லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. திங்கள்கிழமை நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ககன் நரங் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக்கில் ககன் நரங் வெல்லும் முதல் பதக்கம் இது. இறுதிச் சுற்றில் பெற்ற 103.1 புள்ளிகளுடன் சேர்த்து மொத்தம் 701.1 புள்ளிகளை அவர் பெற்றார். இதில் 598 புள்ளிகள் தகுதிச் சுற்றில் பெற்றவையாகும். இதே பிரிவில் ருமேனியாவின் மோல்டோவியான் அலின் ஜார்ஜ் 702.1 புள்ளிகள் எடுத்து தங்கம் வென்றார். உலகின் முதல் நிலை வீரரான இத்தாலியின் நிகோலோ கேம்பிரியனிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. அவர் மொத்தம் 701.5 புள்ளிகள் எடுத்தார்.

இறுதிச் சுற்றில் மொத்தம் 10 முறை சுடும் வாய்ப்பு உண்டு. இதில் முதல் வாய்ப்பில் 10.7 புள்ளிகள் எடுத்த ககன், 2-வது வாய்ப்பில் 9.7 புள்ளிகள் மட்டுமே பெற்றார். எனினும் அடுத்த நான்கு வாய்ப்புகளையும் ககன் சிறப்பாக பயன்படுத்தினார். இதனால் அவர் வெள்ளிப் பதக்கம் வெல்லும் வாய்ப்பும் இருந்தது. ஆனால் 7,8-வது வாய்ப்புகளில் ககன் பின்தங்கினார்.

கடைசி இரு வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்ட போதிலும், வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் அவருக்கு வெண்கலமே கிடைத்தது. சீன வீரர் வாங் டாவோ 700.4 புள்ளிகளுடன் 4-வது இடத்தைப் பிடித்தார். இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் அபிநவ் பிந்த்ரா இறுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை. அவர் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார் என்பது நினைவுகூரத்தக்கது.

ககன் சாதனைக்கு அவரது தந்தை பெருமிதம் தெரிவித்துள்ளார். ககன் , இந்திய கொடியை ஒலிம்பிக் கிராமத்தில் பறக்க விட்டுள்ளார் என பெருமையுடன் கூறினார்.

வெண்கலப்பதக்கம் வென்ற ககன் நரங், அரியானா மாநில அரசு ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

ககன் நரங் பதக்கம் வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், இன்னும் பல வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் அவர், அபினவ் பிந்தரா பதக்கம் வென்றிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என கூறினார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ககன் நரங்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

Tags:

Leave a Reply