சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவை மத்திய அரசு திரும்பப் பெறாதவரை, நாடாளுமன்றத்தை செயல்பட விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் சரத் யாதவும் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான ஷாநவாஸ் ஹுசைனும் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தை திசை திருப்புவதற்காகவே அன்னிய நேரடி முதலீட்டு முடிவை அரசு எடுத்துள்ளது. ஏனெனில், விலைவாசி உயர்வு, கறுப்புப் பணம் போன்ற மிக முக்கிய விவகாரங்கள் பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் எண்ணியிருந்தன. அதிலிருந்து தப்பிக்கவே மத்திய அரசு இவ்வாறு செய்துள்ளது.

அரசின் முடிவை ஏற்றுக்கொண்டால், கோடானுகோடி வர்த்தகர்கள் மிக மோசமாக பாதிக்கப்படுவர். நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகும். விலை உயர்வு, கறுப்புப் பணம் ஆகியன பற்றி விவாதிக்க நாடாளுமன்றம் தயாராகி கொண்டிருந்த போது, மத்திய அரசு அன்னிய நேரடி முதலீட்டு முடிவை அறிவித்தது. நாடாளுமன்றம் நடந்துவிட கூடாது என்பதற்காகவே இந்த முடிவை அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு சில அமைச்சர்களே எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் நிலையில், இத்தனை அவசரமாக முடிவெடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினர்

Tags:

Leave a Reply