தமிழகத்தில் திராவிட மாயையிலிருந்து அறிவுப்பூர்வமாக மக்களை விழிப்படைச் செய்ய பாஜகவினர் பிரசாரத்தில் ஈடுபடுவது அவசியம் என்றார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், மாநில முன்னாள் தலைவருமான இல.கணேசன்.

மதுரையில் நடைபெறும் பாஜக தாமரைச் சங்கமம் மாநில மாநாட்டில் அவர் பேசியபோது இவ்வாறு கூறினார்.

திராவிட இயக்கத் தலைவர்களிடையே கொள்கை நீர்த்துப் போய்விட்டது. அதுபோலவே அவர்களது பிரிவினைவாதம், மொழிக் கொள்கை என அனைத்தும் நீர்த்துப்போய் விட்டன. திராவிடம் என்பதே ஒரு மாயை. அந்தப் பொய்யான கருத்தை திரும்பத் திரும்பக் கூறி மெய்யாக்கும் வகையில் மக்களை ஏமாற்றினர். மக்களும் மயங்கிவிட்டனர். ஆகவே, அந்த மாயையிலிருந்து மக்களை விடுபடச் செய்ய வேண்டும்.

திராவிட இயக்கத்துக்கு நூற்றாண்டு விழாக் கொண்டாடுகிறார்கள். திராவிடம், ஆரியம் வேறு வேறு என்றும் கூறுகிறார்கள். இதில் இரு இனத்துக்கும் விரோதம் என்பது போலவும் பேசுகிறார்கள். இது சரியல்ல.

திராவிடம் என்பது இடத்தின் பெயர். ஆரியம் என்பது நல்ல குணமுடையவர் என்பது பொருள். ஆகவே திராவிடத்துக்கு ஆரியம் மாற்றுச்சொல் அல்ல. திராவிடம் என்பது தனி இனமும் அல்ல. திராவிடம் எனும் சொல் தமிழ் முன்னோர் கூறியதும் அல்ல. கால்டுவெல் என்ற ஆங்கிலேயர் கூறியதுதான்.

தமிழ் இலக்கியத்தில் தமிழர் தனி இனம் என கூறப்படவில்லை. கால்டுவெல் பிரித்தாளும் சூழ்ச்சியால் திராவிடம் எனக் கூறுகிறார். அந்தச் சூழ்ச்சியில் திராவிட இயக்க ஆரம்பக் கட்டத் தலைவர்கள் வீழ்ந்துவிட்டனர்.

திராவிடம் 4 மாநிலங்களை உள்ளடக்கியது என்கிறார்கள். ஆனால் இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஏன் தமிழகத்தில் மட்டுமே நடைபெற்றது? தமிழ் மொழிக்கு மாநாடு நடத்துவது போல திராவிட மொழிக்கு மாநாடு நடத்துவதில்லையே ஏன்?

திராவிட இயக்கத்தில் இருந்து பிரிந்து வந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, வைகோ போன்றவர்களை குறிப்பிட்ட மாநிலம், மொழியைக் கூறி திராவிடத் தலைவர் தானே பேசுகிறார். ஆகவே திராவிடம் எனும் மாயையை சித்தாந்த ரீதியாக மக்களிடம் எடுத்துக்கூறவேண்டும்.

திராவிட இயக்கத்தின் நாத்திகக் கொள்கையும் நீர்த்துப்போய் விட்டது. இப்போது தெய்வ நம்பிக்கை இல்லாத திமுகவினரைப் பார்க்க முடியாது. அதுபோலவே மொழி குறித்துப் பேசினார்கள். இப்போது தமிழில் எழுதத்தெரியாத, பேசத் தெரியாத தலைமுறை உருவாகிவிட்டதைக் காணமுடிகிறது.

ஆகவே, அன்னியரால் உருவாக்கப்பட்ட திராவிடத்தை அறிவுப்பூர்வமாக அகற்றிட கிராமம், கிராமமாகச் சென்று பிரசாரம் செய்யவேண்டும். அப்படி பிரசாரம் செய்ய முன்வருவோருக்கு தமிழ் இலக்கியத்தில் தேசியம் குறித்த கருத்தை கற்பிக்கத் தயார் என்றார் இல.கணேசன்.

Tags:

Leave a Reply