மாவோயிஸ்டுகள் இந்தியாவுக்கு எதிராக போர் நடத்திக் கொண்டு உள்ளனர். இந்த போர் ஜனநாயகத்திற்கு எதிரானது. சுதந்திரம் மற்றும் சட்டத்தின் மாட்சிக்கு விரோதமானது. சுதந்திரத்தை பாது காக்க ,வளர்ச்சியை உறுதி செய்ய இந்திய அரசு மாவோயிஸ்டுகளை தோற்கடிக்க வேண்டும்.

மாவோயிஸ்டுகள் ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் தலையை அறுத்து சிதைக்கப்பட்ட அவரது உடலை ராஞ்சி-ஜாம்ஷெட்பூர் நெடுஞ்சாலையில் வீசிவிட்டு போனார்கள் .இத்துடன் கையால் எழுதப்பட்ட சில பிரசுரங்களையும் அவர்கள் விட்டு விட்டு சென்றனர். இத்தகைய குரூரமான கொலைகள் மேலும் தொடரும் என்று அந்த பிரசுரங்களில் பயமுறுத்தப்பட்டுள்ளது. இதற்க்கு இரண்டு நாட்கள் கழித்து மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள கட்சிரோலி நகரில் மாவோயிஸ்டுகள் 17 போலீஸ்காரர்களைக் கடத்தி அவர்களை கொலை செய்தனர். இந்த 17 பேருமே உள்ளூர் வனவாசிகள். வனவாசிகளின் நலன்களுக்காகத்தான் தாங்கள் போராடுவதாக மாவோயிஸ்டுகள் சொல்கின்றனர். அதாவது மாவோயிஸ்டுகளின் பாஷையில் போராட்டம் என்பதற்கு "பயங்கரவாதம், அழிவு என்று" பொருள். இந்த ரத்த வெறி பிடித்த காட்டேரிகளை ஆதரிப்பவர்களும் ஊடகங்களில் உள்ளனர். மாவோயிஸ்டுகளின் கொலை வெறி தாகம் குறித்து அவர்கள் ஒரு சிறிதும் வருத்தப்படுவது கிடையாது. இத்தகைய வன்முறை நிறைந்த சம்பவங்களை மேலும் மேலும் அரங்கேற்றப் போவதாக கோடீஸ்வர ராவ் என்று அழைக்கப்படும் கிஷன்ஜி (மாவோயிஸ்டு தலைவர் )கூறியுள்ளார் .(கடவுள் புண்ணியத்தில் கிஷன்ஜியை இப்போது காலி செய்து விட்டனர்)

ஆம். இது யுத்தம்தான். சட்ட பூர்வமாக அமைக்கப்பட்டுள்ள இந்தியநாட்டுக்கு எதிரான யுத்தம் இது. ஜனநாயகம், சட்டம், நீதித் துறைக்கு எதிரான யுத்தம் இது. இந்த யுத்தம் சுதந்திரத்துக்கே எதிரானது. இந்த யுத்தம் இப்போது மேலும் மேலும் விரிவுபடுத்தப்பட்ட பல பகுதிகளில் பரவி வருகின்றது. சத்தீஸ்கரின் பகுதிகளிலும், ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்காளம், ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா போன்ற பகுதிகளில் இந்த மாவோயிஸ்டுகள் யுத்தம் பரவி நடத்தப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால் நாட்டின் மூன்றில் ஒரு பகுதியில் மாவோயிஸ்டுகள் யுத்தம் செய்து வருகின்றனர். அரசியல் சட்டம், ஜனநாயகம், நீதித்துறை, பத்திரிக்கை சுதந்திரம், ஏன் சராசரி இந்தியன் நம்பிக்கை வைத்துள்ள எல்லாவற்றுக்குமே எதிராக, விஷம் கக்கும் மாவோயிஸ்டுகள் இந்த யுத்தத்தை நடத்தி வருகின்றனர். இந்திய நாட்டை வன்முறை மூலம் தூக்கி எறிவதுதான் தங்கள் லட்சியம் என்று மாவோயிஸ்டுகள் திமிரோடு அறிவித்துள்ளனர். இவர்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு, அவர்கள் பிடரியை உலுக்கி, அவர்களை அழித்து ஒழிப்பதை விட வேறு வழி ஏதேனும் உள்ளதா?நம்முடைய லட்சியக் கோட்பாடுகளுக்கு மாவோயிஸ்டுகள் பெருத்த ஆபத்தாக உள்ளனர். எனவே அவர்களை ஒழித்துக் கட்டுவதை தவிர நம் முன் வேறு என்ன வழி உள்ளது?

வேறு வழி இல்லை என்று நான் நினைக்கிரேன். ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் பட்டணத்தில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினரில் ஒரு சாரார் இது பற்றி வேறு விதமாக முணுமுணுக்கின்றனர். இது ஒரு சிறு குழுதான். ஆனால், அவர்களுடைய செல்வாக்கு, அவர்களுடைய எண்ணிக்கயைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. அறிவு ஜீவிகள், கருத்து உருவாக்குபவர்கள் என்று அவர்கள் கருதப்படுகின்றனர். இவர்கள் தொலைக்காட்சி நிகழ்சிகளில், கிறுக்குத்தனமான தர்க்கங்களை முன்வைக்கின்றனர். அதைக் கேட்டு நான் அதிர்ந்து போய் இருக்கிறேன். அவர்கள் இந்திய அரசையும், மாவோயிஸ்டுகளையும் ஒரே தட்டில் வைக்கின்றனர். ரத்தக்கரை படிந்த மாவோயிஸ்டுகளுக்கு விண்ணப்பம் போடுவதற்கு முன்னால், "அரசின் ஒடுக்கு முறை " முடிவுக்கு வரவேண்டும் என்று இந்த அறிவு ஜீவிகள் கூறுகின்றனர். ஆனால் இதில் ஒரு வினோதம் உள்ளது. எந்த மாவோயிஸ்டுகளுக்காக இந்த அறிவு ஜீவிகள் வக்காலத்து வாங்குகிறார்களோ, எந்த நக்சல்களின் ஊது குழல்களாக இவர்கள் உள்ளார்களோ, இவர்களை மாவோயிஸ்டுகள் சீந்துவதே இல்லை. மாறாக மாவோயிஸ்டுகள், தங்களுடைய கொள்கையை தூக்கிப் பிடிக்கும் இந்த அறிவு ஜீவிகளை அவமதிப்போடு பார்க்கின்றனர். பொதுவாக மார்க்சிஸ்டுகளும், குறிப்பாக மாவோயிஸ்டுகளும், இந்த அறிவு ஜீவிகளை எப்போதுமே கேவலமாகத்தான் பார்த்து வந்துள்ளனர். ரஷ்யா, சீனா, கியூபா போன்ற இடங்களில் அவர்களது பைத்தியக்காரத்தனமான அரசியல் சித்தாந்தம் வெற்றி பெற்றபோது, மார்க்சிஸ்டுகள், இந்த அறிவு ஜீவிகளைத்தான் முதலில் சுட்டுக் கொல்லும் அணியின் முன்பு நிறுத்தினர். இருந்தும் தீயை நோக்கி விட்டில் பூச்சிகள் ஓடுவதுபோல், மனித உரிமைவாதிகள் என்ற போர்வையில் நடமாடும் இந்த அறிவு ஜீவிகள் மாவோயிஸ்டுகள் என்னும் தீயை நோக்கி ஓடுகின்றனர்.

இந்த இடதுசாரி தேசத் துரோகிகளின் முதல் குறியாக ஒன்று திரட்டப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. ஆனால் இந்த மரண வியாபாரிகளின் "ஜனநாயக உரிமைகளைக் குறித்து "கம்யூனிஸ்ட் கட்சிகள் செய்யுள்களை அள்ளி தெளிக்கின்றனர். இது எனக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. ஒரு தொலைக்காட்சி கலந்துரையாடல் சமீபத்தில் நடை பெற்றது. அதில் பங்கு கொண்ட இடது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நிலோத்பல் பாசு என்னைப் பார்த்து "நான் ஜார்ஜ் புஷ்ஷின் சீடனாக இருப்பதாக" குற்றம் சாட்டினார். இந்த மாவோயிஸ்டுகள் பயங்கர வாதிகளுக்கு எதிராக இடைவிடாத போரை நடத்த வேண்டும் என்று நான் சொன்னதற்காக இந்த பட்டம் எனக்கு கிடைத்தது. இத்தனைக்கும் கொஞ்சம் இடது கம்யூனிஸ்ட் தொண்டர்களை அவர்களுடன் கொள்கை ரீதியாக மாறுபட்ட மாவோயிஸ்டுகள் எவ்வித இரக்கமும் இன்றி தீர்த்துக் கட்டியுள்ளனர். உண்மை இப்படி இருந்தும் கூட பாசு என்னை இவ்வாறு குற்றம் சாட்டிப் பேசினார். கடந்த வெள்ளிக்கிழைமை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பரதன் நக்சல்களுக்கு எதிரான போரில் பாதுகாப்புப் படைகள் சில தவறுகளை இழைத்து விட்டதாக சகட்டு மேனிக்கு குற்றம் சாட்டினார். வன்முறையை ஒடுக்க வன்முறையைப் பயன்படுத்துவது தீர்வு ஆகாது என்று அவர் சொன்னார். எல்லா கம்யூனிஸ்ட் களுமே உழைக்கும் வர்க்கத்தினரின் புரட்சியை உருவாக்க "வன்முறைதான்" ஒரே வழி என்று நம்புகின்றனர். அவர்கள் எந்த விதமான சிவப்பு சாயம் பூசிக் கொண்டு இருந்தாலும் எல்லா கம்யூனிஸ்ட்களும் இந்த அடிப்படையில்தான் செயல் படுகின்றனர். எனவே பரதனின் "மாவோயிஸ்டுகள் பால் உள்ள திடீர்க் காதல் எனக்கு வியப்பை அளிக்கவில்லை.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக அறிவு ஜீவிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். போலீஸ்காரர்கள் சட்டத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஏற்ப செயல் படவேண்டும் என்று அவர்கள் சொல்கின்றனர்.

ஆனால் மாவோயிஸ்டுகள் யாரை வேண்டுமானாலும் சுட சுதந்திரமாக அனுமதிக்கப்படவேண்டும் என்று இவர்கள் கூறுகின்றனர். மாவோயிஸ்டுகள் யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம். உடல் உறுப்புகளை சிதைக்கலாம். எதையும் நெருப்பு வைத்துக் கொளுத்தலாம், தனிமனிதர்களை அழித்து ஒழிக்கலாம், ஆனால் யாரும் அவர்களை இதற்காக கேள்வி கேட்கக் கூடாது. அரசு அவர்களை தண்டிக்கக் கூடாது என்பதுதான் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக அறிவு ஜீவிகளின் வாதம். புரட்சி என்பது விருந்தளிப்பில் கூட்டம் கூடுவது போல் அல்ல. புரட்சியாளர்கள் வரை முறைகளோடு நடந்து கொள்ள வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கக் கூடாது என்று மாசே துங் சொல்லியுள்ளார். இதில் இருந்து நக்சலிசத்தை ஆதரிப்பவர்கள் ஒரு பக்கத்தை எடுத்துக் கொண்டு, அறிவு ஜீவிகள் வேஷத்தைப் போட்டுக் கொண்டு, அரசுக்கும், லஸ்கர் இ தொய்பா, மாவோயிஸ்டுகள் போன்ற பயங்கரவாதிகளுக்கும் வேறு வேறு அளவுகோல்களை உபயோகம் செய்ய வேண்டும் என்று வெட்கம் இன்றி வெளிப்படையாக கூச்சல் போடுகின்றனர்.

ஆனால் தங்களுடைய நோக்கங்கள் குறித்து மாவோயிஸ்டுகள் கொண்டுள்ள தெளிவை நான் பாராட்டித்தான் ஆக வேண்டும். மக்களின் சிவில் உரிமைகளுக்கான அமைப்பு, மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான அமைப்பு போன்ற ஸ்தாபனங்கள் துவக்கப்பட்டபோது, மனித உரிமைகளைப் பாதுகாப்பது, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது, அரசின் அங்கங்கள் வரை முறைகளை மீறாமல் பார்த்துக் கொள்வது போன்ற உன்னத நோக்கங்கள் அவைகளுக்கு இருந்தன. ஆனால் மாவோயிஸ்டுகள் இந்த ஸ்தாபனங்களை எல்லாம் கபளீகரம் செய்து விட்டனர். இதன் காரணமாக அந்த ஸ்தாபனங்களும் அவை போன்ற இதர ஸ்தாபனங்களும் மாவோயிஸ்டுகளின் ஊது குழல்களாக மாறிவிட்டன. அவர்களுக்கு எல்லாம் சாதாரண மனிதனின் மனித உரிமைகள் ஒரு பொருட்டே அல்ல. மாவோயிஸ்டுகள் வாலிபப் பருவம் எய்தாத சிறுவர்களைக் கூட மிருகத்தனமான முறையில் கொல்லலாம். அவர்களுடைய பெற்றோர்கள் "போலீசுக்கு உளவு சொல்பவர்கள்" என்ற குற்றச்சாட்டின் பேரில் மாவோயிஸ்ட்கள் இத்தகைய கொலைகளை அரங்கேற்றலாம். சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தில் இத்தகைய குரூரங்கள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. உண்மையை ஆராய அமைக்கப்பட்ட ஒரு குழு இதை மறுக்க இயலாத சாட்சியங்களுடன் நிரூபித்து உள்ளது. ஆனால் மனித உரிமைவாதிகள் என்ற போர்வையில் உலா வரும் இந்த மாவோயிஸ்டுகளின் அடி வருடிகளுக்கு "அப்பாவி மாவோயிஸ்டுகள்தான் காப்பாற்றப்பட வேண்டியவர்கள்" அப்பாவி "இஷ்ராத் ஜெஹன் போன்ற லஸ்கர் இ தொய்பா ஆட்கள்தான் காப்பாற்றப் பட வேண்டியவர்கள். யாரிடம் இருந்து மாவோயிஸ்டுகளையும், லஸ்கர் ஆதரவாளர்களையும் காப்பாற்ற வேண்டும் தெரியுமா ?" கொலைக் கார இந்திய அரசிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்". முன்னாள் பிரதம மந்திரி நரசிம்மராவ் ஒரு முறை சொன்னார், "ஒவ்வொரு முறையும் என்கௌண்டர்கள் நடக்கும்போதெல்லாம் சிலர் போடும் கூக்குரலையும் கூச்சலையும் பார்க்கும்போது, இந்தியாவில் பயங்கரவாதிகளுக்கு மட்டும்தான் மனித உரிமைகள் உண்டு. வேறு எவருக்கும் மனித உரிமைகள் கிடையாது என்று தோன்றுகிறது ". மாவோயிஸ்ட்களின் அடிவருடிகளின் செய்கைகள் இந்த வர்ணிப்புக்கு எவ்வளவு பொருத்தமாக உள்ளது பார்தீர்களா?

இடது சாரிகளும், அவர்களின் கைக்கூலிகளும் பல காலமாக இந்தியாவின் பத்திரிக்கைகள், கருத்து உருவாக்கும் ஊடகங்கள், ஆகியவற்றை தங்கள் வசமாக்கிக் கொண்டு பேயாட்டம் போட்டு வருகின்றனர். இதை எல்லாம் இந்தியாவின் எஞ்சிய பகுதி ஊமைத்தனமாக சகித்துக் கொண்டு வேடிக்கை பார்த்து வருகிறது. மாவோயிஸ்டுகளின் எடுபிடிகள் நிதானமான தீர்கமான பாரபட்சம் அற்ற குரல்களை நெரித்துவிட்டு, சுடுகாட்டு அமைதியை உருவாக்கி வைத்துள்ளனர். எந்த அளவுக்கு என்றால் இந்திய அடையாளத்தின் மீது தாக்குதல் தொடுப்பவர்கள் மட்டும்தான், தேசத்தின் மீது தாக்குதல் தொடுப்பவர்கள் மட்டும்தான் சமூகத்தில் உலவுகின்றனர் என்ற நிலையை உருவாக்கி வைத்துள்ளனர். இந்த மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் அறிவுபூர்வமாக நாணயம் இல்லாதவர்கள். நேர்மை அற்றவர்கள். ஒழுக்க ரீதியாக சிதைந்து போனவர்கள். கிறுக்குத்தனமான சித்தாந்தத்தை முன் மொழிபவர்கள் . இவர்களால் வழி நடத்தப் படுவதை விரும்பாதவர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். அவர்கள் அனைவரும் தங்கள் மௌனத்தைக் கலைத்துவிட்டு மாவோயிஸ்ட்கள் மற்றும் அவர்களது அடிவருடிகளை எதிர்க்க ஓர் அணியில் திரளவேண்டும்.

சரியான வழியில் சிந்தனை செய்யும் இந்தியர்கள்தான் பெரும்பான்மையினராக உள்ளனர். இந்திய சமூகத்தை அவர்கள் மீட்டு எடுத்தாக வேண்டும். இது சம்பந்தமாக இப்போது யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் விஷயம் இதோடு மட்டும் நின்று விடுவது கிடையாது. கடைந்து எடுத்த வறுமையில் உழன்று கொண்டிருக்கும் பின்தங்கிய கிராமங்களுக்கு வளமை, மற்றும் வளர்ச்சியை கொண்டு வரவேண்டியதும் மிகவும் அவசியமானது. குறிப்பாக வனவாசிகளுக்கு மத்தியில் வளமையை கொண்டு வரவேண்டியது அவசிய அவசரத் தேவையாகும். புதுதில்லி, மற்றும் வேறு பல மாநிலங்களைப் பலகாலம் ஆண்டு வந்தவர்கள் இந்த விஷயத்தில் அக்கறையே செலுத்தவில்லை. வனவாசிகளின் நலன்களை கிராமங்களின் நலன்களை அவர்கள் இதுகாறும் ஏறெடுத்தும் பார்க்காமல் புறக்கணித்து வந்துள்ளனர்.

ஆனால் நடந்து கொண்டிருக்கும் இந்த யுத்தம் சரியான வழியில், முறையில் சிந்திக்கும் பெரும்பாலான இந்தியர்களுக்கு அவர்களுக்கு உரிய இடத்தை சமூகத்தில் பெற்றுத் தருவதோடு மட்டும் நின்றுவிடாது. வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ள கடைந்தெடுத்த மிகவும் பின்தங்கிய கிராம மக்களின் நிலையை மேம்படுத்தி அவர்களிடம் வளமை மற்றும் வளர்ச்சியைக் கொண்டு வருவதும் இந்த யுத்தத்தில் அடங்கும். புது தில்லியையும் பல மாநிலங்களையும் இது வரை ஆண்டவர்கள் கிராம மக்களைப்பற்றி குறிப்பாக வனவாசிகளைப் பற்றி கவலையே படாமல் அவர்களைப் புறக்கணித்து வந்துள்ளனர். அதே சமயத்தில் மாவோயிஸ்டுகள் தாங்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் எவ்வித வளர்ச்சிப் பணிகளையும் அரசு செய்ய விடாமல், பலவந்தமாக தடுத்து விடுகிறார்கள் என்பதும் உண்மையே. மாவோயிஸ்டுகள் செல்வாக்கு பெற்றுள்ள பகுதிகளில் எந்த சாலைகளையும் போட முடியாது. பொது சுகாதார நிலையங்கள் இயங்க மாவோயிஸ்ட்கள் விடுவது இல்லை. அப்பாவி கிராம மக்களை மாவோயிஸ்டுகள் பீதியில் உறைய வைக்கின்றனர். கிராம மக்களை தங்களுடைய பித்துப்பிடித்த சித்தாந்தத்தை அமல் செய்யும் நபர்களாக மாவோயிஸ்டுகள் வன்முறை மூலம் மாற்றுகின்றனர். அரசும், சமூகமும்தான் கடைந்தெடுத்து ஏழ்மையில் உஷன்று கொண்டிருக்கும் கிராம மக்களை, வளர்ச்சி என்றால் என்ன என்பதே தெரியாமல் உள்ள அந்த அப்பாவிகளை காப்பாற்ற ஒரு தீர்கமான போரை துவக்க வேண்டும். மாவோயிஸ்டுகளின் அரக்கத்தனமான பிடியில் இருந்து அந்த கிராம மக்களை விடுவிக்க வேண்டும். இது வெறும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் மட்டும் அல்ல. இது வறுமைக்கு எதிரான யுத்தமும் கூட ஆகும். இந்த போரை வெகு காலத்திற்கு முன்பே துவக்கி இருக்க வேண்டும். ஆனால் ஒரு புனிதமான காரியத்திற்காக ஒவ்வொருவரும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள இன்னும் காலம் தாழ்ந்து போய் விடவில்லை.

மேற்கண்ட கட்டுரை டெய்லி பயோனியர் என்கிற ஆங்கில நாளிதழில் ஏப்ரல் 8 அன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதன் தமிழாக்கம் இதுவாகும்.

ஆங்கிலத்தில் சந்தன் மித்ரா

தமிழாக்கம் லா..ரோஹிணி

Leave a Reply