது கல்பாக்கத்தில் சர்வதேச விதிகளுக்கு உள்பட்டு மிகுந்த பாதுகாப்புடன் அணு

உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அணு மின் நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் மிகக் குறைந்த அளவு கதிர்வீச்சே பதிவாகியுள்ளது. அதாவது, பொதுமக்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள கதிர்வீச்சு அளவு ஆண்டுக்கு 2.3 மில்லி சீவர்ட் ஆகும். ஆனால், அணுமின் நிலையத்தை சுற்றி வசிக்கும் மக்களிடையே மேற்கொண்ட சோதனையில் ஆண்டுக்கு 0.023 மில்லி சீவர்ட் அளவிலேயே கதிர்வீச்சு பதிவாகியுள்ளது.

இதுபோல் பணியாளர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள அளவு 6.2 மில்லி சீவர்ட். ஆனால், அவர்கள் பெறுவது 1.87 மில்லி சீவர்ட் மட்டுமே. இந்த அளவு கதிர்வீச்சைப் பெறுவதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில், மருத்துவ சிகிச்சைகளின்போது இதய எக்ஸ்-ரே எடுக்கும்போது 0.20 முதல் 0.25 மில்லி சீவர்ட் அளவிலும், பல் எக்ஸ்-ரே எடுக்கும்போது 9 மில்லி சீவர்ட் அளவிலும், மார்பகப் பதிவின்போது 15 மில்லி சீவர்ட் அளவிலும், சி.டி. ஸ்கேன் எடுக்கும்போது 150 மில்லி சீவர்ட் அளவிலும் மனித உடலில் கதிர்வீச்சு பதிவாகிறது. மீன்களுக்கு பாதிப்பு இல்லை: அணு உலையிலிருந்து கடல் நீரில் வெளியேற்றப்படும் வெப்பத்தின் அளவு மத்திய அரசின் விதிகளின்படி 7 டிகிரி சென்டிகிரேட் வரை அனுமதிக்கப்படுகிறது. ஆனால், இதைவிடக் குறைந்த அளவிலேயே கடல் நீர் வெப்பமடைகிறது. கதிர்வீச்சு அளவும் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.

இதனால், கடல் மீன்களுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. கல்பாக்கத்திலேயே அமைந்துள்ள சந்தைகளில் இந்த கடல் பகுதியிலிருந்து பிடிக்கும் மீன்களைத்தான், அணுமின் நிலைய விஞ்ஞானிகளும், பணியாளர்களும், அவர்களுடைய குழந்தைகளும் வாங்கி உண்கிறோம். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் எங்களுக்கு இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகள் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இவற்றின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வருகின்றன. கடந்த 2 மாதங்களாக இந்த அணு உலைகள் குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன.

விஞ்ஞானரீதியிலான சந்தேகங்களையும், கருத்துகளையும் மட்டுமே ஏற்று விவாதிக்க முடியும். தவறான யூகங்களுக்கு பதில் கூற முடியாது. அணுமின் உற்பத்தி அவசியமா? உலகில் இப்போது 432 அணு உலைகள் செயல்பாட்டில் உள்ளன. அமெரிக்கா 103 அணு உலைகளைக் கொண்டுள்ளது. 70 சதவீத மின் தேவையை அணுமின் உற்பத்தி மூலம் அமெரிக்கா பூர்த்தி செய்து வருகிறது. பெரும்பாலான மேற்கத்திய நாடுகளும் இதே நடைமுறையைப் பின்பற்றி வருகின்றன. இந்தியாவில் 12 சதவீத மின் பற்றாக்குறை உள்ளது. ஏராளமான கிராமங்கள் சீரான மின் விநியோகம் இன்றி பாதிக்கப்பட்டு வருகின்றன.

ஏறத்தாழ 40 சதவீத மக்கள் இதுபோன்று பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பற்றாக்குறையைப் போக்க இந்தியாவுக்கு அணுமின் நிலையங்கள் மிகுந்த அவசியம். கல்பாக்கத்தில் அமைந்துள்ள மெட்ராஸ் அணு மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மிகக் குறைந்த விலையில் யூனிட் ரூ. 2-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

Tags:

Leave a Reply