தேசத்தின் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுதலாக இருக்கும் பயங்கரவாதத்தை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது என பா ஜ க குற்றம் சுமத்தியுள்ளது.

மும்பை தாக்குதலின் 3-ம் ஆண்டு நினைவு தினம் மும்பையில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதில் பா ஜ க வின் செய்திதொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டு பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார் .

மேலும் அவர் பேசியது: 2008-ல் மும்பையில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல் மூலம் நாடு எந்த அளவுக்கு பாதுகாப்பாகவுள்ளது என்பது தெளிவானது. இந்த தாக்குதல் நிகழ்ந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் தாக்குதலை முன்னின்று நடத்தியோர், தாக்குதலில் ஈடுபட்டோர் ஆகியோர் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலா வருகின்றனர்.

அந்நாட்டிடம் உரிய ஆதாரங்களை இந்தியா அளித்த போதிலும் இதுவரை பயங்கரவாதிகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனிமேலும் அந்நாடு நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. இதனால் அந்நாட்டுக்கு எதிராக சர்வதேச நெருக்குதலை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும்.

மும்பை தாக்குதல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளி ஒருவரைக்கூட இதுவரை பிடிக்கவில்லை. இது வருத்தமளிக்கிறது. மும்பை தாக்குதல் சம்பவத்தை அடுத்து இனிமேலாவது நாட்டை பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாக்க காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று ஒவ்வொரு குடிமகனும் நம்பினர். ஆனால் துரதிருஷ்டவசமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்

Tags:

Leave a Reply