திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாவினைக் கலைஞர் கொண்டாடுகிற இந்த நேரத்தில், அந்த இயக்கத்தின் சாதனைகளை நினைத்துப் பார்ப்பது நமது கடமை.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது, 'தயவு செய்து தமிழகத்தைத் தனியாகப் பிரித்து, அதை உங்கள் ஆட்சியின் கீழே வைத்துக் கொள்ளுங்கள்' என்று பிரிட்டிஷாரிடம் மன்றாடிய திராவிட இயக்கத்தின் தேசப்பற்றை நினைத்து மெய்சிலிர்க்காமல் இருக்க முடியுமா?

சுதந்திர தினத்தைத் துக்க தினமாக அறிவித்த திராவிட இயக்கத் தந்தையின் சோகத்தை நினைத்து யார் மனமாவது கனியாமல் இருக்கமுடியுமா?

அடைந்தாள் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்று சபதமிட்டு, திராவிட நாட்டையே சுடுக்காட்டுக்கு அனுப்பிய திராவிட இயக்கத்தின் சாகசத்தை நினைத்து வியக்காமல் இருக்க முடியுமா?

திராவிட நாட்டை சுடுக்காட்டுக்கு அனுப்பிய பிறகு, தமிழ்நாடு தனிநாடு என்று முழக்கமிட்ட கழகத்தின் சுதந்திர தாகத்தையோ, அதன் பின் அதையும் கைவிட்ட மாயத்தையோ மறக்க முடியுமா?

மாநில சுயாட்சி அடைந்தே தீருவோம் என்று கூறி, பின்னர் அவ்வப்போது அதை திறந்தும், அவ்வப்போது அதை மூடியும் செய்து வருகிற மேஜிக்கை ரசிக்காத குழந்தைகள் உண்டா?

ஹிந்தி மொழியை அரக்கியாக்கி, தமிழர்கள் அதை படிக்க கூடாது என்று பிரசாரம் செய்து, அதிலிருந்து தனது குடும்பத்திற்கு மட்டும் விலக்களித்த மொழிப் போர் வித்தையை ரசிக்காதோர் உண்டோ?

தமிழைக் காட்டு மிராண்டி பாஷை என்று திட்டித் தீர்த்த பெரியாரைப் போற்றி, தங்கள் தமிழ்ப் பற்றை காட்டிக் கொண்ட கழகத்தவர்களின் லாவகம் சாதாரணமானதா?

தாழ்த்தப்படவர்களில் ஒருவரை, இதுவரை ஒருமுறை கூடத் தலைவராக ஏற்காத கட்சியை நடத்திக் கொண்டு, தாழ்த்தப்பட்டவர் பால் பரிவைக் கொட்டிப் பேசுகிற நடிப்புத் திறனைத்தான் போற்றாமல் இருக்க முடியுமா?

கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடுவதில் தொடங்கி, தங்களுடைய டி. வி.யில், 'மானாட மயிலாட' நிகழ்ச்சி நடத்துவது வரை, பல வழிகளில் தமிழ்ப் பண்பையும், நாகரீகத்தையும் வளர்த்து வருகிறவர்களின் பகல் வேஷத் திறனும் பாராட்டுக்குரியதே அல்லவா?

தெய்வ விக்ரகத்தை வணங்குவதை காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லி, மனிதர்களின் சிலைகளை வணங்குவது பிழைக்கும் வழி என்று நிலை நாட்டியவர்களின் விக்ரக வழிபாட்டைக் கண்டு வியக்காமல் இருக்க முடியுமா? தெருவிற்கு நாத்திகம், வீட்டிற்கு ஆத்திகம் என்று, பகிர்ந்தளித்த கழகத்தவரின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தைக் கண்டு பிரமிக்காமல்தான் இருக்க முடியுமா?

வெளியே தள்ளினால் ஒழிய கூட்டணியை விடமாட்டேன் என்று கூறுகிற சுயமரியாதையைக் கண்டு மிரண்டு போகாதவர்கள்தான் உண்டோ?

இவை மட்டும்தானா? ஊழலை வாழும் முறையாக்கியது முதல் -குடும்பத்தினருக்கு மாநிலத்தைப் பங்கிட்டு, தமிழகத்தைக் கூறு போட்டு கடை விரித்த உற்சவம் வரையிலான கண்ணியம்தான் லேசுப்பட்டதோ?

இந்த சாதனைகள் ஒரு புறமிருக்கட்டும். இன்று திராவிட இயக்கத்தினர் செய்து வந்துள்ள ஒரு சேவை மகத்தானது. 'திராவிட இயக்கம் என்றால், அது முரசொலிக்கும், முதல் குடும்பத்திற்கும் மட்டுமே' என்று சாதாரண மக்கள் கூடப் புரிந்து கொள்கிற வகையில் சேவை புரிந்து, அந்த இயக்கத்தை இன்று நடத்துபவர்கள் மக்களின் பாராட்டுக்குரியவர்கள்; மாநிலத்தின் நன்றிக்குரியவர்கள்.

நன்றி துக்ளக்

Tags:

Leave a Reply