அஹமதாபாத்தில் கர்னாவதி தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் எங்கள் குழுவின் இரண்டு நாடகங்கள் நடக்க ஏற்பாடு ஆகியிருந்தது. அஹமதாபாத்தில் இருக்கும்போது முதல்வர் நரேந்திர மோடியைச் சந்திக்க நானும், எங்கள் குழுவிலுள்ள மற்றவர்களும் விரும்பினோம். இ-மெயில் மூலமாகவே குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அலுவலகத்துடன் தொடர்பு

கொண்டோம். உடனேயே அப்பாயின்ட்மென்ட் கிடைத்து விட்டது! நம்மூரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. திருப்புகழ், நரேந்திர மோடியுடன் இருக்கிறார் என்பதால், அவரும் உதவ எங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் கிடைப்பது மிகவும் சுலபமாகி விட்டது. ஒரு முதல்வரை இவ்வளவு எளிதில் சந்திக்க முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

13.11.2011 மதியம் 12 மணிக்கு நாங்கள் மோடி அவர்களைச் சந்தித்தோம். எங்களுடன் ஒரு ஃபோட்டோகிராஃபரையும், வீடியோ கிராஃபரையும் கூட அழைத்துச் செல்ல அனுமதி கொடுத்து விட்டார்கள். போகும்பொழுது எங்களுக்கு ஒரு சந்தேகம். பாதுகாப்பு ஏற்பாடுகளின் காரணமாக எங்களுக்குப் பல சோதனைகள் இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை.

நாங்கள் அமர்ந்து சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தபொழுது 'வணக்கம்' என்று ஒரு கம்பீரமான குரல் கேட்டது. எழுந்து நின்று திரும்பிப் பார்த்தால், மோடி சிரித்தபடியே வந்து கொண்டிருந்தார். 'ஸ்வாகதம்' என்று கூறினார். நாங்கள் பதிலுக்கு அவருக்கு வணக்கம் தெரிவித்து, எங்கள் குழுவினர் எல்லோரையும் அறிமுகப்படுத்தினோம். அவர் முகத்தில் மிகவும் மகிழ்ச்சி பொங்கியது. தன்னுடைய சட்டசபைத் தொகுதியில் அதிகம் பேர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் தான் என்றும், அவர்களுடைய பிரதிநிதியாக திகழ்வதில் தனக்கு எப்பொழுதும் மனமகிழ்ச்சி என்றும் அவர் கூறினார்.

'எங்களுடைய நாடகங்களுக்கு ஏராளமான தமிழர்கள் வருகிறார்கள். ஆகவே, தமிழ் நாடகங்களின் விழா ஒன்றை தமிழ்ப் புத்தாண்டு தின சமயத்தில் குஜராத் மாநில அரசின் சார்பாக நடத்த வேண்டும்' என்று நாங்கள் கேட்டபொழுது, நிச்சயமாக அதற்கு ஏற்பாடு செய்வதாக அவர் உடனே கூறிவிட்டார். தனது சாணக்கியத்தனத்தாலும், சாதுரியத்தாலும், சீரிய தலைமையாலும் அனைவரையும் வென்று வரும் நரேந்திர மோடி அவர்கள், எங்களை அவருடைய ஆத்மார்த்தமான அன்பினால் வென்று விட்டார். மோடியை நாங்கள் சந்தித்தோம் என்று தெரிந்த பிறகு, குஜராத் மாநிலத்தில் நாங்கள் எங்கு சென்றாலும் எங்களுக்கு ஒரு தனி மரியாதை கிட்டியது. நரேந்திர மோடியுடன் பேசிக் கொண்டிருந்தபொழுது, 'நீங்கள் வருகிறபோது செக்யூரிட்டி காரணமாக பெரிய தொந்திரவுகள் எதுவும் இருந்தனவா?' என்று கேட்டார், 'நாங்கள் அப்படி எதுவும் இல்லை' என்றோம்.

ஆனால் 'என்னென்ன சோதனைகள் செய்யப்பட வேண்டுமோ, அத்தனையும் முறைப்படி செய்யப்பட்டன. அது உங்களுக்குத் தெரியாத வகையில் நடந்தது. அதுதான் இங்குள்ள அதிகாரிகளின் திறமையும், நிர்வாகத்தின் சாமர்த்தியமும்' என்று அவர் விளக்கினார். நம் ஊரில் கார்ப்பரேஷன் கௌன்ஸிலரைக் கூட இவ்வளவு சுலபமாக, தொந்திரவு இல்லாமல் பார்த்து விட முடியாது என்று எங்களுக்குள்ளேயே நினைத்துக் கொண்டோம்.

ரயில் பயணத்தின்போது, குஜராத் எல்லையில் நுழைந்தவுடனேயே எங்களுக்குப் பெரிய வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது. அதுவரை சாதாரணமாக ஒன்றும் குறிப்பிடத்தக்க நிலையில் இல்லாத கிராமங்களை ரயில் கடந்து சென்று கொண்டிருந்தது. ஆனால், குஜராத்தில் நுழைந்தபோதோ, எல்லா கிராமங்களிலும் விளக்கு வசதி இருப்பது நன்றாகவே தெரிந்தது. ஒவ்வொரு தெருவின் இறுதிவரை, பிரகாசமாக விளக்குகள் எரிவதைப் பார்த்துக் கொண்டே சென்றோம். குஜராத்தில் நாங்கள் கார்களில் பயணம் செய்தபொழுது, அங்கு தெருக்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கின்றன என்பதையும், அங்கு சாலைகள் எவ்வளவு சீராக அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம்.

அஹமதாபாத்திலும் சரி, சூரத்திலும் சரி, நாங்கள் சென்ற கார்களை ஓட்டியவர்கள் அனேகமாக முஸ்லிம் இனமக்களாகத்தான் இருந்தார்கள். அவர்கள், 'மோடியினால்தான் நாங்கள் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகிறோம்' என்று மனத் திருப்தியுடன் சொன்னது, எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. பத்திரிகைகளும், டெலிவிஷன் சேனல்களும் சொல்வதும்; நடைமுறை உண்மையும் வெவ்வேறாக இருக்கின்றன என்பதைக் கண்ணால் பார்த்தோம், காதால் கேட்டோம், புரிந்து கொண்டோம்.

நாங்கள் பல இடங்களுக்குச் சென்றோம். எங்கு சென்றாலும் அங்கு மக்கள், 'இந்த வசதி எங்களுக்கு மோடியால்தான் வந்தது… இந்த விஷயத்தை மோடிதான் உருவாக்கினார்… நாங்கள் செய்த புண்ணியம் மோடி எங்களுக்கு முதல்வராகக் கிடைத்திருக்கிறார்…' என்றெல்லாம் பெருமிதத்தோடு கூறியது, குஜராத்தில் அவருக்குள்ள மதிப்பையும் மரியாதையையும் எங்களுக்கு உணர்த்தியது.

சூரத் நகரம் புடவைகள் மற்றும் வைரங்களுக்குப் பிரசித்தி பெற்ற இடம். அன்றாடம் கோடிக்கணக்கான ரூபாய் வியாபாரம் புழங்குகின்ற இடம். தினமும் மூட்டை மூட்டையாகத் துணிகளை வெளியூர்களுக்கு அனுப்புவதற்காக, ஆயிரக்கணக்கானவர்கள் ரயில் மற்றும் லாரி நிறுவனங்களுக்கு தலையில் சுமந்து கொண்டு சென்று கொண்டே இருக்கிறார்கள். இது அனேகமாக நாள் முழுவதும் நடக்கிறது. அவ்வளவு வியாபாரம். அந்த மாதிரி மூட்டைகளைச் சுமந்து சென்று கொண்டிருந்த ஒருவரிடம், வேறு ஒருவரின் உதவியோடு பேச்சுக் கொடுத்தேன். 'மூட்டை தூக்குவதால் ஒரு நாளைக்கு உங்களுக்கு எவ்வளவு வருமானம் வரும்' என்று கேட்டேன்.

'சராசரியாக 500 முதல் 700 ரூபாய் வரை வரும்' என்ற அந்த மூட்டை சுமப்பவர் பதிலளித்தார்.

"எவ்வளவு பணம் வீட்டுக்குச் செல்லும்' என்று கேட்டேன்.

'என் செலவுக்கு 100 ரூபாயை எடுத்துக் கொண்டு, மீதியை மனைவியிடம் கொடுத்து விடுவேன்' என்றார்.

'100 ரூபாய்தானா?'

'ஆமாம், காலையில் வீட்டில் சாப்பிட்டு விட்டு வந்து விடுவேன். பகலில் சாப்பிடவும், மற்றும் பான் பராக் போட்டுக் கொள்ளவும் 100 ரூபாய் போதாதா? போதும்' என்றார்.

'சரி, குடும்பம் எப்படி இருக்கிறது?' என்றேன்.

'மகன் பட்டப்படிப்பும், மகள் எட்டாம் வகுப்பும் படிக்கிறார்கள். இருவரும் நன்றாகப் படிக்கிறார்கள். மனைவி ஒரு கடையில் வேலை செய்கிறாள்' என்றார்.

இது ஒரு சாம்பிள்தான். அனேகமாக குஜராத்தில் பலரும் இதே ஸ்டாண்டர்டில்தான் வாழ்கிறார்கள். அப்புறம் அங்குள்ளவர்கள் விளக்கிச் சொல்லத்தான், இது இங்கே எப்படி சாத்தியமாயிற்று என்பது புரிந்தது. 'இங்கு பரிபூரண மதுவிலக்கு இருக்கிறது. ஆகையால், பணம் பத்திரமாக வீடு செல்கிறது. மதுவிலக்கு இல்லாமல் இருந்தால், இது இவ்வளவு எளிதாக சாத்தியமாகி இருக்காது' என்று அங்குள்ளவர்கள் சொன்னார்கள். நம்மூரில் மாலை ஐந்து மணிக்கே கைக்கு வரும் பணத்தை டாஸ்மாக்கில் கொடுத்து தண்ணி அடித்து விட்டு வரும் கணவனை, 'கள்ளானாலும் கணவன், ஃபுல்லானாலும் புருஷன்' என்று வீட்டுக்கு அழைத்துக்கொண்டு செல்லும் மனைவிகளுக்கு மத்தியில் – குடும்பத்துடன் வாரக் கடைசியில் ஹோட்டலில் வயிறார சாப்பிடும் கூலித் தொழிலாளர்கள் குஜராத்தில் இருப்பது, மதுவிலக்கின் மகத்துவத்தைக் காட்டுகிறது.

இன்னொரு முக்கியமான விஷயம். குஜராத்தில் அசைவம் சாப்பிடுபவர்கள் மிகவும் குறைவாக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தோம். அங்கே அனேகமாக அதிகமாக ஜைனர்கள் இருப்பதாலோ என்னவோ தெரியவில்லை, எல்லாமே சைவமாகவே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் அஹமதாபாத் – சென்னைக்கிடையே ஓடும் நவஜீவன் எக்ஸ்பிரஸில் அசைவம் சேர்ப்பதே இல்லை. அந்த வண்டியில் பயணம் செய்கிற சூப்பர்வைஸர், 'காலையில் முட்டை போட்டுச் செய்யப்படும் ஆம்லெட் கூட கிடையாது' என்று சொன்னார். காரணம், வியாபாரம் ஆகாதாம்.

நரேந்திர மோடியைச் சந்திக்கச் சென்றபோது, எங்கள் குழுவில் ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு, அவர் காலில் விழுந்தார். மோடி அவரைத் தடுத்து, 'தயவு செய்து என் காலில் விழாதீர்கள். உங்கள் தலை என் காலில் பட்டால் என் தலையில் கனம் ஏறி விடும்' என்றார். தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தைப் பற்றியும் சிந்திப்பவன் அரசியல்வாதி; அடுத்த தலைமுறையைப் பற்றி நினைப்பவன் தலைவன். ஆனால், தன் தாய் திருநாட்டைப் பற்றிச் சிந்திப்பவர் மோடி.

நன்றி ‘டிவி’ வரதராஜன்

Tags:

Leave a Reply