முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்தி கொல்லப்பட்டுள்ளார். அவரது உடல் கல்லணையை ஒட்டி புதர்ப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்தசம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை அவர் 6 மணிக்கு வழக்கம் போல வாக்கிங் போனார். ஆனால் 9 மணியாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் பரபரப்படைந்தனர். அவரது செல்போனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான திமுகவினர் ராமஜெயம் மற்றும் நேரு வீடுகள் முன்பு திரண்டனர். பல்வேறு பகுதிகளாக பிரிந்து சென்று தேடுதல் வேட்டையிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் திருச்சி நகரமே பெரும் பரபரப்பில் மூழ்கியது.

இந்த நிலையில் ராமஜெயம் கடத்திக் கொலை செய்யப்பட்ட தகவல் இன்று பிற்பகல் போலீஸாருக்குக் கிடைத்தது. அவரது உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கல்லணை அருகே நீர் நிரம்பிய புதர்ப் பகுதியில் வைத்து சிக்கியது. அவரைக் கை, கால்களைக் கட்டி சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளது தெரிய வந்தது.

ராமஜெயத்தின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரை யார் கொன்றவர் என்பது தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக நடந்த கொலையா அல்லது நில மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் செய்தனரா என்பது தெரியவில்லை.

Tags:

Leave a Reply