மிக குறுகிய காலத்தில் ராபர்ட் வதேராவின் செல்வம் பலமடங்கு அதிகரித்துள்ளது. இது குறித்து விவரங்களை பா.ஜ.க. மூத்த தலைவர் அருண்ஜெட்லி ஒருபுறமும், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் சீதாராம்யெச்சூரி மறுபுறமும் திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இது பற்றி புள்ளி விரங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ராபர்ட் வதேரா குறுகிய காலத்தில் குபேரன் ஆகிவிட்டார் என்பது ஒன்றும் ரகசியம் அல்ல. டெல்லி அரசியல் வட்டாரத்தில் ராபர்ட் வதேராவின் நடவடிக்கைகள் பிரபலமானவை. ராபர்ட் வதேராவைப் பற்றி அனைத்துத் தரப்பினரும் விமர்சித்து வருகிறார்கள். கடைக்கோடியில் உள்ளவர்கள் முதல் அரசியல் அரங்கின் உச்சத்தில் இருப்பவர் வரை ராபர்ட் வதேராவை எடை போட்டு வருகிறார்கள்.

2011ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான "எக்னாமிக் டைம்ஸ்'' நாளிதழில் ராபர்ட் வதேராவின் சொத்துக் கணக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. சாதாரண, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ராபர்ட் வதேரா திடீரென உச்சததுக்குச் சென்று விட்டார். ரியல் எஸ்டேட் துறையில் அவர் கொடி கட்டி பறக்கிறார். டி.எல்.எப். நிறுவனத்தில் அவர் பங்குதாரராக உள்ளார். அரியானா முதல் ராஜஸ்தான் வரை அவரது தொழில் சாம்ராஜ்யம் விரிந்து பரந்துள்ளது.

மக்கள் ராபர்ட் வதேராவின் சாமர்த்தியத்தைப் பாராட்டுகிறார்கள். இது ஒருவகையான வஞ்சப் புகழ்ச்சி எனக் கூறலாம். ராபர்ட் வதேராவின் பொருளாதார எழுச்சி மற்றவர்களிடையே பொறாமை உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே அரசியல் ரீதியாக முதல் இடத்தில் உள்ள குடும்பத்தின் மருமகனாக ராபர்ட் வதேரா உள்ளார். ஆனால் அவர் அரசியலில் நேரடியாக ஈடுபடவில்லை.

அரசியலில் நேரடியாக பங்கேற்காமலேயே அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்வதில் வல்லவராக உள்ளார், ராபர்ட் வதேரா இந்தியாவிலேயே அரசியல் ரீதியாக முதல் இடத்தில் உள்ள குடும்பத்தின் மருமகன் என்பதை மட்டுமே முதலீடாக வைத்து அவர் தனது தொழில் சாம்ராஜ்யத்தை, மற்றவர்கள் பார்த்து மலைக்கத் தக்க அளவிற்கு துரிதமாக விஸ்தரித்து வருகிறார். பல்வேறு மாநிலங்களிலும் அவர் நிலங்களை வாங்கி குவித்து வருகிறார்.

'நிலத்தை வரைமுறையின்றி வாங்கி குவித்து வருகிறாரே, ராபர்ட் வதேரா பணத்திற்கு என்ன செய்கிறார்? வங்கியில் கடன் வாங்குகிறாரா?' என்றெல்லாம் விவரம் புரியாதவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

'ராபர்ட் வதேரா என்ன ஏழை விவசாயியா? அவர் வங்கிக் கடன் கேட்டு விண்ணப்பிக்க என்ன அவசியம் இருக்கிறது? அவர் சோனியாவின் மருமகன். அவர் விரல் அசைத்தால் அல்லது விழி அசைத்தால கோடிக்கணக்கான பணம் அவரை தேடி வரும்ட. வங்கி மேலாளர்கள் வரிசையில் நின்று கடன் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்' என்று விவரம் புரிந்தவர்கள் பதில் அளிக்கிறார்கள்.

அரசியலில் நேரடியாக ஈடுபடாத ஒருவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது அரசையும், இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இரண்டாவது அரசையும் ஆட்டிப்படைது வருவது பலருக்கு வியப்பாக உள்ளது. அரசியலில் பழுத்த பழங்களாக உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தி.மு.க தலைவர் கருணாநிதி ஆகியோரால் கூட ராபர்ட் வதேராவைப் பற்றி ஒரு வார்த்தை சொல்ல முடியவில்லை. அணுஒப்பந்தம் தொடர்பான பிரச்சினையில் இடது சாரிகளைக் கழற்றிவிட்டுவிட்டு முலாயம்சிங் யாதவை காங்கிரஸ் அணிக்கு கொண்டு வந்ததில் ராபர்ட் வதேராவிற்கு முக்கிய பங்கு உண்டு.

ராகுல்காந்தி எம்.பி. ஆக உள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளராக உள்ளார். அவர் எதிர்காலத்தில் இந்தியப் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பும் உள்ளது. ஆனால் அவர் எப்போது பிரதமர் ஆவார் என்பது யாருக்கும் தெரியாது. எதிர்காலம் இதற்கு பதில் அளிக்க வேண்டும். சோனியாவின் மகன் அரசியல் ரீதியாக எழுச்சி அடைந்து வருகிறார். ஆனால் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா இப்போதே சூரியனைப் போல பிரகாசித்து வருகிறார்.

Leave a Reply