அரசுப் பணிகளில் நான் சேருவதற்கு மத்திய அரசு விதித்துள்ள தடையின் பின்னணியில் இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் இருக்கிறார் என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் குற்றம் சாட்டியுள்ளார்.

மாதவன் நாயர் இஸ்ரோ தலைவராக இருந்தபோது இஸ்ரோவின் வர்த்தக அமைப்பான ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்திற்கும் தனியார்

அமைப்பான தேவாஸுக்கும் இடையே எஸ் பாண்ட் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் பல விதிமுறைகள் நடந்துள்ளதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து பிரதமரின் தலையீட்டின் பேரில் இந்த ஒப்பந்தம் ரத்தானது.

இந்த நிலையில் இதுதொடர்பாக பிரதமரால் நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு மத்திய அரசிடம் தனது விசாரணையை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இதையடுத்து மாதவன் நாயர் உள்பட நான்கு முக்கிய விண்வெளி விஞ்ஞானிகள் அரசுப் பணியில் சேர மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் மாதவன் நாயர். அப்போது அவர் கூறுகையில், என் மீதான இந்த நடவடிக்கைக்கு இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன்தான் முக்கியக் காரணம். என் மீதான தனிப்பட்ட விரோதம் காரணமாக அரசுக்குத் தவறான தகவலைக் கொடுத்து பழிவாங்கி வடி்டார்.

என் மீதான நடவடிக்கை சட்டவிரோதமாகும். எனது பெயரைக் கெடுக்கும் வகையிலான நடவடிக்கை இது. இந்த நடவடிக்கையால் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. இஸ்ரோவின் பெயர்தான் கெடும்.

இந்த நாடு எங்களது சேவையை என்றும் மறக்காது. நிலவுக்குப் போகும் வழியைக் காட்டியவர்கள் நாங்கள். அதற்கு அரசு கொடுத்துள்ள பரிசுதான் இது. இதற்காக நான் வருத்தப்படுகிறேன்.

ராணுவ ஆட்சி நடக்கும் நாட்டில் கூட இப்படி நடக்காது. என் மீது விசாரணை நடத்தப்படவில்லை, வழக்கு தொடரப்படவில்லை, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எனது விளக்கம் கோரப்படவில்லை. ஏதோ தீவிரவாதியைப் போல என்னை நடத்தியுள்ளனர். தீவிரவாதியை விடவா நான் மோசமானவனாகி விட்டேன்?. மத்திய அரசின் இந்த தடை நடவடிக்கை நியாயமற்றது என்றார் அவர்.

{qtube vid:=zPZXb26keoo}

Tags:

Leave a Reply