நமது  யோகத்தின்  நோக்கம் நமது யோகத்தின் நோக்கம் தன்னைத் தூய்மைப் படுத்திக்கொள்வதே, தன்னைப் பரிபூரணமாக முழுமைப் படுத்திக் கொள்வதே; தன்னை அழித்துக் கொள்வது நமது நோக்கமல்ல.

யோகிக்கு இரண்டு பாதைகள் உள்ளன. இரண்டில் ஒன்றை அவன்

தேர்ந்தெடுக்கலாம். பிரபஞ்சத்திலிருந்து விலகிச் செல்வது ஒன்று, பிரபஞ்சத்தில் முழுமை எய்துவது மற்றொன்று. முன்னது துறவறத்தின் மூலம் அடையப் பெறுவது. அடுத்தது தவத்தினால் அடையப் பெறுவது. உலக வாழ்க்கையில் கடவுளை இழக்கும் போது முதல் பாதையில் நடக்கிறோம்; உலகிலே கடவுள் நிறைவைக் காணும் போது இரண்டாவது வழியில் நடப்பவர்களாக இருக்கிறோம். நமது பாதை உலகைத் துறப்பதாக இருக்க வேண்டாம், முழுமை காண்பதாகவே இருக்கட்டும். போர்க்களத்தில் வெற்றி பெறுவதே நமது நோக்கமாக இருக்கட்டும், அதிலிருந்து தப்பியோடுவதாக இருக்க வேண்டாம்.

இந்த உலகம் பிரம்மம், இந்த உலகம் கடவுள், இந்த உலகம் சத்தியம், இந்த உலகம் ஆனந்தம். நமது மன அகங்காரத்தின் மூலம் இதனைத் தவறாகக் காண்பது தான் பொய்மை. கடவுளுடன் நாம் கொள்ளும் தவறான தொடர்பு தான் துன்பங்களுக்கெல்லாம் காரணம். பொய்மைக்கும் துன்பத்திற்கும் இதுவன்றி வேறு காரணமில்லை.

கடவுள் இந்த உலகைத் தன்னிலேயே தனது மாயையினால் படைத்தார். மாயை என்பதற்கு வேதம் கூறும் பொருள் பொய்த்தோற்றம் என்பதல்ல; ஞானம், திறன், சைதன்யத்தின் விரிவு என்பதே. எல்லாம் வல்ல ஞானம் இவ்வுலகைப் படைத்தது. ஏதோ ஒரு கனவு காணும் சக்தி திட்டமிட்டுச் செய்த குளறுபடியல்ல இவ்வுலகம். அனைத்துமறிந்த வாலறிவனின் சக்தி இதனை வெளியிட்டது.

இந்த உலகம் பிரம்மனின் துர்சொப்பனம் என்றால் இதிலிருந்து விழிப்பை ஏற்படுத்துவது தானே இயல்பான, தலையாய முயற்சியாக இருக்க வேண்டும்? அல்லது இவ்வுலகம் மாற்ற முடியாத துன்பத்தில் கட்டுண்டு கிடக்கிறது என்றால் அதிலிருந்து அதனை மீட்பதற்கு ஒரு சாதனம் தேடியாக வேண்டுமல்லவா? ஆனால் இவ்வுலக வாழ்க்கையிலே முழுமையான மெய்மை சாத்தியம் தான்; ஏனெனில் கடவுள் இங்கே சத்திய நயனத்தினால் அனைத்தையும் பார்க்கிறார். முழுமையான உவகை இவ்வுலகிலே சாத்தியம் தான், ஏனெனில் கடவுள் கலப்பற்ற சுதந்திரத்துடன் இவ்வுலகில் அனைத்தையும் துய்க்கிறார். நாமும் இந்த சத்தியத்தையும் உவகையையும் துய்க்க முடியும். நமது அகங்காரத்தை விடுத்து கடவுளுடன் ஒன்றி அவரது தெய்விக பார்வையையும் தெய்விக சுதந்திரத்தையும் ஏற்க இணங்கினோமென்றால் வேதம் கூறும் 'அம்ருதம்', சாகாமை என்னும் நிலையை நம்மால் பெற முடியும்.

கடவுளிலே கடவுளின் இயக்கம் தான் இந்த உலகம். நாமெல்லாம் இந்த இயக்கத்திற்கு ஒத்துழைத்து முடுக்கிவிடும் சிறு சிறு தூண்டுகோல்களாவோம். இந்த உலகம் கடவுளின் விளையாட்டு, தன்னுள் தானே உணர்ந்து களிப்புறும் விளையாட்டு இது; இங்கிருப்பது அவர் மட்டுமே, அவர் தன்னந்தனியாய், சுதந்திரமாய், பூரணமாய் விளங்குகின்றார், நாமெல்லாம் அந்தப் பேருவகையின் பெருக்கங்களே; அவரது விளையாட்டுத் தோழர்களாக இருப்பதற்காக அவரால் இங்கு உருவெடுத்துள்ள ஜீவன்கள் நாம். இந்த உலகம் அவர் இயற்றிய சூத்திரம், அவர் ஏற்படுத்திய லயம், தம் உணர்விலே தம்மையே வெளிப்படுத்தும் சின்னம் இது. அந்தக் குறியீட்டுக்கான அமைப்பே இவ்வுலகம். அவருடைய வெளிப்பாடு இது. நாமும் கடவுளைப் போல் உள்ளே அந்த மெய்ப்பொருளாகவும் வெளியே அவருடைய அந்த சூத்திரத்தின் விளக்கமாகவும் அவருடைய லயத்தின் °வரங்களாகவும் அவருடைய அந்தக் குறியீட்டு அமைப்பின் வெளிச் சின்னங்களாகவும் இருப்போம். கடவுளின் இயக்கத்திற்குக் கை கொடுப்போம்; அவர் வகுத்த விளையாட்டை விளையாடுவோம்; அவருடைய சூத்திரங்களுக்குப் பதவுரை வடிப்போம்; அவருடைய இசைவையும் இணக்கத்தையும் நடைமுறைப்படுத்துவோம்; நம் வாயிலாக அவரை வெளிப்படுத்துவோம். இதுவே நமக்கு ஆனந்தம். இதுவே நமது நிறைவு. இவ்வாறு உலக வாழ்வைக் கடந்து விட்ட நாம் பிரபஞ்சப் பெருவெளியில் காலடி பதிப்போம்.

பூரணத்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இசைவை இங்கே சாதித்துவிட வேண்டும். குறை, வரம்பு, மரணம், துயரம், அறியாமை, சடவியல் ஆகியவையெல்லாம் அந்த சூத்திரத்தின் ஆரம்ப பாடங்கள். நாம் அவற்றையெல்லாம் வரையறுக்காத வரை அவை நம் புத்திக்கு எட்டாதவையாகவே இருக்கும். மீண்டும் மீண்டும் ஓதாதவரை புரியாதவையாகவே அவை இருக்கும். புதிதாகச் சுருதி சேர்க்கும் இசைக் கலைஞனின் ஆரம்ப அப°வரங்கள் அவை. குறையிலிருந்து நிறையை உருவாக்க வேண்டும் நாம். வரம்புகளிலிருந்து வரம்பிலா வெளியைக் கண்டுபிடிக்க வேண்டும். மரணத்திலிருந்து தான் மரணமின்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். துயரத்தை இறையின்பமாக மாற்ற வேண்டும். அறியாமையிலிருந்து ஆன்ம அறிவை மீட்டெடுக்க வேண்டும். சடத்திலே ஆன்மாவை வெளிப்படுத்த வேண்டும். இதையெல்லாம் நமக்காகவும் மானிடவர்க்கத்திற்காகவும் செய்து முடிப்பது தான் நமது யோகத்தின் நோக்கம்.

ஸ்ரீ அரவிந்தர்

Leave a Reply