பொன் ராதாகிருஷ்ணன் மதுரையில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:

“ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முக்கியப் பங்கு வகித்துள்ளதாக வெளிப்படையாகத் தெரியவருகிறது. எனவே அவர் தமிழகத்துக்கு வரும்போது, அவருக்கு எதிராக பாஜக

இளைஞரணி சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும். அமைச்சரவையிலிருந்து அவரை காங்கிரஸ் நீக்க வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் ஊழலை திமுகதான் செய்தது என்பதாக, தமிழகத்தின் புதிய காங்கிரஸ் கட்சித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் மிகத் தெளிவாக அறிக்கை கொடுத்தார். ஆனால், உடனடியாக திமுக தலைவரையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரைப் பாராட்டுகிறாரா அல்லது அந்த ஊழலில் காங்கிரஸின் பங்கை காட்டிக்கொடுக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்தாரா என்பதைத் தமிழக காங்கிரஸ்தான் விளக்க வேண்டும். இதற்குப் பின்னரும் திமுகவுடன், காங்கிரஸ் கூட்டணி அமையுமா, அல்லது அமைச்சரவையில் உள்ள திமுக அமைச்சர்களை காங்கிரஸ் நீக்குமா என்றும் ஞானதேசிகன் பதில் அளிக்க வேண்டும்.

சர்வதேச சதி: பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மதுரை வந்திருந்தபோது குண்டு வைக்கப்பட்ட சம்பவம், தமிழகத்தில் உளவுத் துறை தோல்வியடைந்துள்ளதையே காட்டுகிறது.

அதுதொடர்பான விசாரணையும் எங்களுக்குத் திருப்தியளிக்கவில்லை. இச்சம்பவத்துக்கு பின்னணியில் சர்வதேச சதி உள்ளதாக சந்தேகிக்கிறோம். 1998-ல் கோவையிலும், தற்போது மதுரையிலும் குண்டு வைத்த சம்பவங்களை இணைத்து ஒன்றாக விசாரிக்க வேண்டும்.

“டேம் 999′ தடை வேண்டும்: முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் விளைவு எப்படி இருக்கும் என்று பீதியைக் கிளப்பும் வகையில் கேரள இயக்குநரால் எடுக்கப்பட்டுள்ள “டேம் 999′ திரைப்படத்தை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்.

மத்திய அரசு முன்வராவிட்டாலும் அதைத் தமிழகத்தில் திரையிட மாநில அரசாவது தடை விதிக்கவேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையம்: கூடங்குளம் அணுமின் நிலையப் பாதுகாப்பு குறித்து விஞ்ஞானிகள் டாக்டர் அப்துல் கலாம், முத்துநாயகம் போன்றோர் தெளிவான அறிக்கை கொடுத்த போதும் அதைப் பிடிவாதத்துடன் ஒருதரப்பினர் எதிர்த்து வருகின்றனர். பாதுகாப்பு ரகசியங்களைத் தெரிவிக்கக் கோரும் அவர்களின் கோரிக்கை தேவையில்லாதது.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பீதி, கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை ஆகியவற்றின் பின்னணி குறித்து மத்திய, மாநில அரசுகள் விசாரணை நடத்த வேண்டும்.

தமிழக அரசு உயர்த்தியுள்ள பால் விலை மற்றும் பஸ் கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும். சிறப்பு வசதிகளுடன் தனியாருக்கு வழங்கப்படும் மதுக்கடை திட்டத்தைக் கைவிட வேண்டும். “பார்’களையும் மாநில அரசு உடனடியாக மூடவேண்டும். இலவச அறிவிப்புகளை நிறுத்திவிட்டால் மத்திய அரசிடம் மாநில அரசு கையேந்தத் தேவை ஏற்படாது.

பக்தர்களின் உணர்வைப் பாதிக்காத வகையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் இருமுடியைச் சோதனை செய்யவேண்டும்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இந்தாண்டு உரிய இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.

நீதிமன்ற உத்தரவை மதிக்காத அறநிலையத் துறை அதிகாரிகளை அரசு, பணியிட மாற்றம் செய்யவேண்டும்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி ஏற்பட்டு 6 மாத காலங்களே ஆகியுள்ளன. இருந்தபோதிலும் ஆட்சியின் செயல்கள், சட்டம், ஒழுங்கு நிலைமை திருப்திகரமாக இல்லை என்றார் பொன் ராதாகிருஷ்ணன்.

முன்னதாக, இக்கட்சியின் 17 மாவட்டங்களைச் சேர்ந்த மையக் குழுவினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட, மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பேட்டியின்போது மாநிலச் செயலர் சுரேந்திரன், மாநகர் மாவட்டத் தலைவர் எம். ராஜரத்தினம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:

Leave a Reply