உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷ்யா மாஸ்கோ நகரில் கடந்த மாதம் மே 11ம் தேதி தொடங்கியது . 12 சுற்று ஆட்டங்கள் கொண்ட இந்த போட்டியில் இந்திய செஸ் வீரரும், நடப்பு உலக சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்தும் இஸ்ரேலைச் சேர்ந்த போரிஸ் கெல்பாண்டும் விளையாடினர். இப்போட்டியில் நடைபெற்ற முதல் ஆறு சுற்றுப் போட்டிகளும் டிராவில் முடிவடைந்தன.

7-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவினார். எட்டாவது சுற்று ஆட்டத்தில் சுதாரித்துக் கொண்ட விஸ்வநாதன் ஆனந்த் கெல்பாண்டை வீழ்த்தி இப்போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்திருந்தார்.

இதனையடுத்து நடைபெற்ற 9, 10, 11, 12 -வது சுற்று ஆட்டங்கள் டிரா ஆகின. இதனையடுத்து இருவரும் தலா 6 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தனர்.

இந்த கடைசி சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்ததால் இன்று டை பிரேக்கிங் ஆட்டம் நடத்தப்பட்டது. இதில் அதிவேக ரேபிட் முறையில் 4 ஆட்டங்கள் நடக்கும். ஒவ்வொரு வீரருக்கும் 25 நிமிடங்கள் வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு காய் நகர்த்தலுக்கும் கூடுதலாக 10 வினாடிகள் அளிக்கப்படும்.

ரேபிட் முறையின் முதல் ஆட்டம் 32 -வது நகர்த்தலில் டிரா ஆனது. இதனால் இருவருக்கும் தலை 1/2 புள்ளிகள் கிடைத்தன. ரேபிட் முறையின் இரண்டாவது ஆட்டத்தில் அதிவேகமாக விளையாடிய விஸ்வநாதன் ஆனந்த் 77-வது நகர்த்தலில் வெற்றி பெற்று 1 புள்ளியினைப் பெற்றார்.

ரேபிட் முறையின் மூன்றாவது ஆட்டத்தில் இருவரும் திறமையாக ஆடியதால் 35-வது நகர்த்தலில் டிரா ஆனது. ஆதலால் இருவருக்கும் தலை 1/2 புள்ளிகள் கிடைத்தன. இதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்த் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.

இதனையடுத்து நடைபெற்ற ரேபிட் முறையின் நான்காவது சுற்று ஆட்டத்தில் அதி(வி)வேக ஆட்டத்தை வெளிப்படுத்திய விஸ்வநாதன் ஆனந்த் 56 வது நகர்த்தலில் ஆட்டத்தை டிராவில் முடித்தார். இருவருக்கும் தலா அரை புள்ளிகள் கிடைத்தன.

இதன் மூலம் ரேபிட் முறை ஆட்டங்களில் 2. 1/2 – 11/2 என்ற கணக்கில் கெல்பாண்டை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த் 5 -வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அதுமட்டுமின்றி நடப்புச் சாம்பியன் பட்டத்தையும் தக்கவைத்துக் கொண்டார்.

கடந்த 2000, 2007, 2008 மற்றும் 2010 என நான்கு முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை விஸ்வநாதன் ஆனந்த் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Leave a Reply