மதுரையில் பாஜக-வின் தாமரை சங்கமம் (மே 10, 11) மிக வெற்றிகரமாக முடிந்தது பற்றி அனைவரும் மகிழ்ச்சி கொண்டிருக்கும் வேளையில், அந்த வெற்றியின் படிப்படியான திட்டமிடல் பற்றியும், அந்த வெற்றித்தேரை ஒவ்வொரு படிநிலைக்கும் கவனமாகவும், ஆழ்ந்த ரசனையோடும், தீவிர முனைப்போடும் கூடிய கடின உழைப்பினால் நிலைசேர்த்த

எண்ணிலடங்காத் தொண்டர்களையும், மாவட்ட, மாநில நிர்வாகிகளையும் நன்றியுடன் நினைக்கும் முகமாகவே இந்தக் கட்டுரை.

பாஜகவின் 5 வது மாநில மாநாடு 'தாமரை சங்கமம்' என்ற பெயரில் ஏப்ரல் 28, 29 ம் தேதிகளில் நடத்துவது என்றும், அதற்கு 3 லட்சத்திற்கு மேலான தொண்டர்களை அழைப்பது என்றும் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் 6 மாதங்களுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டு அதற்குரிய பொறுப்பு கட்சியின் மிக முக்கிய நிர்வாகியும், கர்மவீரரும் ஆன சுகுமாரன் நம்பியாரிடம் வழங்கப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக சுகுமாரன் நம்பியார் சில நாட்களிலேயே இயற்கை எய்தினார்.

ஆனாலும், உயர்ந்த லட்சியங்கள், உன்னதமான எண்ணங்களுக்கு இயற்கையே கொடுக்கும் ஒரு விதமான சன்னதம் பெற்ற தன்மையை அன்னை பராசக்தி அனைத்து பாஜக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் வழங்கினாள். மாநாட்டுப் பணிகள் மீண்டும் வேகம் பெற்று வளர்ச்சி பெறலாயிற்று. இடம் தேடி அலைந்தார்கள், திருச்சியிலா? கோவையிலா? தலைநகர் சென்னையிலா? என்று, அப்பொழுது கிடைத்தது தீர்வு. ஒரு கணமும் இமைக்காது மக்களை காக்கும் கயல்விழி மீனாட்சி அம்மனின் அருட் பெருங்கருணையால், அனனையின் ஆட்சியின் கீழ் உள்ள மதுரை மாநகரில் 65 ஏக்கர் நிலம் கிடைத்தது. பின்பு வேலை வேகம் பெற்றது.

மாநிலத் தலைவரின் உயர்ந்த லட்சியத்தை நிறைவேற்ற, பாரதிய ஜனதா தன்னையே தான் கண்டுணர, தன் பலம் உணர, இந்த மாநாடு தொண்டர்களுக்கு மேலும் ஒரு புதிய திறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்த மிகச்சிறந்த தளகர்த்தர்கள் திரு.பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கூடி வியூகம் வகுத்தனர். அமைப்பு பொதுச்செயலாளர் மோகன்ராஜூலு, சரவணப்பெருமாள், சுரேந்திரன். ஆகியோரின் தலைமையில் 40 வகையான தேவைகளை நிறைவேற்ற சிறப்பான செயல்திறனும், ஆற்றலும் உடைய தனித்துவம் நிரம்பிய படை வகுக்கப்பட்டு, பொறுப்புகள் பிரித்து கொடுக்கப்பட்டு, வேலைகள் தொடங்ககின.

அதே நேரத்தில் அமைப்பு ரீதியாக ஒவ்வொரு மாவட்ட அளவிலும், ஒன்றிய, கிளை அளவிலும் தொண்டர்களை உற்சாகப்படுத்த மாநாட்டுக்கு புதிய உறுப்பினர்களை கொண்டுவர தனித்தனியாக உற்சாகப்படுத்தப்பட்டு, ஊக்கப்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு மாவட்டமும் அவர்களே நிர்ணயித்த இலக்குகளை நோக்கி நகருமாறு உற்சாகப் படுத்தப்பட்டனர்.

இந்த ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்கையிலேயே களத்தில் ஆற்றிட வேண்டிய பணிகளுக்கு சுரேந்திரன் அண்ணனும், சரவணப்பெருமாள் அண்ணாச்சியும் களத் தளகர்த்தர்களாக பொறுப்புகளை சிரமேற்கொண்டு தொடர விழைந்தனர். மாநிலத் தலைவர் மாநாடு நடப்பது கோடையில், 'என் தொண்டர்கள் யாரும் வெயிலில் இருக்கக் கூடாது. எனவே அனைவரும் இளைப்பாறும் வகையிலே பந்தல் அமைக்க வேண்டும்' என்றார். சரி என்றார்கள். அனைவருக்கும் உணவும் நீரும் அளிக்க வேண்டும் என்தரும் முடிவானது.

போதிய கழிப்பறை வசதி, தங்குமிடம், வாகன வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள், ஒளி-ஒலி அமைப்புகள், அரங்க மேடை, வருபவர்களை வரவேற்பது, வாகனங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது, தலைவர்களை வரவேற்பது, அவர்களுக்குரிய ஏற்பாடுகள், பாதுகாப்பு, உணவு முதலியற்றை ஏற்படுத்துவது உள்ளிட்ட 40 தனித்தனி துறைகளுக்கு தனித்தனியான செயல்வீரர்களை அமர்த்தி அவர்களுக்குரிய படையை அவர்களே அமைத்துக்கொள்ளவும் சுதந்திரம் அளிக்கப்பட்டு திடமான அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

டிசம்பர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியான ஆலோசனைகள், புதிய, புதிய முயற்சிகள்; அனைவரின் கவனமும் ஒருங்கிணக்கப்பட்டு, கருமமே கண்ணாக உழைத்த நிர்வாகிகளும் செயல்வீரர்களும், திட்டங்களை களத்தில் முயல்கையில் எண்ணற்ற சவால்களையும், புதிய புதிய பிரச்சினைகளையும் எதிர்கொண்டனர்.

அவை அனைத்திற்கும் அன்னை அருளால் தங்கள் வாழ்க்கை அனுபவங்களிருந்தும், தொழில் முறைகள் கற்பித்த அனுபவங்களிலிருந்தும் தீவிரமாக சிந்தித்து புதிய தீர்வுகளை கண்டடைந்தார்கள். விளைவாக மகோன்னதமான பாஜக ஆட்சிக்கு கட்டியம் கூறும் முகமாக, கருத்தியல் ரீதியிலான வெற்றியை இந்த தாமரை சங்கமம் சாத்தியமாக்கியிருக்கிறது.

இன்னொரு முக்கிய நிகழ்வாக, மூத்தோர்களின் அறிவோடும், பரிவோடும் இளையோர்களால் திறம்பட முன்னேடுத்துச் செல்லப்படும் பாஜகவின் அறிவியல், தொழில்நுட்ப முன்நகர்வு, அனைவராலும் வியந்து பார்க்கப்பட்டு, ஏகோபித்த பெரும் பாராட்டையும், அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

அறிவு, திறமை, உழைப்பு, அர்ப்பணிப்பு, தேசபக்தி, தெய்வ பக்தி, தொழில்நுட்ப அறிவு, செயல்திறன், விடாமுயற்சி, காலத்தைக் கடந்த சிந்தனை, இறை அருள், மூத்தோர்கள் மற்றும் தேச பக்தர்களின் ஆசி – இந்த அனைத்தும் கூட்டு சேர்ந்தே இந்த மாபெரும் வெற்றியை தேடித் தந்துள்ளன.

பத்திரிகைகள், செய்தி சேனல்கள், விளம்பரங்கள் இவற்றை சரிபார்த்து செய்திக் குறிப்புகள் அமைக்கவும், மீடியா நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கவும், அவர்களுக்குரிய உதவிளை செய்யவும், ஒரு குழு கோவை எஸ்.ஆர்.சேகர் தலைமையிலும், சென்னை வானதி சீனிவாசனின் ஆலோசனையிலும் அமைக்கப்பட்டு செயலுக்கு வந்தது.

மாநாட்டுத் திடல் நிர்வாகங்கள், களப்பணிகளுக்கு சரவணப்பெருமாள், சுரேந்திரன் ஆகியோர் தலைமை வகித்து, முன்னெடுத்துச் சென்றனர். உணவு பொறுப்புகள் திருச்சி சுப்ரமணியம் தலைமையில் திருவள்ளூர் பாஸ்கரன் முன்னிலையில் வழங்கப்பட்டு மிக சீராக களப்பணியாற்ற ஊக்குவிக்கப்பட்டனர்.

குடிநீர் வினியோகம் கோவை கல்யாண சுந்தரம் தலைமையிலும், மாநாட்டு சுகாதார ஏற்பாடுகள் தசரதன், ராம.கண்ணன் தலைமையிலும், வியூக முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டுப் பந்தலின் கட்டுமானப் பொறுப்புகள், அனைத்தும் காஞ்சிபுரம் மோகனராஜாவிடம் வழங்கப்பட்டன.

பாதுகாப்பு ஆலோசனைகளை மேஜர் கர்னல் சுந்தர் சீரிய ஆலோசனையோடும், பார்க்கிங், பராமரிப்புப் பணிகள் ஈரோடு பழனிசாமியும், மாநாட்டு வருகையாளர்களைப் பற்றிய பதிவை கோவை முருகானந்தமும், மின்சார ஏற்பாடு, வசதிகளை டால்பின் ஸ்ரீதரும், தங்கும் இடங்கள் தொடர்பாக அழகர்சாமியும், மாநாட்டு வரவேற்பறையை ஆதிசேஷனும், ஒருங்கிணைப்பை சேலம் ஆடிட்டர் ரமேஷும் பொறுப்பேற்றனர்.

சரவணப்பெருமாள், சுரேந்திரன் ஆகியோரின் உறுதுணையோடு அனைத்து பொறுப்புகளையும் நிர்வகிக்க மோகன்ராஜிலு தலைமையேற்று முன்னேற்றி கூட்டிச் சென்றார். மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் தள வியூகங்கள் முடிவுக்கு வந்து, சைனியங்கள் வேறு வேறு வகையில் வகைப்படுத்தப்பட்டு, அவர்களின் கடமைகள், பொறுப்புகள் பிரித்தளிக்கப்பட்டு ஆயத்தமாக பணியை துவக்கினார்கள் டிசம்பரில்.

இந்த மகத்தான வேள்வியை நடத்துபவர்களை மழை வடிவில் இயற்கை அன்னை சோதித்தாள்; நிதிப் பற்றாக்குறை வடிவில் திருமகள் சோதித்தாள்; அடிக்கடி இடையூறுகள் செய்து காவல் துறையினர் சோதித்தனர். ஆனாலும் அனைத்தையும் தாண்டி அன்னை மீனாட்சியின் கருணையால் எண்ணியதை எண்ணியாங்கு எய்தியது காவிப்படை.

காவிப்படையின் காவிய சாதனைக்கு உரிய தளகர்த்தர்களையும், அவர்களின் திறன்மிகு செயல்களையும் பற்றி இன்னும் நிறைய எழுத ஆசை தான் – தொடர்வேன்.

நன்றி வீர. ராஜமாணிக்கம்,

தமிழக பாரதிய ஜனதா கட்சி – பொறியாளர் அணியின் திருப்பூர் மாவட்டத் தலைவர்.

Tags:

Leave a Reply