மதுரை விரகனூர் ரிங்ரோடு பகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில மாநாடு  இன்று காலை தொடங்குகிறது. இம்மாநாட்டுக்கு மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். அகில இந்திய தலைவர் நிதின் கட்டகாரி மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

எல்.கே.அத்வானி, சுஷ்மா, சுவராஜ் உள்பட பல தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக எல்.கே.அத்வானி, தனி விமானம் மூலம் நாளை மதுரை வருகிறார். அவர் வருகையையொட்டி மதுரை விமான நிலையம் முதல் மாநாட்டு பந்தல் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை போலீஸ் அதிகாரிகள் செய்துள்ளனர். இந்த பாதுகாப்பு பல்வேறு கட்டங்களாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக 11 சோதனை சாவடிகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் மதுரையை நோக்கி வரும் வாகனங்கள் மற்றும் மதுரையிலிருந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் முழுமையாக சோதனையிடப்பட்டு அனுப்பப்படும்.

இதேபோல் தீவிரவாத செயல்பாடுகள் பற்றி அறிய பல்வேறு படைகள் அமைக்கப்பட்டு உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் வெடி குண்டு நிபுணர்களை கொண்ட 25-க்கும் மேற்பட்ட தனிப்படை அமைக்கப்பட்டு மாநாடு நடக்கும் பகுதியில் இருந்து விமான நிலையம் மற்றும் தலைவர்கள் செல்லும் வழித்தடங்கள் அனைத்தும் முழுமையாக சோதனையிடும் பணியில் சுமார் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மாநாட்டு உள் பகுதியில் மட்டும் 500க்கும் அதிகமான போலீஸôர் கண்காணிப்பில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.  பாரதிய ஜனதா  மாநாட்டு நிர்வாகிகளுக்கும் வயர்லெஸ் தரப்பட்டுள்ளது . இந்த வயர்லெஸ்தொடர்பும் காவல்துறையினர் பாதுகாப்புடன் இணைக்கப்பட்டு கண் காணிப்பு கூட்டுப்பணியாக மேற்கொள்ளப் பட்டுள்ளது

மாநாட்டு பந்தலில் சுமார் 37 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு உள்ளது. மாநாட்டு முகப்பில் பாராளுமன்ற கட்டிடம், தமிழக சட்டசபை கட்டிட தோற்றமும் அமைக்கப்பட்டுள்ளது. தலைவர் பேசும் மேடை தாமரை வடிவில் பிரமாண்ட முறையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

மாநாட்டுக்கு வருபவர்கள் மருத்துவ பரிசோதனை செய்யும் வகையில் இலவச மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு சர்க்கரை, ரத்த அழுத்த பரிசோதனைகள் செய்து கொள்ளலாம். இம்மாநாட்டு நிகழ்ச்சிகளில் காண 11 இடங்களில் எல்.இ.டி. திரையில் ஒளி பரப்பப்படுகிறது.

மாநாட்டு பணி குறித்து மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

பாரதீய ஜனதா மாநில மாநாட்டு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. 10,11 ஆகிய 2 நாட்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டை பா.ஜனதா கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் தேச நலனில் அக்கறை கொண்டவர்களும், தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். மேலும் தமிழ் வளர்ச்சி குறித்தும், தமிழ் வாழ்ந்த- வீழ்ந்த வரலாறு குறித்தும் பா.ஜனதா கட்சியின் வரலாறு குறித்தும் புகைப்பட கண்காட்சியில் விளக்கப்படங்கள் வைக்கப்படுகிறது. மொத்தத்தில் தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படும் விதமாக இம் மாநாடு அமையும்.

Tags:

Leave a Reply