கல்வி, வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு வியாழக்கிழமை முடிவு செய்தது.

இது குறித்து பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியது: ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்குவது என்பது

காங்கிரஸ் கட்சியின் அபாயகரமான அரசியல் நாடகம். இதனால் நாட்டில் உள்ள பல்வேறு மதம், ஜாதியினரிடையே பிரச்னை உருவாகும். இதனால் உள்நாட்டுப் போர் ஏற்படும்.

முஸ்லிம்கள் சமூக அளவிலும், பொருளாதார அளவிலும் முன்னேற வேண்டும் என்பதில் பாஜகவுக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி தனது அரசியல் ஆதாயத்துக்காக முஸ்லிம் மக்களை கடந்த 60 ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறது. இப்போது அரசு எடுத்திருக்கும் உள்ஒதுக்கீடு முடிவு, மிகப்பெரிய ஏமாற்று வேலை.

முஸ்லிம்களுக்கு, அரசியல்சாசன சட்டத்துக்கும் விரோதமாக மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் செயல்படுகிறது. உள்ஒதுக்கீடு முடிவு அரசியல்சாசன சட்டப்படி தவறு, அதே நேரத்தில் இந்த ஒதுக்கீட்டால் முஸ்லிம்கள் பயனடையப் போவதில்லை.

உள்ஒதுக்கீடு என்ற போதை மருந்தைக் கொடுத்து முஸ்லிம் மக்களின் வாக்குகளை கடத்துவதே காங்கிரஸ் கட்சியின் திட்டம். உத்தரப் பிரதேச தேர்தலை மனதில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார் நக்வி.

Tags:

Leave a Reply