எல்லா மாநிலத்திற்கும் ஒரு_முதலமைச்சர் இருக்கிறார். எல்லா முதலமைச்சருக்குக் கீழும் அந்தந்த துறைகளை கவனிக்க தனித்தனி அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு கீழ் ஐ.ஏ.எஸ். முடித்த அதிகாரிகள் பணியாற்று கின்றனர். இது எல்லா மாநிலத்திற்கும் பொதுவான விஷயம் தான். அப்படியிருக்க, மற்ற

மாநிலங்களில் நடக்க முடியாத முன்னேற்றங்கள், வளர்ச்சிகள் குஜராத்தில் மட்டும் கிடு கிடுவென நடக்க என்ன காரணம்?

இதில் மூடு மந்திரம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. 'நரேந்திர மோடி' என்ற மந்திரச் சொல் மட்டுமே இப்படி குஜராத் முன்னேற்றதை, எந்ததுறைக்கான ஃகிராஃபிலும் செங்குத்தாக வரைந்து கொண்டிருக்கிறது. மோடி என்ற தனி நபருக்கு இருக்கும் ஆர்வமும், தாகமும்தான் காரணம் என்று சொல்ல வேண்டியுள்ளது. முன்னேறிய மேலை நாடுகளுக்கு நிகராகக் குஜராத்தை கொண்டு வர வேண்டுமென்ற வெறி அவருக்கு உள்ளது. தனது மாநிலம் எல்லாத் துறைகளிலும் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற அக்கறை அவருக்கு இருக்கிறது. மக்களை இலவசம் கொடுத்து கவராமல், அவர்களை அவர்களது உழைப்பால் முன்னேற்றிக் காட்ட வேண்டும் என்ற தாகம் அவருக்கு இருக்கிறது. தனது மாநில மக்கள் படிப்பாளிகளாக இருக்க வேண்டும்; மற்ற மாநிலங்கள் முன் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற ஒரு தகப்பனுக்குரிய வேட்கை அவருக்கு இருக்கிறது.

இப்படி அப்பழுக்கற்ற ஒரு உண்மையான ஆசையும் ஈடுபாடும் இருந்தால், எல்லா மாநில முதல்வர்களாலும் தனது மாநிலத்தை முன்னணிக்குக் கொண்டு வர முடியும் என்பதே நரேந்திர மோடி எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்கும் பாடம்.

ஒரு முதலமைச்சருக்கு ஏராளமான வேலைகள் இருக்கும். குடும்பம், நட்பு, அரசியல், ஆகியவற்றிற்கிடையே எல்லா துறைகள் குறித்தும் அவர் அக்கறை காட்ட வேண்டும். தினசரி தூங்கி எழுந்தால் நூற்றுக்கணக்கான ரொட்டீன் அப்பாயின்ட்மென்ட்டுகள், ரொட்டீன் ஃபைல்கள், ரொட்டீன் ஆலோசனை கூட்டங்கள், ரொட்டீன் அரசியல் சிந்தனைகள்… என்று ஓடுகின்ற கடிகாரத்திற்கு இணையாக, ஒரு முதலமைச்சரும் ஓடிக் கொண்டேதான் இருக்க வேண்டும். அதிகாரிகள் குறிப்பிட்டுக் கொடுக்கும் நேரங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு தினமும் திடுதிடு என்று ஓடி மறைந்து விடும்.

"இங்குதான் மோடி மாறுபடுகிறார். சாதாரண சந்திப்புகள், அரசியல் சந்திப்புகள், அரசு ரீதியான சந்திப்புகள், அரசு சார்ந்த வழக்கமான வேலைகள், எதிர்காலம் குறித்த ஆலோசனைகள்… என அத்தனைக்கும் இடம் கொடுக்கும் வகையில் நேரத்தை மேனேஜ் செய்து கொள்கிறார் மோடி. அந்தந்த நேரங்களில் அது மட்டும்தான். வேறு சிந்தனை கிடையாது. இதனால் குறிப்பிட்ட பணிகளில் அவருக்கு தொய்வு என்பது ஏற்படுவதே இல்லை. இதைவிட முக்கியமானது எந்தப் பணியை எடுத்துக் கொள்கிறோமோ, அதில் உத்தரவிடுவதோடு அவர் நின்று கொள்வதில்லை. அதன் ஃபாலோ-அப் விவரங்கள் அவருக்கு வந்து கொண்டே இருக்க வேண்டும்; விசாரித்துக் கொண்டே இருப்பார்" என்றார் ஓர் உயரதிகாரி.

அது முழுக்க முழுக்க உண்மை என்றே தோன்றுகிறது. ஏனென்றால், மற்ற மாநிலங்களில் முதல்வர் எப்போது நினைக்கிறாரோ, அப்போது மட்டும்தான் திடீரென காபினெட் கூட்டம் நடைபெறும். குஜராத்தில் அப்படியில்லை. ஒவ்வொரு புதன் கிழமையும் காபினெட் கூடுகிறது; உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடக்கிறது. எனவே கடந்த வார மினிட்ஸை வைத்துக் கொண்டு 'கடந்த வாரம் இப்படி திட்டமிட்டோமே, அது இப்போது எந்த நிலையில் உள்ளது' என்ற ஃபாலோ-அப், வாராவாரம் நடக்கிறது. இதனால் யாரும், எதுவும் முதலமைச்சர் பார்வையிலிருந்து தப்பி விட முடியாது.

அடுத்ததாக – மோடியின் நேர்மை, குஜராத் எடுக்கும் விச்வரூபத்திற்கு மற்றொரு முக்கிய காரணம். மோடிக்கு எதிராக எழும்பும் குற்றச்சாட்டுகளை நாம் தொடர்ந்து கவனித்தால், வடக்கை நோக்கியே நிற்கும் காம்பஸ் முள் போல, அவை அத்தனையும் கோத்ரா கலவரத்திலும், போலி என்கௌன்டர்களிலுமே வந்து நிற்கும். ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகளால் பெரிதாகக் கூற முடியவில்லை என்ற பலவீனமே இதற்கு காரணம்.

மோடியின் நேர்மை காரணமாக அவர் பின் செல்லும் அமைச்சர்களும், அதிகாரிகளும் கூட ஊழலை விட்டு கொஞ்சம் தள்ளியே நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 'முன் ஏர் வழியே பின் ஏர் செல்லும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, முதல்வர் செல்லும் வழியில், வேறு வழியே இல்லாமல் அமைச்சர்களும், அதிகாரிகளும் முனைப்போடும் துடிப்போடும் செயல்பட்டாக வேண்டிய கட்டாயம் குஜராத்தில் ஏற்பட்டுள்ளது. 'நல்ல டெலிகேஷன், நல்ல டெடிகேஷனை வழங்கும்' என்று எங்கோ கேள்விப்பட்டது, இங்கு நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு பதவிக்கும் தகுதியான ஆட்களைத் தேர்வு செய்து மோடி டெலிகேட் செய்துள்ளார். இதனால் அந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் டெடிகேஷனோடு உழைக்கிறார்கள்.

மோடியின் அரசாங்கத்தில் அதிகாரிகள் மாற்றங்கள் என்பது ரொம்பக் குறைவு. அமைச்சர்கள் மாறுதல் மிக அரிது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குறைந்தது நான்கு, ஐந்து வருடங்களுக்கு ஒரே பதவியில் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். ஒப்படைத்தவரை விரட்டி, விரட்டி வேலை வாங்குகிறார். ஒரு துறை பற்றி அவர்கள் நன்கு அறிந்து, அந்தத் துறையில் முனைப்போடு சாதனை புரிய அதிகாரிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். தவறுகள் நடக்கும்போது அவை கண்டிக்கப்படுகின்றன. கண்காணிப்புகள் அதிகப்படுத்தப்படுகின்றன.

"எந்தத் துறையில் போட்டாலும் அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரிதான். தவறு செய்யும் அதிகாரியை உடனே துறையை விட்டு துறை மாற்றி, 'அந்தத் துறையில் வேண்டுமானால் நீ தவறு செய்து கொள்' என்று லைசென்ஸ் வழங்குவதுபோல் செயல்படுவது பலன் தராது. அந்த அதிகாரியைக் கண்காணிப்பில் வைத்து, அவரைத் தவறு செய்யாதவராகவும், துடிப்போடு செயல்படுபவராகவும் மாற்றி விடுவதே சரியான வழி. அதைத்தான் மோடிஜி செய்கிறார்" என்றார் ஒரு அதிகாரி. எவ்வளவு நியாயமான சிந்தனை?

அதிகாரிகளுக்கு அவர்களது வழக்கமான நிர்வாகத்தை அன்றன்று கவனிப்பதற்கே நேரம் சரியாக இருக்கும். இதனால் தாங்களாக புதிய ஐடியாக்களை உருவாக்கும் வாய்ப்பு கொஞ்சம் குறைவுதான். மிகுந்த ஈடுபாட்டோடு பணியாற்றுபவர்களுக்கே, 'இதை சரி பண்ண வேண்டும்', 'இதை மாற்றிக் காட்ட வேண்டும்' என்றெல்லாம் ஆர்வம் பிறக்கும். குஜராத்தில் எல்லா அதிகாரிகளுக்கும் இந்த ஆர்வத்தை ஊட்டும் வகையில் முதல்வர் சுதந்திரம் அளித்திருக்கிறார். பல மாநிலங்களில் பல உயரதிகாரிகள், 'இந்த ரிஸ்க்கான விவகாரத்தை நாம் ஏன் கையில் எடுக்க வேண்டும்? அடுத்தவர் வந்து பார்த்துக் கொள்ளட்டும்' என்று பணிகளை தள்ளிப் போடும் அவலம் இருந்து வருகிறது.

ஆனால், குஜராத்தில் 'நாலு, ஐந்து வருடத்திற்கு நீதான் இங்கு ராஜா; எல்லா பொறுப்பும் உன்னுடையது; இது, இது உனது டார்கெட்டாக இருக்க வேண்டும்' என்று அதிகாரிகளிடம் பொறுப்புகளை முழுமையாக ஒப்படைத்து விடுகிறார் மோடி. இதனால் அதிகாரிகளுக்கும் பொறுப்பும், அக்கறையும் முழுமையாக ஏற்படுகிறது. தன்னை முழுமையாக நம்பி, தன்னிடம் பொறுப்பை ஒப்படைக்கும் மோடியிடம் நல்ல பெயர் வாங்க முனைகிறார்கள். இதை ஒரு 'பாஸிட்டிவ்வான சைக்கலாஜிகல் ட்ரீட்மென்ட்' என்றே சொல்லலாம்.

இவை எல்லாவற்றையும் விட, முதலமைச்சர் மோடியை மக்களும், தொழிலதிபர்களும் அணுகும் முறை எளிதானது. ஒரு செய்தியை அவர் பார்வைக்குக் கொண்டு செல்ல ஒரு இன்டர்நெட் கனெக்ஷன் இருந்தால் போதுமானது. எந்த விஷயத்தையும், எந்த ஊழலையும் முதல்வரின் பார்வைக்கு ஒரு மெயில் மூலம் கொண்டு போய் விட முடியும். இதனால் எந்த விஷயமும், எந்த நேரத்திலும் முதலமைச்சரின் கவனத்திற்குப் போய்விடும் என்கிற ரீதியில் ஏற்படும் பயமே, குஜராத்தில் லஞ்ச, ஊழலை பெருமளவு குறைக்கிறது எனலாம். குஜராத்தில் ஐந்து நாட்கள் தங்கியிருந்து நான் பார்த்து வியந்த, பிரமித்த, பொறாமைப்பட்ட விஷயங்களையே கட்டுரைகளாக எழுதி வருகிறேன். அந்தக் குறைந்த நாட்களில் என் கவனத்திற்கு வராமல் போன குறைகள் அங்கு இருக்கலாம். அங்குள்ள மக்களின் கருத்து இந்தக் கட்டுரையின் கருத்துகளுக்கு மாறுபட்டு இருக்கலாம் அல்லவா? எனவே ஒரு மாலைப் பொழுதை குஜராத்தில் வசிக்கும் பொதுமக்களிடம் செலவழித்தேன். கிறிஸ்தவ, முஸ்லிம் மக்களிடம் கூட பேசினேன். அவர்களெல்லாம் மோடி குறித்தும், குஜராத் அரசாங்கம் குறித்தும் என்னதான் சொல்கிறார்கள்? அடுத்த வாரம் பார்க்கலாம்.

நன்றி; துக்ளக்

Tags:

Leave a Reply