மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைகழகம் 2012-13 ஆம் ஆண்டு பாட திட்டத்தில் இளநிலை (BA, BSc) முதலாண்டு முதல்_பருவம் தமிழ் பாடப் பகுதியில் தோழர்.டி.செல்வராஜ் எழுதிய_நோன்பு என்னும் சிறுகதைதொகுதி இடம் பெற்றுள்ளது. இச்சிறுகதை தொகுதியில் அமைந்த 'நோன்பு' என்னும் சிறு கதை பாட நூலில் இடம்பெறும் தகுதி அற்றது.

இச்சிறுகதையின் நோக்கம் விஷமத்தனமானது; மரபுவழி வந்த பண்பாட்டு விழுமியங்களை இழிவுபடுத்தும் எண்ணமுடையது. ஆண்டாள், பெரியாழ்வார், பாண்டிய மன்னன் ஆகிய மூவரும் இச்சிறுகதையின் முக்கிய பாத்திரங்கள்.'புதிய கோணத்தில் மறுவாசிப்பு' என்னும் போர்வையில் இம்மூவர் மீதும் அவதூறு பேசுவதே கதையின் நோக்கம் ஆகின்றது.

ஆண்டாள் துளசிச்செடி அருகில் கண்டெடுக்கப்பட்டவள் என்பது வைணவ மரபு. அவளை தாசிமகள் ஆக்கியுள்ளது இக்கதை. பெரியாழ்வார் அகத்தில் கண்ணனையும் புறத்தில் ஆண்டாளையும் வளர்த்த பெரும் பேறு உடையவர். அவரை ஆன்மஞானம் பெற்றவராகவும், பக்தியில் கனிந்த சீலம் நிரம்பியவராகவும் தமிழ்மரபு போற்றும். அவரை தாசி உறவு பெற்றவராகச் சித்தரிக்கிறது இக்கதை. பாண்டிய மன்னன் ஸ்ரீ வல்லப தேவன் தெய்வீக விஷயங்களில் ஆர்வம் மிக்கவனாகவும், சம்வாதங்களை ஆதரித்தவனாகவும் மரபுச் செய்திகள் கூறும். அவனைப் பெண் பித்தனாகச் சித்தரிக்கின்றது இச்சிறுகதை. இச்சிறுகதை காட்டும் இச்சித்தரிப்புகள் அனைத்துமே சான்றாதாரங்கள் அற்றவை. உயர்மனச் சூழலில் மானுட விழுப்பம் கருதிப் பேணியப் பண்பாட்டு விழுமியங்களை இழிவுபடுத்தும் கதாசிரியரின் உள்நோக்கம் சிந்தித்தற்குரியது. கற்பனை சுதந்திரம் என்னும் பெயரில் இவர் நிகழ்த்தும் கலாச்சார அவதூறு கண்டிக்கத்தக்கது, 'மறுவாசிப்பு' என்னும் பெயரில், முதல் வாசிப்பே அறியாத மாணவ மன வயலில் இவர் விதைக்கும் 'பிழை வாசிப்பு' கல்வி ஆர்வலர்களால் தண்டிக்கத்தக்கது.

தமிழ் இலக்கிய வரலாற்றில் மரபு வழிப் போற்றப்படும் மேன்மைச் சித்திரங்களை எழுத்தாளர் சுதந்திரம் என்னும் முகமூடி அணிந்து சேறுவாரி எறிதல்; அதனைப் பாடத்திட்டக்குழுவுக்கு பரிந்துரை செய்தல்; அது பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெறுதல் ஆகிய மூன்று குற்றங்களும் பரிசீலிக்கப்பட வேண்டும். நிகழ்ந்த குற்றங்களுக்கு காரணமாகிய குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தக்க தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இனிமேல் இவ்வகைக் குற்றங்கள் நிகழாவண்ணம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏனெனில் இது பல்கலைக்கழகத்தின் பெயருக்குக் கேடு விளைவிக்கும் செயலாகும்.

நமது சிந்தனையில் தெளிவு வேண்டும். இது கல்விசார்ந்த (academic) விஷயம். பிரச்சார மண்டபம் அன்று. நல்லவற்றை இழிவுபடுத்துவதும், தீயவற்றை அங்கீகரித்து மேலெடுத்துச் செல்வதும் ஷேக்ஸ்பியரின் மாக்பெத்தில் வரும் வழி கெடுக்கும் நடனப்பாட்டு. 'Fair is foul and foul is fair' என்று வீரன் மாக்பெத் வரும் வழியில் பாடி ஆடிக்கொண்டிருக்கும் இருட்குரலே நாடகத்தில் வியாபிக்கும். இந்த நடனப்பாட்டின் நிழல் விழுந்த ஆய்வுகள் ஏற்கனவே முற்போக்கு என்னும் பெயரில் தமிழில் நிறையவே வருகின்றன. காரைக்காலம்மையைக் கொச்சைப்படுத்தி, ஔவையாரை இழிவுபடுத்தி, ஆண்டாளை அவதூறு செய்து 'தோழர்கள்' சிலர் எழுதியுள்ளனர். இடக்கை ஆசிர்வாதங்கள் இவர்களுக்கு உண்டு. உலக அரங்கில் தமிழின் பெருமிதங்களாக கருதவல்ல உயர் சிகரப்படைப்புகள் தந்த இப்பெண்களை அவமானப்படுத்துவது தமிழினத்தை அவமானப்படுத்துவது ஆகும்.

அன்னியச் சித்தாந்தங்களுக்கு விலைபோகும் போது, சின்னஞ்சிறு சௌகரியங்களில் மிதப்பு காணும் போது, உயர் லட்சியங்களுக்கு கண்ணடைக்கும் போது, இது நிகழும். இவர்களின் செயல்பாடு மானுட மேன்மைக்கு எதிரானது. சிந்தனை மண்டலத்தில் பிழை மனச்சித்திரங்கள் சித்தாந்த முலாம் பூசி நுழைய முற்படும்போது எளிதில் வலிமை பெற ஏற்ற இடமாகப் பாமர வாக்குவங்கிகளையும், பல்கலைக்கழக வளாகங்களையும் குறி வைக்கக் காண்கின்றோம். பல்கலைக்கழகம் பன்மடங்கு எச்சரிக்கையுடன் செயலாற்றக் கடமைப்பட்டிருக்கிறது.

அவதூறு பரப்பும் ஒரு மனநோய்க்கு பாடத்திட்டத்தில் இலக்கிய அறிமுகம் வழங்குவது மிகவும் தவறான முன்னுதாரணம். மாணவர் நலனும், பல்கலைக்கழகத்தின் தரமும், நாட்டின் எதிர்காலமும், ஒரு சிலரின் சித்தாந்த வெறிக்கும் பொருளாதார லாபத்துக்கும் பலியாகிவிடக்கூடாது.

வாழ்க்கைச் சிதறல்களில் ஏதேனும் ஓர் அனுபவத்துளி நோக்கிய அழகிய பாய்ச்சல் மொழிநுட்பத்தோடு சிறுகதைகளில் நிகழல் வேண்டும். Singleness of aim and singleness of effect முக்கியம் என்பது பாலபாடம். குருவிக் கழுத்துக்குக் குறிபார்க்கும் அர்ஜுன அம்பு சிறுகதை. வாமனம் நெடுமாலாகும் வித்தையும் அங்குண்டு. மனிதநேய தடாகங்களில் குள்ளக் குளிர்ந்து நீராடாத போது, மன அழுக்கைச் சுரண்டிச் சுருட்டும் சோம்பல் விரலுக்கு 'நோன்பு' போலும் சிறுகதையே திரளும். அனுபவத்தில் நேர்மை, கருத்தோட்டத்தில் தெளிவு, வாழ்வியலில் அழகும் ஆழமும் பருகும் துடிப்பு, உலகத்தரத்துக்கு உன்னதங்களைத் தரும் திறன் – என விரியும் சிறுகதை உலகம் தமிழுக்கு உண்டு. புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்', ஜெயகாந்தனின் 'யுக சந்தி', சுந்தர ராமசாமியின் 'சீதைமார்க் சீயக்காய்த் தூள்', லாசராவின் 'ஜனனி', ஜெயமோகனின் 'அறம்' … என ஒரு பல்வண்ணப் பார்வை குழல் (Kaleidoscope) தந்து மாணவ மன மண்டலத்தை உயர் சிகரங்களில் உலவச் செய்ய வேண்டியது பல்கலைக்கழகத்தின் கடமை. இதற்கு ஏற்ப பாடத்திட்டக் குழுவை நெறிமுறைப்படுத்த வேண்டும்.

சில வினாக்கள்:

1. 'ஆண்டாள் தேவதாசி வம்சத்துக் குலக்கொடி' என்கிறது 'நோன்பு' என்னும் சிறுகதை. இது வரலாற்று ஆதாரம் சிறிதும் அற்றது. எனவே அவதூறு. ஆண்டாளை அவ்வாறு கூறுவதற்கு ஆதாரம் தர இயலுமா?

2. ஆண்டாளைத் தேவதாசியாகச் சித்தரிப்பது 'எழுத்தாளன் சுதந்திரம்' என்று கூறித் தப்பலாம்; 'தேவதாசி என் பார்வையில் இழிந்தவர் அன்று' என கூறி வாதிடலாம். எனில், சமகாலப்பெண்களில் யாரையேனும் அல்லது தமது உறவுப் பெண்டிர் (மன்னிக்கவும்) யாரையேனும் இவ்வாறு சித்தரிப்பது தோழர்களுக்கு ஏற்புடையதுதானா?

3. பெரியாழ்வார் ஆண்டாளை வளர்த்த செய்தி குருபரம்பரைக் கதைகள் வழி அறியலாகும் மரபுச்செய்தி. இதை நிராகரித்து ஆண்டாள் மனத்துக்கு ஒவ்வாத, ஆண்டாளை மதிப்போர்க்கு மனம் ஏற்காத – இழிவுச் சித்திரம் படைத்தல்தான் மறுவாசிப்பா? இது இலக்கிய கயமை ஆகாதா?

4. 'கோட்டை மதிலுக்கு வெளியே கேட்கும் தோட்டி மகனின் ஓலம் ஓநாயின் ஒப்பாரியாகக் காற்றில் கலந்து மறைகிறது.' என்கிறது கதை. மானுட நேயம் பேசுவோரிடம் சாதி இழிவுப்பார்வையின் உவமை வரலாமா? மதுரைவீரன் திரைப்படத் தாக்கத்தின் முதிராப் பார்வைப் பதிவா? அது மட்டும்தானா? இது அடிமனத்தில் ஒளிந்திருக்கும் சாதிய வக்கிரத்தின் வெளிப்பிதுங்கல் என ஆழப்பார்வை காட்டவில்லையா? இப்புத்தகத்தையே பாடத்திட்டத்தில் வருவதைத் தடுக்க இது போதுமான காரணம் ஆகாதா? ஔசித்தியம் என ஒன்று பாரத மரபில் காட்டப்படுமே!

5. 'விளக்கின் கதிர்கள் காமன் எறிந்த கனலாகத்' தகிப்பது முதிரா மனத்தின் மூன்றாந்தர எழுத்தாளர்களின் 'வாய்ப்பாடுகள்' அல்லவா?

6. 'கைக்கட்டாரியுடன் ரோந்து வரும் ஊமையான கச்சணிந்த காவற் பெண்டிர்' ஆண்டாள் காலப்பின்னணியில் இல்லையே? சங்க இலக்கியத்திலிருந்து அல்லது சாண்டில்யனின் கதைகளிலிருந்து H.G.வெல்ஸின் காலயந்திரத்தில் ஏறி எப்படி வந்தார்கள்?

7. 'ஸ்ரீ வில்லிபுத்தூர் என்னும் அப்புண்ணிய ஸ்தலம் நிலவொளியில் ஜலக் கீரிடையாடிக் கொண்டிருக்கிறது' என அறிமுகப்படுத்துகிறது சிறுகதை. கோபுரக் காட்சியின் சித்திரமோ 'பூரித்து எழுந்து நிற்கும் குமரிப்பெண்ணின் கச்சணிந்த கொங்கை'யாக ஆசிரியருக்குக் காட்சியளிக்கிறது. தமிழக உன்னதங்களை இளநிலை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் நடையா இது? ஆசிரியரின் இழிமனப் பிதுங்கல்கள் அல்லவா இவை?

8. தமிழக அரசின் சின்னம் கோயிற் கோபுரம். அது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் கோபுரப்பதிவு, இரண்டையும் இழிவுபடுத்தும் இக்கதைக்குப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் அனுமதி வழங்கலாமா? இம்மனநிலை தவறென எச்சரிக்கும் வகையில் இவரது நூற்களுக்குப் பல்கலைக்கழக 'மஞ்சள் அட்டை' (வேணுமானால் சிவப்பு அட்டை) எனும் ஒரு தடைமுறை உருவாக்கலாமே.

9. "எத்தனை எத்தனையோ ஆரணங்குகளைக் கண்டிருந்தாலும் அனுபவித்திருந்தாலும்…" என்றெல்லாம் பாண்டிய மன்னனின் பலவீனத்தைச் சித்தரிப்பது விரசமான வருணனை அல்லவா? கீழ்த்தர கதைத் தொழிலில் பாமர பலவீனத்துக்கு தீனி தரும் கருவும் பின்னலும் நடையும் கொண்ட சிறுகதையைத் தாங்கிய இந்நூல் எந்தத் துணிவுடன் பாடத்திட்டத்தின் முன் சென்று நின்றது? மாணவர்க்குப் பல்கலைக் கழகம் வழி அறிமுகப்படுத்த வேண்டிய செய்தியும் அதைச் சுமக்கும் நடையும் இத்துணை அளவு தரம் தாழலாமா?

10. நூலின் அட்டைப்படத்திலும் ஆடும் தோற்றத்தில் தரப்பட்ட சலங்கை அணிந்த பாதம் அதிர்ச்சி தருகிறது. பெண்ணொருத்தியின் குனிந்த நிலைச் சித்திரம் போலும் அருவருக்கும் தோற்றம் அதில் உண்டு. ஆசிரியரின் மனவிகாரம் தரும் விரசம் இச்சித்திரத் தேர்வில் வெளிப்படவில்லையா? மாணவ மாணவியர் கையிலேந்தும் நூலில் இவ்வகை அட்டைப்படத்தை பல்கலைக் கழகமே தருதல் சரியா?

11. 'மார்க்சீயப் பார்வையில்' படைத்ததாக 'முற்போக்கு இலக்கிய வட்டத்தில் இயங்கியவராக' 'சோஷலிஸ்ட் யதார்த்தப் படைப்பாளியாக' இந்நூலின் பின்னட்டை புகழ்கிறது. இக்கதை ஆண்டாள் வரலாற்றைப் புதிய கோணத்தில் மறுவாசிப்பு செய்த முதல்கதை என புகழப் பட்டுள்ளது. அருவருப்பான அபத்தத்தை இவர் சார்ந்திருக்கும் சித்தாந்த வட்டம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

12. தரம் தாழ்ந்து பாடத்திட்டக் குழுவில் பரிந்துரை சந்தைகளில் தந்திர லாவகங்களுடன் செயல்படும் தற்கால இலக்கிய வணிகர்கள் கல்லூரியின் அறிமுகநிலை மாணவர்களுக்கு இவ்வகை நூல்களை விலைப் படுத்துவது – மொழிக்கும், பண்பாட்டுக்கும், நாட்டுக்கும் பெருங்கேடு. நவீன இலக்கிய சோலைக்குள் இளங்கலை மாணவர்கள் செல்ல உதவ வேண்டிய பல்கலைக்கழகத்தை 'நச்சுப் பொய்கை'யாக்கவே வழிவகுக்கும் இத்தகைய செயல்பாடுகள் நிறைந்த சூழ்நிலையில் பல்கலைக்கழகம் கல்விக் கடமையாற்றத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டாமா?

நன்றி; பேரா. என்.சுப்பிரமணியம்

Tags:

Leave a Reply