குஜராத்தில் காந்தி நகர், அஹமதாபாத், பரோடா (புதிய பெயர் வதோதரா), ராஜ்கோட், சூரத் உள்ளிட்ட பெரிய நகரங்கள் வளர்ச்சி கண்டிருப்பதும், எல்லா வசதிகளைப் பெற்றிருப்பதும் பெரிய ஆச்சரியமில்லை. குஜராத்தில் ஒரு கிராமம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்து விடுவதில்தான் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. எனவே ஒரு கிராமத்தை நோக்கி நாங்கள் பயணம் செய்தோம்.

ஈஸ்வர்புரா என்ற கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்தோம். 250 குடும்பங்கள் வாழும் சிறிய கிராமம் அது. 7 வார்டுகள் கொண்ட அந்த பஞ்சாயத்தில் 1134 பேர் வாழ்கிறார்கள். அங்கிருந்த 25 தெருக்களுமே சிமென்ட் தெருக்களாக இருந்தன. நமது தமிழ்நாட்டில் கூட கிராமத்திற்குக் கிராமம் சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்திற்கும், குஜராத்திற்கும் நான் பார்த்த முக்கிய வித்தியாசம் ஒன்று உண்டு.

நம் ஊரில் சிமென்ட் சாலைகளை மட்டும் போட்டு விட்டு போய் விடுகிறார்கள். மழை பெய்தால் தண்ணீர் சாலையில்தான் நிற்கும். அல்லது சாலையின் இரு மருங்கிலும் தேங்கி நிற்கும். ஆனால், குஜராத்தில் சுமார் 1000 பேர் வசிக்கும் அந்த குக்கிராமத்தில் கூட, இரு பக்கமும் டிரையினேஜ் அமைக்கப்பட்ட பிறகே சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. எனவே மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்பதை பார்க்க முடியாது.

சிங்கப்பூரில் அவ்வப்போது பேய் மழை பெய்யும். பல மணி நேரம் பெய்யும். ஆனால், மழை நின்ற ஐந்தாவது நிமிடம் நாம் சாலையில் இறங்கிச் சென்றால், சாலைகள் எல்லாம் கழுவி விட்ட மாதிரி இருக்குமே தவிர, எங்கும் மழை நீர் தேங்கி நிற்பதைப் பார்க்க முடியாது. அதை பார்க்கும்போது 'இதெல்லாம் இந்தியாவில் சாத்தியமே இல்லையா?' என்ற ஏக்கம் ஏற்படும். இந்தியாவில், குஜராத்தில் ஒரு குக்கிராமத்தில் அந்த நிலையைப் பார்த்தபோது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.

100 தெரு விளக்குகள் இருக்கின்றன. தெருவுக்குத் தெரு குப்பைத் தொட்டி இருக்கிறது. இது போக, தினசரி ஒருமுறை வீட்டுக்கு வீடு வண்டியில் வந்து குப்பைகளைப் பெற்று சென்று அப்புறப்படுத்தும் முறையும் இருக்கிறது. வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு இருக்கிறது. நான் கடந்த வாரம் சொன்னதுபோல, ஆட்டோ சிஸ்டம் மூலம் ஓவர் டேங்க் இயங்குகிறது. தண்ணீர் நிறைந்தால் தானாக வால்வ் மூடிக் கொள்கிறது. உடனே கிராம ஊழியருக்கு எஸ்.எம்.எஸ்.ஸும் வருகிறது. இந்தியாவிலேயே இங்குதான் முதன் முறையாக இந்த எஸ்.எம்.எஸ். வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டேங்கில் இருந்து வரும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிக்க விருப்பம் இல்லாதவர்களுக்கு, பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆர்.ஓ. சிஸ்டம் மூலம் மினரல் வாட்டர் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. 20 லிட்டர் மினரல் வாட்டர் தயாரிக்க கிராம சபைக்கு 4 ரூபாய் செலவாகிறதாம்.

அதே விலைக்கு கிராம மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். அருகிலுள்ள பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மட்டும் இந்த நீர் இலவசமாக வழங்கப்படுகிறது. மற்றபடி தண்ணீர் ஆகட்டும், குப்பை சேகரிப்பாகட்டும் எல்லாவற்றிற்கும் மக்கள் மாதாமாதம் பணம் செலுத்தியே ஆக வேண்டும்.

கிராமப்புறப் பள்ளி என்றதும், தவறான காட்சிகள் சிலர் மனதில் ஓடலாம். ஈஸ்வர் புரா பள்ளி அப்படியில்லை. நான் பார்த்த அந்த மாணவிகள் கான்வென்ட் மாணவிகள் மாதிரி மிடுக்கான யூனிஃபார்ம், டை, ஷு சகிதம் இருந்தனர். 21 கம்ப்யூட்டர்களுடன் பள்ளி இயங்கிக் கொண்டிருந்தது. காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணி வரை பள்ளி நடக்கிறது. (குஜராத்தில் பரவலாக காலை 10 மணிக்குத்தான் மக்கள் வெளியே நடமாட ஆரம்பிக்கிறார்கள். குளிர் ஒரு முக்கியக் காரணம்). இரவு 7 முதல் 10 மணி வரை சிறப்பு ஆங்கில வகுப்புகள் நடக்கின்றன. இதனால் கிராமத்தில் கூட நுனி நாக்கு ஆங்கிலம் சாத்தியமாகி வருகிறது.

அந்தக் கிராமத்தில் ஏழைகள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கால்நடை தொழில்தான் அங்கு பிரதானம் என்று சொன்னார்கள். தினசரி 8000 லிட்டர் பால் கறக்கிறார்கள். வருடத்திற்கு 4 கோடி ரூபாய்க்கு பால் விற்கிறார்கள். அந்த சின்ன கிராமத்திலேயே பாலை சேமித்து வைப்பதற்கென்று சுத்தமான கூல் ஸ்டோரேஜ் அறை கூட கட்டி வைத்துள்ளனர்.

அந்தக் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் மதுபாய் சௌத்ரியைச் சந்தித்துப் பேசினேன். பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற அவர், சம்பளம் ஏதும் இல்லாமல் ஊராட்சித் தலைவர் பணியை ஏற்றுள்ளார். தேர்தல் இல்லாமல் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அவர். "இப்படி தேர்தல் இல்லாமல் ஒரு ஊராட்சியின் வாக்காளர்கள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்தால், அந்த ஊராட்சிக்கு ஒரு லட்ச ரூபாயை ஊக்க நிதியாக வழங்குகிறது குஜராத் அரசு. தேர்தல் மூலம் செலவாகும் பல லட்ச ரூபாயை மக்கள் மிச்சம் பிடித்துத் தருவதால், அரசாங்கம் தரும் பரிசு இது. அந்த வகையில் நான் தேர்வு செய்யப்பட்டதால், எங்கள் ஊராட்சிக்கு ஒரு லட்ச ரூபாய் கிடைத்தது" என்றார் மதுபாய்.

அது மட்டுமில்லை. போலீஸ் கேஸே பதிவாகாமல் இருந்தால் (சமரஸ்கிராம்) அந்த கிராம சபைக்கும் ஒரு லட்ச ரூபாய் பரிசு உண்டு. 'நிர்மல்கிராம்' என்ற பெயரில் சுகாதாரம் முழுமையாக பேணப்படும் கிராமத்திற்கும் ஒரு லட்ச ரூபாய் பரிசு உண்டு. இது போக, தாலுகா அளவில் சிறந்த கிராமத்திற்கு 5 லட்ச ரூபாய் பரிசும், மாவட்ட அளவில் சிறந்த கிராமத்திற்கு 20 லட்ச ரூபாய் பரிசும் அரசால் வழங்கப்படுகிறது.

இதனால் இந்தப் பரிசுகளை வாங்க, கிராமப் பஞ்சாயத்துகள் போட்டி போடுகின்றன. ஈஸ்வர்புரா கிராமமும் பல பரிசுகளை வென்று வைத்துள்ளது.

"அப்படி நாங்கள் பெற்ற பரிசு பணத்தைக் கொண்டு ஊரில் நூலகம் அமைத்துள்ளோம். பள்ளிக்குக் கூடுதல் வகுப்பறைகள் கட்டினோம். கிராமத்திற்கு என்று ஒரு ட்ராக்டர் வாங்கி வைத்துள்ளோம். ஊராட்சிப் பணிகளுக்குப் போக, அதை குறைந்த வாடகையில் உள்ளூர் விவசாயிகளுக்கும் வழங்குகிறோம்" என்று மேலும் மேலும் எங்களைப் புருவம் உயர்த்த வைத்த மதுபாய் சௌத்ரி, கடைசியாய் ஒன்று சொன்னார். "ஒரு கிராமத்தினர் தங்கள் ஊரை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தால் போதும், அதற்கு குஜராத் அரசாங்கம் ஓடி வந்து உதவி செய்கிறது. ஆர்வமாய் முனையும் கிராமங்களுக்கு என்று ஏராளமான திட்டங்களும், வாய்ப்புகளும் இங்கு கொட்டிக் கிடக்கின்றன".

'த சண்டே இந்தியன்' என்ற வார இதழ் சமீபத்தில் 13 மாநில மக்களிடம் சர்வே செய்து, சில முடிவுகளை வெளியிட்டுள்ளது. 12 துறைகளில் மாநில அரசுகளின் செயல்பாடு குறித்து மக்களிடம் கருத்து கேட்டு, 'ஓவர் ஆல்' முன்னேற்றம் எந்த மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது என்ற முடிவை பிரசுரித்துள்ளது அந்தப் பத்திரிகை. அதில் தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும், பீஹார் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. முதல் இடத்தில் சந்தேகமில்லாமல் குஜராத்தே வீற்றிருக்கிறது.

விமான சர்வீஸ் தொடர்பாக சில விவரங்களை நான் இன்டர்நெட்டில் தேடிக் கொண்டிருந்தபோது, அங்கும் குஜராத் தனது மூக்கை நீட்டிக் கொண்டிருந்தது. ஆம்… இந்தியாவிலேயே அதிக விமான நிலையங்களைக் கொண்ட மாநிலம் குஜராத்தான். அந்த மாநிலத்தில் 14 விமான நிலையங்கள் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

மத்திய அரசின் கையில் இருக்கும் வான் வெளியிலேயே இத்தகைய இடம் பிடித்திருக்கும் குஜராத், தன் கை வசம் வைத்திருக்கும் தரை வழியில் அற்புதங்கள் நிகழ்த்தாமலா இருக்கும்? 'சாலைகள் மற்றும் கட்டடங்கள்' என்ற துறையின் முதன்மைச் செயலாளரைச் சந்திக்கச் சென்றேன். எந்தத் துறையாக இருந்தாலும், அதற்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியைச் செயலராக நியமிப்பதுதான் நமது வழக்கம். ஆனால், குஜராத்தில் 'சாலை மற்றும் கட்டடங்கள் துறை' முதன்மைச் செயலாளர் சத்யநாராண் சிங் ரத்தோர் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்ல; ஒரு சிவில் எஞ்ஜினியர் மட்டுமே. 'நிர்வாகம் தெரிந்தவரை விட, தொழில் நுட்பம் தெரிந்தவர் இந்தத் துறையில் செயலராக இருப்பது நல்லது' என்ற மோடியின் யோசனைப்படி, ஐ.ஏ.எஸ். அதிகாரியல்லாத ரத்தோர் அந்தத் துறையின் முதன்மைச் செயலாளராக இருக்கிறார். அதனால் ஏற்பட்ட பலன் என்ன? அடுத்த வாரம் பார்க்கலாம்.

நன்றி எஸ்.ஜே.இதயா துக்ளக்

Tags:

Leave a Reply