கூடாநட்பு கோடி நஷ்டம் !! ஓர் காட்டுக்குள் அழகிய குளம் ஒன்று இருந்தது. அதில் தவளைகள் பல வாழ்ந்து வந்தன. காட்டிலிருந்த அனைத்து மிருகங்களுடனும் நட்பாகப் பழகியதால், எந்தவிதக் கவலையுமில்லாமல் அவை அந்தக் குளத்தில் நீந்தி மகிழ்ந்தன. ராஜா தவளையும், ராணி தவளையும் கூட இவர்களைக் காப்பதற்கென ஏதும் செய்ய வேண்டியதில்லாது இருந்ததால், அவைகளும் மகிழ்வாகவே காலம் தள்ளின.

ஒருநாள் அந்த வழியே சென்றுகொண்டிருந்த வஞ்சகக் குணம் கொண்ட ஒரு வயதான பாம்பு இந்தத் தவளைகள் இப்படி ஆனந்தமாக விளையாடிக்கொண்டிருப்பதைக் கவனித்தது.

'ஆஹா! என்ன ஒரு விருந்து எனக்கு? இந்தத் தவளைகள் அனைத்தையுமே ஒரே வாயில் போட்டு விழுங்கிவிடலாமே! ஆனால், என்ன செய்வது? எனக்கோ வயதாகி விட்டது. இந்தத் தவளைகளை வஞ்சகமாகத்தான் கவர வேண்டும்' என அந்தப் பாம்பு தனக்குள் பேசிக்கொண்டது.

என்ன செய்யலாம் என முடிவெடுத்த அந்த கிழப் பாம்பு, சத்தமில்லாமல் நகர்ந்து, அந்தக் குளத்தருகே சென்று, இறந்துவிட்டதுபோல ஒரு மரத்தடியில் சுருண்டது.

விளையாட்டுத்தனமும், குறும்புத்தனமும் கொண்ட இரு இளவரசுத் தவளைகள் இந்தப் பாம்பு இப்படி கிடப்பதைப் பார்த்ததும், அதனருகில் சென்று, பாம்புக்கு என்ன நேர்ந்தது எனப் பார்க்கத் தலைப்பட்டன.மெதுவாகச் சென்று அந்தப் பாம்பைத் தொட்டன. லேசாக அசைந்துகொடுத்தது அந்தப் பாம்பு. உடனே இரு தவளைகளும் சட்டென நகர்ந்தன. ஆனால், உடனேயே மீண்டும் அந்தப் பாம்பு அசைவற்றுக் கிடந்தது.

'நாம் இந்தப் பாம்பை இதற்குமுன் இங்கே பார்த்ததே இல்லையே' என ஒரு தவளை சொன்னது.

'எங்கிருந்தோ வந்து இங்கே இறந்துவிட்டதால்தான், இப்படி அசைவற்றுக் கிடக்கிறது போலும்' என இன்னொரு தவளை பதில் சொன்னது.

இதைக் கேட்டதும் அந்த வஞ்சகப் பாம்பு, தனது கண்களை லேசாகத் திறந்து, மெல்லிய குரலில், ' என்னைக் கண்டு பயப்பட வேண்டாம். வயதான என்னால் ஒன்றுமே செய்ய இயலாது. மேலும், நான் ஒரு சாபத்துக்கு ஆளாகியிருப்பதால், நீங்கள் என் மீது ஏறிக் கொள்ளலாம். நான் உங்களுக்கு வாகனமாக இருப்பேன். இன்று முதல் நீங்கள் எங்கு செல்ல விரும்பினாலும் நான் உங்களைச் சுமந்து செல்வேன்' என தீனமாகச் சொன்னது.

முதலில் கொஞ்சம் சந்தேகப்பட்டாலும், அவ்விரு தவளைகளும் அந்தப் பாம்பின் மீது ஏறிக்கொண்டு, ஒரு சவாரி செய்து திரும்பின.

இதற்குள்ளாக தவளைராஜா, ' குழந்தைகளே, எங்கே போனீர்கள்? அரண்மனைக்கு சீக்கிரம் வந்து சேருங்கள்' என அவர்களை அழைத்தது.

இதைக் கேட்டதும் அந்த இரு தவளைகளும் வேகமாக திரும்பிச் சென்றன. வயதான காலத்தில் இப்படி சவாரி செய்ய நேர்ந்ததால், கிழப் பாம்புக்கு மூச்சு வாங்கியது.

அரண்மனைக்குத் திரும்பிய இளவரசர்கள் இரண்டும், தவளைராணியிடம் நிகழ்ந்ததைப் பற்றி மூச்சு விடாமல் கூறின. அவர்கள் சொன்னதைக் கேட்டு திகிலடைந்த ராணித்தவளை, இனிமேல் அப்படி செய்யாதீர்கள் என அறிவுறுத்தியது. ராஜாவிடம் இந்த விஷயத்தை ராணி கூறியதும், அந்தப் பாம்பைக் காட்டும்படி தவளைராஜா கேட்டது.

இளவரசுத் தவளைகள் இரண்டும் பாம்பிடம் சென்று, மீண்டும் ஒருமுறை தங்களைச் சுமந்து காட்டும்படி வேண்டின. அதற்குச் சம்மதித்த வஞ்சகப் பாம்பு அவர்களை மட்டுமில்லாமல், தவளைராஜாவையும் சுமந்து காட்டியது. இதைப் பார்த்த குளத்திலிருந்த மற்ற தவளைகள் எல்லாம் இந்த விஷப் பரிட்சையைத் தவிர்க்குமாறு ராஜாவை வேண்டின. 'பாம்பு எப்போதுமே நமக்கு நட்பாக இருக்க முடியாது. ஒருநாள் இல்லாவிடில் ஒருநாள் நம்மையெல்லாம் அது தின்றுவிடும்' என எச்சரித்தன. ஆனால், அதைக் கேட்ட தவளைராணியோ, 'உங்களையெல்லாம் பாம்பு சவாரிக்கு கூட்டிச் செல்லாததால், பொறாமையினால் இப்படி பேசுகிறீர்கள்' என அலட்சியம் செய்தது.

அன்று முதல், தினமும் இந்தப் பாம்பு சவாரி ஒரு வாடிக்கையாகிப் போனது.

ஒருநாள், அந்தப் பாம்பு மிகவும் தளர்வுற்றதுபோல் காணப்பட்டது. அதைப் பார்த்த தவளைராஜா என்ன விஷயமெனக் கேட்டது.

'இத்தனை நாட்களாக நான் உங்களைச் சுமந்து செல்கிறேன். ஆனால், தின்பதற்குத்தான் ஒன்றுமே கிடைக்கவில்லை. அதனாலேயே நான் மிகவும் களைப்பாகி விட்டேன்' என் பாம்பு பதில் சொன்னது.

'அப்படியா? சாப்பிட உனக்கு என்ன வேண்டும் சொல். தருகிறேன்' என ராஜா அன்புடன் கேட்டது.

'உங்களது ராஜ்ஜியத்தில்தான் கணக்கற்ற தவளைகள் இருக்கின்றனவே. அவற்றுள் ஒருநாளைக்கு ஒன்று கிடைத்தால்கூடப் போதும்' எனப் பணிவாகப் பாம்பு சொன்னது.

இதைக் கேட்ட தவளைராஜா ஒரு கணம் திகைத்துப் போனது. ஆனாலும், தனக்குக் கீழே எத்தனையோ தவளைகள் இருப்பதாலும், ஒரு ஆபத்து என்றால் அவை குளத்தில் குதித்துவிடும் என நினைத்தும், அதற்கு சம்மதித்தது. இப்படியாக, தினம் ஒரு தவளை பாம்புக்குக் கிடைக்கத் தொடங்கியது. விரைவிலேயே தனது பலத்தைத் திரும்பப்பெற்ற அந்த நயவஞ்சகப் பாம்பு கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் குளத்திலிருந்த அத்தனைத் தவளைகளையும் விழுங்கிவிட்டது.

வேறு தவளைகள் குளத்தில் இல்லாததாலும், தினம் தவளைகளைத் தின்று பழகிவிட்டதாலும் தைரியமடைந்த பாம்பு, இளவரசுத் தவளைகளையும், தவளை ராஜாவையும் தின்று, இறுதியில் தவளைராணியையும் விட்டுவைக்காமல் விழுங்கிவிட்டது.

இப்போது அந்தக் குளத்தில் தவளைகளே இல்லை. குளத்திலிருந்து வந்துகொண்டிருந்த தவளைகளின் ஆரவாரக் கூச்சல்களும் இல்லை!

"கூடாநட்பு கோடி நஷ்டம்" என்பது இக்கதையின் நீதி!

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு

அகநட்பு ஒரீஇ விடல். [திருக்குறள் 630]

[பகைவர் நட்பாகப் பழகுவதுபோல் காலம் வரும்போது, அவரோடு முகத்தளவில் நட்புச்செய்து, மனத்தால் அந்த நட்பை நீக்கியிருத்தல் வேண்டும்.]

நன்றி : Dr . சங்கர் குமார் வட கரோலினா USA

Leave a Reply