மின்திட்ட பணிகள் வேகமாக நடந்து வருவதாலும், காற்றாலை மின்உற்பத்தி தொடங்கும் என்பதால் தொடர் மின்தடை குறித்து மே மாதத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 4,000 மெகா வாட் வரையில் மின்பற்றாக்குறை

ஏற்பட்டுள்ளது. இதனால் மின்வாரியம் இதுவரையில் 2 முறை மின்வெட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் வரலாறு காணாத அளவுக்கு மின்தடை இருந்து வருகிறது. அறிவிக்கப்பட்ட மின்தடையை காட்டிலும், மின்தடை நேரம் பல மடங்காக உள்ளது. தொடர்ந்து 8 மணிநேரம் மின்தடையில்லாமல் மின்சாரம் கிடைப்பது என்பது அரிதாக உள்ளது.

இந்த பிரச்னைகள் கவனத்தில் கொண்டுள்ள தமிழக அரசு மின்திட்ட பணிகளை விரைந்து முடிக்க மின்வாரியத்துக்கு உத்தரவிட்டு இருந்தது. அதன் படி, கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மின்நிலைய திட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தற்போதுள்ள நிலவரப்படி, 3க்கும் மேற்பட்ட அனல் மின்நிலையங்கள் சோதனை பணிகளை நோக்கியுள்ளன.

கூடங்குளம் அணுமின்நிலையமும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் மே மாதத்தில் மின்தடை குறைப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், “வள்ளூர் அனல் மின்நிலையத்தில் சோதனை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதேபோல், மேட்டூர் மற்றும் வடசென்னை அனல்மின்நிலையங்களிலும் விரைவில் சோதனை பணிகள் நடக்கவுள்ளன. இதன் மொத்த சோதனை பணிகள் முடியும் நிலையில் தமிழக மின்வாரியத்துக்கு 1,700 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். மேலும் மே மாதத்தில் காற்றாலை மின்உற்பத்தி தொடங்கிவிடும். இதனால், குறைந்தபட்சம் 2,000 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். கூடங்குளம் அணுஉலையும் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதனால் மின்தடை குறைப்பது

குறித்து மே மாதத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும். அப்போதுள்ள நிலைக்கு ஏற்றவாறு மின்தடை நேரம் குறைக்கப்படும் என்றனர்.

Tags:

Leave a Reply