மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்  காலமானார் கடந்த சில நாட்க்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவ மனையில் சிகிச்சைபெற்று வந்த மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் காலமானார்.

கல்லீரல் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 9 தினங்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆரம்பத்தில் ஆபத்தான நிலையில் இருந்த அவர் சிகிச்சைக்குப்பின் ஓரளவு குணமடைந்தார். அவரது உடல்நிலை சீராக இருந்ததால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் முழுமையாக குணமடைய வாய்ப்புள்ளது என்று டாக்டர்கள் நம்பினார்கள்.

இதை தொடர்ந்து அவரது மகன் ரித்தீஷ் தனது கல்லீரலை தானமாககொடுக்க முன்வந்தார். விலாஸ் தேஷ்முக் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் கல்லீரலை முழுமையாக அகற்றிவிட்டு வேறொருவருடைய முழுமையான கல்லீரலைத்தான் பொருத்த வேண்டும் என மருத்துவகுழு தெரிவித்தது.

உயிரோடு இருப்பவரிடமிருந்து சிறிதளவு தான் கல்லீரலை எடுத்து மற்றவர்களுக்கு பொருத்த முடியும். எனவே மூளைச் சாவடைந்த ஒருவரிடமிருந்து கல்லீரலை முழுமையாக எடுத்து பொருத்த டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி அதிமுக்கிய தேவைப்பட்டியலில் விலாஸ் தேஷ்முக் பெயரை பதிவு செய்தனர்.

இந்தநிலையில் கோவளம் அருகே நேற்று முன்தினம் விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ் டிரைவர் ஜீவா என்பவர் மூளைச்சாவு அடைந்தார்.

உடனே அவருடைய கல்லீரலை விலாஸ் தேஷ்முக்குக்கு பொருத்த ஜீவாவின் உறவினர்களிடம் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து தேஷ்முக்குக்கு இன்று அறுவை சிகிச்சை செய்து கல்லீரலை முழுமையாக மாற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக இன்று அதிகாலை டிரைவர் ஜீவாவை சென்னை பொது மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பெரும்பாக்கத்துக்கு கொண்டுவருவதற்காக டாக்டர்கள் குழு அங்கு சென்றது. 25 கிலோ மீட்டர் பயணம் செய்து பெரும்பாக்கத்திற்கு வர வேண்டும்.

இந்நிலையில் அதிகாலை 2.30 மணிக்கு டிரைவர் ஜீவா இறந்து விட்டார். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அறுவை சிகிச்சை நடத்த முடியாத நிலை உருவானது. இதனால் துரதிருஷ்டவசமாக விலாஸ் தேஷ்முக்குக்கு இன்று நடைபெற இருந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர் காலமானார்.

Leave a Reply