2012-2013-ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளில், நீர்வள மேலாண்மைப் பணிகளுக்கென இதுவரை இல்லாத உயர் ஒதுக்கீடாக 3, 624.73 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நீர்வள ஆதாரத்துறையில் உள்ள 66 அணைகளையும், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்திடம் உள்ள 38 அணைகளையும் உலக

வங்கி உதவியுடன், அடுத்த ஆறு ஆண்டு காலத்தில் 745.49 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த அணைகள் புனரமைப்பு-மேம்பாட்டுத் திட்டம் வரும் 2012-2013-ஆம் ஆண்டிலிருந்து நான்கு கட்டங்களாக செயல் படுத்தப்படும்.

முதல் ஆண்டில், 12 நீர்வள ஆதாரத்துறையில் உள்ள அணைகள் மேம்படுத்தப்படும். இதற்காக இந்த வரவு- செலவுத்திட்ட மதிப்பீட்டில் 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் நீர்வள நிலவளத் திட்டத்தில், கூடுதலாக 1.32 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், அமராவதி உப வடிநிலம் 2012-2013-ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டு, 128.31 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கோடு, முதல்-அமைச்சர் பிறந்த நாளையொட்டி, 29.44 கோடி ரூபாய் செலவில் 64 லட்சம் மரக்கன்றுகளை நடும் பெரும் திட்டம் ஒன்றை இந்த அரசு தொடங்கியுள்ளது. இதுவரை 32.9 லட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில், 10,000 எக்கர் பரப்பிலான ஏரிப் பகுதிகளில் 9.80 கோடி ரூபாய் செலவில் வனத் துறை மரங்களை நட்டு பராமரிக்கும். யானைத் தடுப்பு அகழிகள் போன்ற தடுப்பு அரண்களை அமைப்பதற்கான கூடுதல் பணிகள் 2012-2013- ஆம் ஆண்டிலும் மேற்கொள்ளப்படும். இதற்காக இந்த வரவு- செலவு திட்டத்தில் 10 கோடி ரூபாய் நிதிஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது.

அரசு இலங்கை அகதி களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை பெருமளவில் உயர்த்தி வழங்கி வருகிறது. 2012-2013-ம் ஆண்டில், இத்தகைய உயர்த்தப்பட்ட மாதாந்திர உதவி தொகையை வழங்குவதற்காக வரவு- செலவுத் திட்டத்தில் 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் பி.ஈ., பி.டெக் போன்ற பொறியியல் பட்டப்படிப்புகளில் இணை நுழைவின் மூலம் சேரவும், பட்ட மேற்படிப்புகளான எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ. மற்றும் எம்.டெக் போன்ற படிப்புகளில் சேர்வதற்கும் ஏதுவாக ஒற்றைச்சாளர கலந்தாய்வில் பங்கு கொண்டு பயன்பெறும் வகையில் இந்த கல்வி ஆண்டில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அகதிகளின் குடும்பங்கள் வாழ்ந்து வரும் தற்காலிக குடியிருப்புகளில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு நீடித்து நிலைக்கக் கூடிய வீடுகள் படிப்படியாக கட்டித்தரப்படும். 2012-2013-ம் ஆண்டில் தெரிந்தெடுக்கப்பட்ட முகாம்களில் 2,500 வீடுகள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண உதவித் தொகையை, இதர திருமண உதவித் திட்டங்கள் அளவுக்கு உயர்த்தி இந்த அரசு ஆணையிட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் போதுமான நிதி ஒதுக்கப்படாத காரணத்தால் பல ஆண்டுகளாக நிலுவையிலிருந்த 3,308 மனுக்கள் அனைத்தையும் உடனடியாக தீர்வு செய்யும் வகையில் 6.75 கோடி ரூபாய் நிதியை அரசு கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளது. அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

மேலும் மாற்றுத் திறனாளிகள் எல்லா இடங்களுக்கும் சிரமமின்றி சென்று வர ஏதுவான சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. 2012-2013-ம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளின் நலத்திற்காக 206.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருநங்கையரின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கென திருநங்கையர் நல வாரியத்திற்கு ஒரு கோடி ரூபாய் இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டிலும் இவ்வாரியத்திற்கு நிதி உதவியாக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

Tags:

Leave a Reply