அறநிலைய துறையை கலைத்துவிட்டு தனித்து இயங்கும் வாரியத்தை அமைக்கவேண்டும் அறநிலைய துறையை சீர்படுத்த வேண்டும் , கோயில்கள் கொள்ளை போய்க்கொண்டிருக்கின்றன , இந்து சமய அறநிலைய துறையை கலைத்துவிட்டு, இந்து சமய நம்பிக்கைகொண்ட ஆன்றோர்கள், இந்து இயக்க பொறுப்பாளர்களை கொண்ட தனித்து இயங்கும் வாரியத்தை அமைக்கவேண்டும் என தமிழக முதல்வருக்கு இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

அதன் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு கோரப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை விவரம்…தமிழகத் திருக்கோயில்களை நிர்வாகம் செய்யும் இந்து சமய அறநிலையத்துறை திக்குத்தெரியாமல் தடுமாறுகிறதோ என சந்தேகம் எழுகிறது. சமீபத்தில் பத்திரிகை செய்தி ஒன்றில் அதன் அதிகாரி ஒருவர் அறநிலையத்துறையின் கீழ் 11 ஆயிரம் கோயில்கள் மட்டும் உள்ளதாகவும், கோயிலுக்குச் சில ஆயிரம் நிலங்கள் தான் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். இது உண்மையா? 2010இல் அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி 38 ஆயிரத்து 481 கோயில்களும் அவற்றிற்கு 4 லட்சத்து 23 ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பதாகவும் தெரிவித்தது. இரண்டு ஆண்டுகளில் அவை காணாமல் போய்விட்டனவா? பட்டா போட்டு தனியாருக்குத் தாரை வார்த்து விட்டனரா? மூன்றில் ஒரு பங்கு கோயில்கள் தான் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறதென்றால் மற்றைய கோயில்களின் நிலை என்ன?

தமிழக முதல்வர் இவ்விஷயத்தில் கவனம் கொடுத்து சீர்ப்படுத்தி, மக்களுக்கு உண்மை நிலையை அறிவிக்க வேண்டும்.கோயில்கள் கொள்ளை போய்க்கொண்டிருக்கின்றன; கோயில் சொத்துகள் ஒருபுறம் ஆக்கிரமிக்கப்பட்டு அபகரிக்கப்படுகின்றன; மறுபுறம் கோயில் சிலைகள், விக்ரகங்கள், தங்க வெள்ளி, வைர நகைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. கோயில்களுக்குச் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே இதற்குக் காரணம். எப்போது கோயில்களை அரசு எடுத்துக்கொண்டு இந்து சமய அறநிலையத்துறை என்ற அமைப்பை ஏற்படுத்தியதோ அதிலிருந்து அவை அரசின் பாதுகாப்பில் இருப்பதாகும். கோயில்களுக்கோ, அதன் சொத்துகளுக்கோ ஏற்படும் பாதகத்திற்கு அரசாங்கமே பொறுப்பாகும்.’

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்பது மக்கள் வழக்குமொழி. கோயிலுக்குப் பாதகம் செய்தவர்கள் அழிந்தே போயுள்ளார்கள் என்பதை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மறக்க வேண்டாம்.இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் பற்றிய விவரங்களையும், அதன் சொத்துகள் பற்றியும் முழுமையான அறிக்கையை மக்கள் முன் வைக்க வேண்டும். இதில் சட்டத்திற்குப் புறம்பாக கோயில் நிலங்களைத் தனியாருக்கு மாற்றித் தந்தவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தரிசனக் கட்டணக் கொள்ளையை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணி வரும் ஞாயிறன்று (22-7-12) மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது. ஆலயங்களையும் ஆலயச் சொத்துகளையும் சரிவர நிர்வகிக்காமல் மோசடி செய்து வரும் இந்து சமய அறநிலையத் துறையை அரசு கலைத்துவிட்டு, இந்து சமய நம்பிக்கை கொண்ட ஆன்றோர்கள், இந்து இயக்கப் பொறுப்பாளர்களைக் கொண்ட தனித்து இயங்கும் வாரியத்தை அமைக்க வேண்டும்.

இதுவே இன்னமும் மிஞ்சியிருக்கக்கூடிய பாரம்பரியமிக்க ஆலயங்களைப் பாதுகாப்பதற்கு வழி.தரிசனக் கட்டணத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி இந்து முன்னணி 25 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களிடம் கையெழுத்துகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் மக்களிடையே கோயில் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, பக்திபூர்வமான, உணர்வுபூர்வமான எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாபெரும் எழுச்சியானது இந்து கோயில்களைப் பாதுகாக்கச் சரியான வழியை வருங்காலத்தில் ஏற்படுத்தும் என்று இந்து முன்னணி நம்பிக்கை தெரிவிக்கிறது.

Tags:

Leave a Reply