தமிழக பாரதிய ஜனதா கட்சியின் 5-வது மாநில மாநாடு மதுரையில் மே 10, 11 தேதிகளில் நடைபெறவுள்ளது.

தாமரை சங்கமம் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த மாநாட்டுக்காக மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சி என்பதை தொண்டர்களுக்கும்,

பொதுமக்களுக்கும் உணர்த்தும் வகையில் டில்லி செங்கோட்டை, தமிழகத்தின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை ஆகியவற்றின் மாதிரி முகப்புடன் மாநாட்டு அரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 28, 29 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த தாமரைச் சங்கமம் மதுரையில் சில நாள்கள் இடைவிடாது பெய்த கோடை மழையின் காரணமாக மே 10, 11-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மாநாட்டு வேலைகளில் மிகவும் பிசியாக இருந்த மாநிலத் தலைவர் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணண்  தமிழ் ஹிந்துக்கு தந்த பேட்டி.

2014 மே மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு சில மாதங்களுக்கு முன்பு மாநாடு நடந்தால் பாஜகவின் பலத்தையும் காட்டலாம். தொண்டர்களையும் உற்சாகப்படுத்தலாம். இப்போது இவ்வளவு மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன?

பாஜகவின் பலத்தை மற்றவர்களுக்கு காட்டுவதற்கான மாநாடு அல்ல இது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையை ஒவ்வொரு தொண்டனின் மனதிலும் விதைப்பதற்காகவே இந்த மாநாடு. ஆனாலும் தமிழகத்தில் பாஜக எங்கே இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு பதிலடியாகவும் இந்த மாநாடு அமையும்.

மத்தியில் ஆட்சி சரி. தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்கிறீர்கள். 234 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சட்டப்பேரவையில் இப்போது பாஜகவுக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத நிலையில் ஆட்சி அதிகாரம் சாத்தியம் தானா?

1998-ல் பாஜக மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று 1996-ல் கூறியபோது யாரும் நம்பவில்லை. ஆனால், 1998-லிருந்து அடுத்த 6 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சிதான் செங்கோட்டையில் இருந்தது. எதுவும் சாத்தியமில்லை என்று கூறிவிட முடியாது.  இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் பாஜக தொண்டர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அமைப்போம் என்ற உறுதிமொழியை எடு்க்க இருக்கின்றனர். எனவே, இது கூடி களையும் கூட்டமாக இருக்காது. உறுதிமொழி மாநாடு இது.

மாநாட்டுக்கு 5 லட்சம் பேர் வர வைக்க வேண்டுமானால் அதற்காக பல மாதங்களாக திட்டமிட்டிருக்க வேண்டுமே?

ஆம். மாநாட்டை முன்னிட்டு கடந்த சில மாதங்களாக சிறப்பு உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை நடத்தினோம்.  அதன்  மூலம் 6 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களோடு ஏற்கெனவே உள்ள 7 லட்சம் உறுப்பினர்களையும் சேர்த்தால் மாநாட்டுக்கு 5 லட்சம் பேர் வருவது உறுதி.

மாநாட்டின் மூலம் மக்களுக்கு என்ன செய்தி சொல்லப் போகிறீர்கள்?

மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சிக்கு வர வேண்டியதன் காரணங்களை மக்களுக்கு சொல்வோம். பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சி நடைபெறும் குஜராத், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், கோவா, ஜார்க்கண்ட், கர்நாடகம், பிகார், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் அடங்கிய மிகப்பெரிய கண்காட்சி மாநாட்டு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற சாதனைகள் தமிழகத்திலும், தேசிய அளவிலும் நிகழ்த்தப்பட பாஜகவை ஆதரியுங்கள் என கேட்போம்.

தமிழகத்தில் அதிமுக, திமுக இரண்டு திராவிடக் கட்சிகளையும் மீறி காங்கிரசால் வளர முடியவில்லை. மூன்றாவது இடத்தை தேமுதிக பிடித்துள்ளது.  இதுதவிர பாமக, மதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் உள்ளன. இதையெல்லாம் மீறி பாஜக வளர்வது சாத்தியம்தானா?

நான் முன்பே கூறியபடி முடியாதது என்று எதுவும் இல்லை. தமிழகத்தில் தனியொரு தலைவரை மையப்படுத்தி தான் அரசியல் சுழல்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் என்ற தனி மனிதர்களை நம்பிதான் கட்சிகள் உள்ளன. அந்த கட்சிகளை நம்பிதான் மக்கள் வாக்களிக்கின்றனர். உதாரணமாக நான் கடந்த 40 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் இருக்கிறேன். ஆனால் என்னைவிட சில ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் நுழைந்த விஜயகாந்த் பிரபலமாகி இருக்கிறார். காரணம் சினிமா கவர்ச்சி. ஆனால், இந்த தனி மனித மற்றும் சினிமா கவர்ச்சியை எல்லாம் மீறி பாஜக வளரும். ஏனெனில் பாஜக கொள்கையை மட்டுமே நம்பியுள்ளது. அந்தக் கொள்கைக்கு அழிவில்லை.

என்ன தான் முயன்றாலும் தேர்தல் என்று வந்துவிட்டால் பாஜக தனிமைப் படுத்தப் படுகிறதே?

அப்படி கூறுவதை நான் ஏற்க மாட்டேன். தமிழகத்தில் அதிமுக, திமுக, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் என அனைத்துக் கட்சிகளும் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்தவர்கள்தான். இன்று குஜராத் கலவரத்தை பற்றி பேசுகிறார்கள். ஆனால், அந்த நேரத்தில் திமுக பாஜக கூட்டணியில் இருந்தது என்பதை மறக்க வேண்டாம்.  பாஜக பலமாக இருந்தால் அனைவரும் தேடி வருவார்கள். அதனால்தான் கூட்டணி அமைப்பதைவிட கட்சியைப் பலப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

முஸ்லிம, கிறிஸ்வதவர்களுக்கு எதிரான கட்சி பாஜக என்று தொடர்ந்து பிரசாரம் செய்யப்படுகிறது. இது பாஜகவுக்கு பலவீனம் தானே? ஏனெனில் பல தொகுதிகளில் வெற்றியை தீர்மானிப்பது சிறுபான்மை மதத்தினரின் வாக்குகள் தானே?

முஸ்லிம், கிறிஸ்தவர்களை பாஜகவின் எதிரிகளாக தொடர்ந்து சித்தரித்து வருகின்றனர். ஆனால், அது உண்மையல்ல என்பதை பாஜகவை நெருங்கி வந்து பார்க்கும் சிறுபான்மையினர் புரிந்து கொள்கிறார்கள். அதனால் இப்போது தமிழகத்திலும் பெரும் எண்ணிக்கையில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படுவதுபோல இந்து ஏழை மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்பதற்காக மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினீர்கள். நாகர்கோயிலிலும், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரிலும், ஒரு லட்சம் பேர் திரண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தினீர்கள். ஆனாலும் அக்கோரிக்கை மத்திய, மாநில அரசுகளால் கண்டுகொள்ளப் படவில்லையே?

ஏழை இந்துக்களுக்கு போலி மதச்சார்பின்மை பேசும் அரசுகளிடம் நீதி கிடைக்காது என்று எங்களுக்குத் தெரியும். ஆனாலும் மக்களுக்காக செய்ய வேண்டிய கடமையை செய்தோம். இதுபோன்ற கோரிக்கைகளை நிறைவேற்றவே பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்கிறோம். பாஜக ஆட்சிக்கு வந்தால் மத பேதமின்றி அனைவருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

நீங்கள் பாஜக தலைவராகி இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. கட்சி வளர்ச்சிக்காக இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்தது என்ன?

திறமையான தொண்டர்களை உருவாக்க மாவட்ட, கோட்ட, மாநில அளவில் பயிற்சி முகாம்கள் – நீங்களே குறிப்பிட்டதுபோல ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவி வழங்கக்கோரி நடைபெற்ற போராட்ட்ங்கள் – தாமரை யாத்திரை – மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து தொடர் போராட்டங்கள் – இவற்றை நடத்தினோம். நடத்தி வருகிறோம். இவை அனைத்தும் கட்சி வளர்ச்சிப் பணிகளே.

மாநாட்டுப் பணிகள் காரணமாக மேலும் அதிக நேரம் பேச முடியாததால் அவரிடம் இருந்து விடைபெற்றோம். மாநாட்டு்க்கு தமிழ்ஹிந்து ஆசிரியர் குழுவினர், ஆதரவாளர்கள், வாசகர்கள் அனைவரும் கண்டிப்பாக வர வேண்டும் என்று அன்புடன் அழைத்தார்.

நன்றி தமிழ் ஹிந்து

Tags:

Leave a Reply